I LOVE TAMIL


Saturday, November 26, 2016

சிறப்பு வாய்ந்த மகா பிரதோஷம்!

பிரதோஷங்களில் சிறந்தது சனி பிரதோஷம். அன்று பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினால் 5 ஆண்டு தினமும் சிவாலயம் சென்று வழிபாடு நடத்திய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை! இம்மாதம் 26-ஆம் தேதி வரும் மகா பிரதோஷத்துக்கு மற்றொரு சிறப்பு உண்டு. கார்த்திகை மாதம் சனிக்கிழமை, திரயோதசி திதியில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டார் என்பதால் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் சனிக்கிழமையில் திரயோதசி திதி வருவதால் இந்த மகா பிரதோஷம் மிகவும் சிறப்புப் பெற்றது. 
பிரதோஷங்களில் 20 வகைகள் உள்ளன. அந்நாள்களில் நடத்தப்படும் வழிபாடுகள் அதன் பலன்கள்:

1. சோமவார பிரதோஷம்: திங்கள்கிழமையும் திரயோதசி திதியும் வரும் நாள் சோமவார பிரதோஷம். அன்று சிவ வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பு. குறிப்பாக ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் துயரங்கள் விலகும். 

2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான சுக்லபட்ச திரயோதசி திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு சிறப்பு. பறவையோடு தொடர்புள்ள லிங்கங்கள் உள்ள ஊர்களில் வழிபாடு நடத்துவது பலமடங்கு பலனைத் தரும். 

3.  மாதப் பிரதோஷம்: பெளர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்: திரயோதசி திதி வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும்.

6. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும்.

7. தீபப் பிரதோஷம்: திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்து ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்: வானில் "வ' வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே சப்தரிஷி மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். 

9. மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது உத்தமம்.

10. உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில் சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்சர பிரதோஷம் என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ அத்தனை முறை ஓதுங்கள். 

12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.

14. பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால் அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம், தோஷம் நீங்கும்.

15. அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். ஈசன் பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.

16. கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால் கிருஷ்ணர் பிறந்தார். 

18. அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

- எஸ்.சந்திரசேகர்
www.dinamani.com - Published on : 25th November 2016 02:35 PM
 

Friday, September 16, 2016

உயர் ரத்த அழுத்தம் Vs ஆழ்நிலை தியானம்




சில வாழ்வியல் முறை மாற்றங்களினால் (life style changes) ரத்த அழுத்தத்தை மருத்துவமின்றி இயற்கையாகவே கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாத நிலை இவை போன்றவை உங்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் புதிய ஆராய்ச்சியொன்றில் முடிவு என்னவென்றால் ஆழ்நிலை தியானம் செய்வதன் மூலமாகவும் உங்கள் ரத்த அழுத்தத்தை சமன்படுத்தலாம்.
ஆழ்நிலை தியானமா அதென்ன? அது மிகவும் எளிமையானதுதான். சரியாக புரிந்து கொண்டு முறையாக பயிற்சி செய்தால் அதை தினமும் செய்யலாம். ஒரு வாகான இருக்கையில் வசதியான அமர்ந்து கண்களை மூடவும். ஆரம்ப கட்டத்தில் மனம் சஞ்சலமடைந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கும். தினமும் பழக பழக மனம் ஓரிடத்தில் நிலைக்கப் பழகிவிடும். இப்படி தினமும் இருபது நிமிடம் அந்நிலையில் இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தில் தினமும் இரண்டு தடவை அமர்ந்தால் சதா உழைத்துக் கொண்டிருக்கும் உடலுக்கும் எதையாவது யோசித்துக் கொண்டேயிருக்கும் புத்திக்கும் சற்று ஓய்வு கிடைக்கும். அந்நிலையில் டெலொமரேஸ் என்கின்ற நொதியின் உற்பத்தி அதிகரிக்கிறது, அதனால் ரத்த அழுத்தம் மட்டுப்படுகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. ரத்த அழுத்தம் அதிகரிப்பதனால் உண்டாகும் இறப்புக்கள் இதனால் தடுக்கப்படும்.
இதற்கு முன்னால் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தியானத்தின் பலன்களாக மன அழுத்தக் குறைவு, வயிற்று வலி நிவாரணம் என பட்டியல் இட்டுள்ளது. ஆழ்நிலை தியானத்தால் ரத்த அழுத்தமும் குறைகிறது என்ற இந்த சமீபத்திய ஆராய்ச்சியை நடத்தியவர் டாக்டர் ராபர்ட் ஷினைடர்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணம் மன அழுத்தம். தவிர தொடர் மன அழுத்தப் பிரச்னைகளால் இதய நோய்கள் வரவும் வாய்ப்புண்டு. இந்த ஆராய்ச்சியில் உயர் ரத்த அழுத்தமுள்ள 48 கறுப்பின அமெரிக்கர்களை சோதனைக்கு உட்படுத்தினார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதில் சரி பாதி நபர்களுக்கு ஆழ்நிலை தியானம் கற்றுக் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு வாழ்நிலை மாற்றங்கள் மட்டும் அறிவுறுத்தப்பட்டது, அதாவது எடை குறைக்கவும், உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும், உடற்பயிற்சி தவறாமல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பதினாறு வாரங்கள் கழித்து அவர்களை வரவழைத்துச் சோதித்த போது இரண்டு குழுவினருக்கும் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. டெலொமரேஸ் நொதியின் உற்பத்தி பெருகியிருந்தது. இதனால் அவர்களது ஆரோக்கியம் மேம்பட்டிருந்தது. இது குறித்து டாக்டர் ஷினைடர் கூறும்போது, ‘இந்த டெலோமரேஸ் நொதியின் உற்பத்தி அதிகரித்திருப்பதால் ரத்த அழுத்தம் குறைவதுடன், மன அழுத்தம், இதய நோய்கள் எல்லாமே கட்டுக்குள் வந்துவிடும். அவை ஒருவருக்கு வரும் முன் இதைத் தவறாமல் கடைபிடித்து தடுத்துவிடலாம். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் சரியான வாழ்க்கை முறைகளாலும் ஆழ்நிலை தியானத்தின் மூலமாகவும் ஒருவர் நல்ல ஆரோக்கியத்தை அடைந்துவிடலாம்’. அடுத்து அதிக நபர்களைப் பங்குபெற செய்து விரிவாக ஆராய உள்ளேன்என்றார்.
வாழ்க்கை முறை மாற்றங்களால் மட்டுமல்லாமல் ஆழ்நிலை தியானம் செய்வதாலும் ரத்த அழுத்தம் குறைவதுடன் டெலோமரேஸ் உற்பத்தி அதிகரிக்கிறது என்பது இந்த ஆராய்ச்சி மூலம் நிரூபணம் ஆகிவிட்டது. மேலும் தியானத்தின் பலன்கள் சில :
கவனம் அதிகரிக்கும்.
எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்
மன நலம் மேம்படும்
வலியைத் தாங்கும் உறுதி கிடைக்கும்
சக்தி நிலை உயரும்
பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும்
மன அழுத்தம் மறையும்.
வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்
சுவாசம் சீராகும்.
இதயம் பலப்படும்
புத்தி கூர்மையடையும்.
தியானம் மன மற்றும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்று புரிகிறது அல்லவா? தியானம் செய்ய முடிவெடுத்து விட்டீர்கள், ஆனால் எப்படி துவங்குவது, என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கலாம். புத்தகங்கள் படித்து ஓரளவு புரிந்து கொள்ளலாம், குறுந்தகடுகள், காணொலிகள் மூலமும் பயிலலாம். ஆனால் தியான வகுப்புக்குச் சென்று கற்றுக் கொள்வதே நல்லது.
மன அமைதியுடன் மகிழ்ச்சியாக வாழவே நாம் விரும்புவோம். அதற்கு ஆழ்நிலை தியானம் ஒன்றே சிறந்த வழி. எனவே நன்றே செய்க அதை இன்றே செய்க. வாழ்க வளமுடன்!

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2015/dec/16/B2-1241476.html
16th December 2015 12:19 PM

Thursday, September 15, 2016

சுற்றுச்சூழல் துளிகள்: பத்தை விழுங்கிய இருபத்தைந்து!



பூமியில் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளை கணக்கெடுக்கும் ஒரு ஆய்வு, கடந்த, 25 ஆண்டுகளில் மனிதர்களின் செயல்களால், 10 சதவீத இயற்கை காடுகள் அழிந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 'கரன்ட் பயாலஜி' என்ற ஆய்விதழில் வெளியான இந்த ஆய்வின்படி, ஆப்ரிக்காவின் காடுகளில், 14 சதவீதமும், அமேசான் காடுகளில், 30 சதவீதமும் பூண்டோடு அழிக்கப்பட்டு, மனித குடியேற்றம் அல்லது பிற பொருளாதார நடவடிக்கைகள் நடப்பதாக தெரிய வந்துள்ளது. காட்டு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றுவது, சுரங்கத் தொழில், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் கட்டுவது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்களாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் வெளியேற்றப்படும் கார்பன் மாசுபாட்டில், 38 சதவீதத்தை உறிஞ்சும் சக்தி படைத்த அமேசான் காடுகளில் கணிசமான சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் இழப்பு மட்டுமல்ல ஆபத்தும் கூட. அதுமட்டுமல்ல, உலகின் பல்லுயிர் தன்மையும் பலத்த அடிவாங்கியிருக்கிறது. பலவிதமான தாவர இனங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள் போன்றவை இயற்கை அமைப்பிற்கு சமநிலையையும் வளர்ச்சியையும் தரக்கூடியவை. அவற்றில் பலவற்றின் வாழிடங்கள் மனிதர்களால் விழுங்கப்படும்போது இயற்கை நிலை குலையும். 

அடர்ந்த காடுகள் சராசரி மனிதர்களுக்கு எட்டாத தொலைவில் இருப்பதாலேயே, வனமும், வன உயிர்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைப்பது மடத்தனம் என்கின்றனர், இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

Thanks to - www.dinamalar.com - 15.09.2016

Thursday, May 5, 2016

மதிய உணவில்கட்டாயம் மோர்

சொல்கிறார்கள்

மதிய உணவில்கட்டாயம் மோர் இருக்கட்டும்!
கோடையை சமாளிக்க வழி கூறும், இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபா, ஆயுர்வேதா டாக்டர் ரேகா ராவ்: காலையில் எழுந்ததும் பல் துலக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க, உடம்பு கூலாகி, வயிற்றில் இருக்கிற கழிவுகள் வெளியேறும்; உடம்பும் சூடு தணிந்து கூலாகத் துவங்கும். மற்ற சீசனில் நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், கோடையில், 21 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இதனால், உடல் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகாமல் இருக்கும்.இயல்பாகவே உடல் சூடு அதிகமுள்ளவர்கள், மோரில் அரை டீஸ்பூன் வெந்தயத்தை இரவே ஊற வைத்து, காலையில் குடித்தால், வெப்பத்தால் வருகிற வெள்ளைப்படுதல் கூட சரியாகிவிடும்.
ஒரு நாளைக்கு இரண்டு தடவை, 'ஷவர் பாத்' எடுத்தால், மொத்த உடம்பும் கூலாகும். தலைவலி பிரச்னை இருப்பவர்கள், உடம்புக்கு மட்டுமாவது இரு தடவை குளிக்கலாம். லூசான, காட்டன் துணிகளை அணிவது நல்லது. வெயில் காலத்தில் பெர்பியூமை தவிர்த்து, ஜவ்வாது, பன்னீர் மாதிரியான இயற்கை வாசனைப் பொருட்
களுக்கு மாறலாம்.சர்க்கரை போடாத பிரெஷ் ஜூஸ் அல்லது தினம் ஒரு இளநீர் குடிக்கலாம். பாட்டில் டிரிங்ஸ், அசைவ உணவை முடிந்தவரை தவிர்க்கலாம். மசாலாப் பொருட்களுக்கு நாக்கு ஆசைப்பட்டால் மிளகு, சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த சீசனில் மதிய உணவில் கட்டாயம் மோர் இருக்கட்டும். இது, வியர்வையால் இழந்த தாது உப்புக்களை மீட்டுத் தரும். சூட்டினால் வயிற்று வலி வந்தால், சிறிதளவு புளியைக் கரைத்து, அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து குடித்தால் உடனேசரியாகும்.
நம் உடலில் இருக்கிற உப்புக்கள், வெயிலில் வியர்வையாக வெளியேறும் போது, துளைகளை அடைத்துக் கொள்ளும். இதற்கு, சந்தனாதி தைலம், திரிபலா தைலம், ரிங்கமாலாதி தைலம், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகிய நான்கையும் சம அளவு எடுத்து உடம்பு முழுக்கத் தடவி குளித்தால், துளைகள் திறந்து உப்பு வெளியேறும். சருமத்தில் எந்த பிரச்னையும் வராது; இரவில் நன்றாக தூக்கம் வரும்.
சூட்டுக் கொப்புளம், கட்டிகள் வந்தால், கற்றாழையின் சோற்றுப் பகுதியை அதன் மேல் தடவினால், அப்
படியே அமுங்கிவிடும் அல்லது தேங்காய்ப் பாலில் வெள்ளை மிளகு, சீரகம், கசகசா ஊற வைத்து அரைத்து குளிக்கலாம்.இந்தக் குளியல் முறைகளை செய்ய முடியாதவர்கள், தினமும் எழுந்ததும், சின்ன டர்க்கி டவலை நனைத்துப் பிழிந்து, அடிவயிற்றின் மேல், 15 நிமிடங்கள் வைத்திருங்கள். இது, நம் உடம்பின் சூட்டை வெளியே எடுத்துவிடும். அதனால், வெயிலால் வரும் தலைவலி, எரிச்சல், மூலம், அஜீரணம், கட்டிகள் எல்லாம் பக்கத்தில் வராது; வந்தாலும் போய்விடும்.

www.dinamalar.com -  05.May.2016

other links :  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

http://kolipaiyan.blogspot.in/2010/08/15.html








 

Friday, April 15, 2016

செம்பு பாத்திரத்தில் வைத்த நீர் அருந்தலாம்!

செம்பு பாத்திரத்தில் வைத்த நீர் அருந்தலாம்!


வெயிலின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வழிமுறைகளை கூறும், சித்த மருத்துவர் மு.சத்தியவதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர் யாழினி: வாரம் ஒருமுறை, மிதமாக சூடுபடுத்திய நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து குளித்துவர, உடற்சூடும், கண் சூடும் தணியும். எண்ணெய்க் குளியலன்று பகல் உறக்கம் கூடாது; புளிப்பு, பழையது, அசைவம் சாப்பிடக் கூடாது.இரவில், உள்ளங்காலில் பசு நெய் தேய்த்து துாங்குவது, உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பது, தொப்புளில் எண்ணெய் விடுவது, கண்களின் சூட்டை தணிக்கும்.வியர்க்குரு, துர்நாற்றம், சரும பாதிப்பை தவிர்க்க, நலங்குமாவு கைகொடுக்கும். வெட்டிவேர், விளாமிச்சை வேர், 
சந்தன சிராய், கோரைக்கிழங்கு, பூலாங் கிழங்கு, கார்போக அரிசி தலா, 100 கிராமுடன், பச்சைப்பயறு, 500 கிராம் சேர்த்து அரைத்து, சோப்புக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்.கற்றாழை சதையை கை, கால், முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்துக்கு பின் குளிக்க, 'சன் டேன்' பிரச்னை நீங்கும். அதேபோல், புளித்த தயிரை சருமத்தில் பூசினாலும், இழந்த நீர்தன்மையை ஈடுகட்டி, சருமம் பளபளக்கும்.
இதுதவிர, 100 கிராம் நன்னாரி வேரை ஒன்றிரண்டாக இடித்து, 400 மில்லி நீரில் இரவு ஊறவைக்க வேண்டும். காலையில் தண்ணீரை கொதிக்கவிட்டு, 100 மி., ஆக்கவும். சுவைக்கு பனை வெல்லத்தை சேர்த்து பாகுபோல காய்ச்சினால், நன்னாரி மணப்பாகு ரெடி.

இதை தினமும் சிறிதளவு எடுத்து, நீர் கலந்து குடிக்கலாம். நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை இது குணமாக்கும்.
நீராகாரம், கூழ் வகைகள் நல்லது. வெயிலுக்கு உகந்த சிறுதானியங்களை பானை சோறாக வடித்து சாப்பிடலாம்; குக்கர் வேண்டாம். மண் பானை நீர், சீரகம் சேர்த்து கொதிக்கவைத்த நீர், செம்பு பாத்திரத்தில் வைத்த நீர் அருந்தலாம். தாளித்த நீர் மோருடன், ஒரு சிட்டிகை மிளகுத்துாள் சேர்த்து தினமும் அருந்தலாம். ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், சிறிதளவு சுக்குடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சுவைக்கு வெல்லம் சேர்த்து மண் சட்டியில் ஒருநாள் வைத்து, மறுநாள் அதை சிறுக சிறுக குடிக்க, உடற்சூடு தணியும். இரவில் பனஞ்சர்க்கரை சேர்த்த பால் குடிக்கலாம்.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால், அதில் உள்ள அமிலத்தன்மை புண்களை ஏற்படுத்தவோ, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டவோ செய்யலாம். மேலும், அதில் உள்ள பொட்டாசியம், குளூக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல், சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, காலை உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது முற்பகல் வேளையிலோ இளநீர் அருந்தலாம்.

Thanks to - www.dinamalar.com on 15.Apr.2016

Thursday, March 17, 2016

30 - 40 வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும்!

30 - 40 வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும்!
 
சூரிய சக்தியால் இயங்கும், பகலில் ஒளி தரும் விளக்கை குறைந்த செலவில், 50 வீடுகளில் இலவசமாகப் பொருத்தி இருக்கும் செங்கல்பட்டைச் சேர்ந்த பொறியாளர் தாஜுதீன்: தென் அமெரிக்காவைச் சேர்ந்த அல் பெரடோ மோசர் என்பவர், பிரேசிலில் செய்து காட்டிய முறை தான் இது. அதை நான் இணையத்தில் படித்தபோது, 'இது நம்ம நாட்டுக்குத் தான் அவசியத் தேவை. நாம் ஏன் நம் மக்களுக்கு இதைச் செய்யக் கூடாது' என யோசித்தேன்.என் யோசனையை, கேப்லின்பாய்ன்ட் சி.சி.பார்த்திபனிடம் தெரிவித்தேன். அவர், 'செலவைப் பற்றிக் கவலைப்படாதீங்க. நம் மக்கள் இல்லங்கள் வெளிச்சம் பெறட்டும்' என்றதோடு, இதன் முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டார்.முதற்கட்டமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, மஹாராஷ்டிராவில் தாராவி உள்ளிட்ட பகுதிகளில், 50 வீடுகளில் சூரியசக்தி விளக்குகளைப் பொருத்தி இருக்கிறோம்.நாங்கள் பொருத்தியதைப் பார்த்து ஆயிரக்கணக்கானவர்கள், 'எங்கள் வீடுகளுக்கும் அந்த விளக்கைப் பொருத்துங்கள்' என கேட்டிருக்கின்றனர். அதனால், அந்தந்தப் பகுதி இளைஞர்களை ஒருங்கிணைத்து, செய்முறை பயிற்சியை இலவசமாகக் கொடுத்து, 10 ஆயிரம் வீடுகளுக்கு சூரியசக்தி விளக்குகளைப் பொருத்த இருக்கிறோம்.

இந்த சூரியசக்தி விளக்கை தயாரிக்க, 1 லி., குளிர்பான பெட் பாட்டில் தான் முதல் தேவை. அதில் முழு அளவில் தண்ணீரை ஊற்றி, நாங்கள் தரும் பிளீச்சிங் ஏஜன்டை, ௧௦ - ௨௦ மி.லி., சேர்க்க வேண்டும். பாட்டிலை மூடி, கூரை அல்லது ஓட்டு வீட்டின் மேல் ஓட்டைப் போட்டு பாதி பாட்டில் மேலே தெரியும்படி வைத்து, சுற்றிலும் மழைநீர் உள்ளே வராமல் சிமென்ட் போட்டு, 'பேக்' செய்ய வேண்டும்.காலையில், சூரிய ஒளி பட்டதும், 30 - 40 வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும். பென்சால்கோனியம் குளோரைடு, லயரலால் சோலெதொக்ஸிலேட், சோடியம் பை கார்பனேட் போன்ற கெமிக்கல்கள் கலந்த கலவையே, நாங்கள் தரும் பிளீச்சிங் ஏஜன்ட். அதில் சூரிய ஒளி பட்டதும் தண்ணீர், ௫௦௦ மடங்கு வெளிச்சத்தைக் கூட்டிக் காட்டும் தன்மை கொண்டது. ஐந்தாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பாட்டில் மூடியை, 'சீல்' செய்து விடுவதால் தண்ணீர் வற்றாது.மேலும், இரவில் ஒளிரும் சூரிய சக்தி விளக்கு ஒன்று தயாரிக்க, 500 ரூபாய் ஆகிறது. இதற்கான சோலார் பேனல் மட்டுமே, 350 ரூபாய். மத்திய மற்றும் மாநில அரசுகள் சேவை மனப்பான்மையோடு செய்யும் எங்களுக்கு ஒரு பேனல், 20 ரூபாய் அளவில் வழங்கினால், நாங்கள் ஒரு விளக்கை, 100 ரூபாய்க்குள் தயாரித்து இலவசமாக வழங்க முடியும். அதற்கு முயற்சியும் எடுத்து வருகிறோம்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93
Dinamalar - 17.03.2016 - சொல்கிறார்கள்

Friday, March 4, 2016

நல்ல விதைகளை சேர்த்து வைக்க வேண்டும்!

நல்ல விதைகளை சேர்த்து வைக்க வேண்டும்!

சூழலியலாளர் அழகேஸ்வரி: இப்போது அதிகளவில் நோய்கள் தாக்க காரணம் விதைகளே. சமீபத்தில், தமிழக அரசு வழங்கிய விதைகளை ஆர்வமுடன் வாங்கி சென்ற மாடித் தோட்ட ஆர்வலர்கள், பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேளாண் பல்கலைக்கழகம் வழங்கிய அந்த விதைகளுடன், இந்தோ - அமெரிக்க வீரிய விதைகளும் இருந்தது தான், இதற்கு காரணம்.
இந்த விதைகளால் என்ன ஆக போகிறது என, அவ்வளவு மெத்தனமாய் எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வளவு நாட்களாக நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து காய்கறிகளும், ரசாயன உரமிடப்பட்டவை தான்.
அதிலிருந்து மீள்வதற்காக தான், அவரவர் வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் வைக்க ஆரம்பித்தோம். இப்போது அதிலும், மண் அள்ளிப் போட்டிருக்கிறது மறைமுக அரசியல்.
இந்தோ - அமெரிக்க கலப்பின வீரிய விதைகள் என, அரசு வழங்கும் பாக்கெட்டிலேயே எழுதி உள்ளது. அதிலேயே, 'பாய்ஸன்' என, போட்டுள்ளது. இதை ஏன் வேளாண் அலுவலர்கள் கொடுத்தனர் என தெரியவில்லை.
தேவை அதிகம், உற்பத்தி பெருகும், எடை கூடும், நிறைய காய்க்கும் என, 'ஹைபிரிட்' விதைகளை விற்பவர்கள் கூறுகின்றனர். அதற்காக உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளும் கொடுக்கின்றனர். ஆனால், இவை வேண்டாம் என்று தானே, உலகம் முழுவதும் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
நம் பயிரினங்கள் அதிக மழை, அதிக வறட்சி, பூச்சித் தாக்குதல் எல்லாவற்றையும் சமாளிக்கக் கூடியது. அதுமட்டுமின்றி, நம் நாட்டு காய்களுக்கு ஒரு குணம் உள்ளது. மண்ணுக்கேத்த குணம், நிலத்துக்கேத்த குணம் மற்றும் நீரின் குணம் என, அந்தந்தக் குணத்துடன் காய்கறிகள் விளைந்தன.
கலப்பின வீரிய விதைகளில் வளரும் காய்கறிகள், அதே நுண்ணுாட்டச் சத்துடன் வராது. சமீபத்தில், குஜராத்தில் ஒரு கண்காட்சிக்கு போனேன். அங்கே நாட்டு தக்காளி, கத்தரிக்காய் மற்றும் கொத்தமல்லி என, நாட்டுரகம் ஒன்றுமே கிடைக்கவில்லை.வட மாநிலம் முழுக்க மரபணு மாற்றப்பயிர்களே வந்துவிட்டது. இப்போது, ஒரு புடலங்காய் விதை, 20 ரூபாய், வெள்ளரி விதை, 12 ரூபாய் என விற்கின்றனர். 100 கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி போகப் போக, 1 கிலோ, 5,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படும்.ஆனால், இந்த விதையால் உருவாகும் பயிரில் வரும் காய்களில் இருந்து, திரும்ப விதையெடுக்க முடியாது. மீண்டும் விதைக்காக அவர்களிடம் போய் தான் நிற்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் வீடு, பணம், சொத்து சேர்த்து வைக்கின்றனரோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல விதைகளை சேர்த்து வைக்க வேண்டும். நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அப்போது தான் விதை பரவலாக்கம் இருக்கும்.

Thank - www.dinamalar.com - 04.03.2016 - Chennai Editon - Solkirakal