I LOVE TAMIL


Monday, October 26, 2009

நாட்டுப்பற்று எங்கே?

விகடன் பொக்கிஷம்


ந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு காலத்தில் மாஸ்கோதான் வழிபடும் கோயி லாக விளங்கியது. ஸ்டாலின்தான் அவர்கள் தலைவணங்கி வந்த கடவுள். புரட்சி, வர்க்கப் போர், முதலாளித்துவ ஒழிப்பு, ரத்தக்களறி ஆகிய வார்த்தைகள் அவர்களு டைய மூலமந்திரங்களாக விளங்கின.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு சீனாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமலுக்கு வந்தது. உடனே பீகிங் நகரை மாஸ்கோவுடன் தங்கள் இரண்டாவது கோயிலாகச் சேர்த்துக்கொண்டனர். மாஸேதுங் மற்றொரு கடவுளானார்.
திடீரென்று கம்யூனிஸ்டு சீனா, இந்திய எல்லையில் ஊடுருவி பன்னிரண்டாயிரம் சதுர மைல்களைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டுவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக் காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாட்டில் அதற்கிருந்த சிறிதளவு ஆதரவை யும்கூட இழக்க நேர்ந்தது. கேரளத்தில் நடைபெற்ற மறு தேர்தலிலும் சரி, நாட்டின் பொதுத் தேர்தலிலும் சரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அடியோடு குடை சாய்ந்தது.
''இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதெப்படி?'' என்பதைச் சென்ற வாரம் ஹைதராபாத்தில் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் யோசிக்க லாயிற்று. சீனா பற்றி மிக நாசூக்கான வகையில் ஒரு தீர்மானம் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பைப் பெரிதுபடுத்தாமலும், அதே சமயத்தில் இந்திய அரசாங்கத்தின் 'சீன'க் கொள்கையை ஆதரித்தும் அத்தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. ஆனால், 'சீனா பலாத்காரமாக இந்திய மண்ணை ஆக்கிரமித்துள்ளது அநியாயம்' என்று கண்டித்து ஒரு வார்த்தைகூடக் காணப்படவில்லை.
''ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பகுதியிலிருந்து சீனப் படைகள் பின் வாங்கி, எல்லையில் ஒரு ராணுவ சூன்யமான பிரதேசம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மேலும் சம்பவங்கள் நடைபெறாமலிருக்கும். இதற்கு ஒப்புக் கொண்டால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும்'' என்ற இந்தியப் பிரதமரின் கோரிக்கைக்கு சீனா இணங்க வேண்டுமென்று தீர்மானம் வற்புறுத்தாதது ஏன்? நாட்டின் பாதுகாப்பைவிட, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சீனாவின் நல்லெண்ணம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.

'நம் எல்லை எதுவோ அது நமக்கே சொந்தம். அதை விட்டுக் கொடுக்க மாட் டோம்' என்று புதிர் போடுகிறார் கம்யூனிஸ்டு தலைவர் டாங்கே. ஆனால், எது நம் நாட்டின் எல்லை என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை, சீனப் படங்களில் குறிப்பிட்டுள்ள எல்லையைத்தான் சொல்லுகிறாரோ?

Thanks to : www.vikatan.com - 28.10.2009

Thursday, October 22, 2009

விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?


லேனாவின் ஒரு பக்கக் கட்டுரை
  
பொறுமை என்பது இயலாமையின் மறுவடிவமே. “நான் நன்றாக இல்லை; இவன் மட்டும் நன்றாக இருக்கிறானே; நான் இப்படி வீணாய்ப் போனேனே!’ என்கிற சிந்தனைக் கோணத்தில் உள்ள பொறாமை உணர்வு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அத்துணை ஆண் மக்களும் செல்வ நிலையில் ஒரே மாதிரியாக இல்லை. இவர்களுள் வளர்ந்து உயர்ந்து வாழ்பவர்கள் மூவர் என்றால், மூவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தது; நல்ல மாமனார் வீடு வாய்த்தது; அவர்கள் கைதூக்கி விட்டார்கள்; இவர்கள பிடித்துக் கொண்டார்கள் என்று நான்காவது மகனோ ஐந்தாவது மகனோ வயிறு எரியலாம்; நாம் தோற்றதற்கான - வளராததற்கான வியாக்யானங்களும் சொல்லலாம்.
ஆனால் நல்ல வாய்ப்புகள் (மாமனார் வீட்டினரால்) கிடைத்தும் அவற்றை நழுவ விட்டுவிட்டு, நல்லுறவைக் கெடுத்துக் கொண்டு தோல்வியை அணைத்துக் கொண்ட மாப்பிள்ளைகளும் உண்டு.
அதே நேரத்தில், எவரது துணையும் ஆதரவும் உதவியும் பக்க பலமும் இன்றி சுயமாக உழைத்து, போராடி முன்னேறிய தனிமகன்களும் உண்டல்லவா? களங்களைக் காரணங்களாக்குகிறவர்கள் மேல் இரண்டு பாராக்களுக்கும் நமக்கு என்ன சமாதானம் சொல்லிவிடமுடியும் - முயற்சியின்மையைத் தவிர? ஆக, அதிர்ஷ்டம் வாய்த்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் ஒருவிதத் திறமையும் முயற்சியும் தேவைப்படுகின்றன.
பல்லக்கில் பயணிக்கிறவனுக்கு அரச குடும்பத்தில் பிறந்த அதிர்ஷ்டம் வாய்த்து இருக்கலாம். ஆனால் அதைத் தூக்க நேருகிறவன் பொறாமைப்பட்டுச் சாகாமல், நானும் ஒரு நாள் பல்லக்கில் பயணிப்பேன் என்று எண்ணி ஏன் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை? இந்த முயற்சியில் உண்மையும் நேர்மையும் இருந்தால் குறைந்த பட்சம் பல்லக்குத் தூக்குகிற வேலையை விட்டுவிட்டு, ஒரு குதிரையிலாவது பல்லக்கிற்கு இணையான உயரத்தில் பயணிக்கலாமே! எல்லாத் திறமைகளும் இருந்தும் வீணாய்ப் போகிறவர்கள் உண்டு. ஏன்? நேர்மை இல்லை; செயல்களைவிட வாய்ப்பேச்சு அதிகம்; உழைப்பு இல்லை. சரியான களங்களில் சரியான நேரத்தில் விதைகளை விதைக்காமல் நம் நிலத்தில் விளைச்சல் இல்லையே என்று ஏங்குபவர்கள் இனியாவது மனமாற்றம் பெறுவார்களா?


Thanks to : www.tamilvanan.com - 18.09.2009



Monday, October 19, 2009

உணவுப் பற்றாக்குறை - காத்திருக்கும் ஆபத்து!

உலகம் வெப்பமயமாகி வரும் சூழல் காரணமாக ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்கள், விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகின்றன.

இதன் காரணமாக ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் வரலாறு காணாத மழை வெள்ளம் என மக்களை அச்சுறுத்தி வருகிறது இயற்கை.

இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக, விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. இதனால் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போதிய மழை பெய்யாத காரணத்தால், உணவு தானியங்களின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே, உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விளைநிலங்களுக்குப் போதிய பாசன நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர் வள கமிஷன் பரிசீலித்து வருவதாக அண்மையில் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். இரண்டு அல்லது மூன்று ஆறுகளை இணைப்பது சாத்தியம் என்றும் அது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில் வெள்ளச்சேதம் தடுக்கப்படுவதுடன், வேளாண் பயிர்களுக்குக் குறைவின்றி பாசன நீர் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என நம்பலாம்.

இந்நிலையில், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும், சீனாவும் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய 2050-ம் ஆண்டில் வேளாண் துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எப்ஏஓ) தெரிவித்திருக்கிறது.

இத்தாலியின் தலைநகர் ரோமில் அண்மையில் நடைபெற்ற எப்ஏஓ உயர்நிலைக் கூட்டத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்து வரும் மக்கள்தொகையால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், எனவே அதற்கு ஏற்ப வேளாண் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், அதற்காக இப்போதே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்காக வேளாண் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலீடுகளை அதிகரிப்பது அவசியம் என்றும், அதற்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் உள்நாட்டில் விவசாயிகளை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான நவீன தொழில்நுட்பங்களின் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம்.

ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்ற கேள்வி வரும்போது, சாதகமான பதிலைச் சொல்ல முடிவதில்லை.

பிகார் மாநிலத்தின் கயா, சீதாமாரி ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்திருப்பதாக எழுந்துள்ள புகார்களைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது பாதகமான பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக, நீரில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட உணவு தானியப் பயிர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்துவிட்டன.

இதனால் உற்பத்தி பெருமளவில் குறையும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, உணவுப் பற்றாக்குறை அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அரசு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருள்களைச் சேதமின்றிப் பாதுகாத்து மக்களுக்கு விநியோகம் செய்ய முனைப்புக் காட்ட வேண்டும்.

வேளாண் உற்பத்திக்குத் தேவையான மின்சாரம், இடுபொருள்களைத் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்கி, தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை
அதிகரிக்க அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Thanks to : www.dinamani.com - 16.10.2009

Saturday, September 26, 2009

இயற்கை வேளாண்மையில் உற்பத்தியான பழைய வெள்ளைப் பொன்னி விற்பனைக்கு தயார்!


வேலூர், செப். 22: ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளைப் பொன்னி அரிசி விற்பனைக்கு உள்ளதாக இந்திய அரசின் சேவை அமைப்பான இயற்கை வேளாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதன் ஆலோசகர் கோ. புருஷோத்தமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்கள் பலவித நோய்களால் குறிப்பாக நீரிழிவு, புற்று நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இவற்றுள் மூலகாரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுதான்.

அரிசி, காய்கறிகள், பழங்கள் முதலியன ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இட்டு பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுள் பூச்சி மருந்துகள் தங்கி உணவுப் பொருள் நஞ்சாகின்றன என்று 1980-ம் ஆண்டிலேயே உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவித்தனர்.

இதன்பின் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து இடாமல் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்து மக்களுக்கு அளிக்க வேண்டுமென திட்டமிட்டு செயல்பட தொடங்கியுள்ளன.

இந் நிலையில் வேலூரில் செயல்பட்டு வரும் இயற்கை வேளாண்மை இயக்கம், ஜவ்வாது மலை கிராமங்களில் இயற்கை முறையில் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து இடாமல் மலை வாழை, சாமை, மா, பலா, சிறு தானியங்கள் மற்றும் அரிசி உற்பத்தியை உழவர்கள் மூலம் மேற்கொண்டுள்ளது. இதை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக இயற்கையில் விளைந்த, நஞ்சு இல்லாத பழைய வெள்ளைப் பொன்னி அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிசி சமைத்த மறுநாள் வரை சாதம் கெடாமல் உள்ளது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்ண ஏற்ற அரிசியான இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

இந்த அரிசியை வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

முகவரி: கோ. புருஷோத்தமன், இயற்கை வேளாண்மை இயக்கம், 15, மூன்றாவது நெடுஞ்சாலை, அண்ணா நகர் மேற்கு, வேலூர் (தொலைபேசி எண்: 0416-2234898, மொபைல்: 9894784863).

Thanks to : www.dinamani.com - 23 Sep 2009

ஏன் முடியாது?


சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் தடை செய்யப்பட்டு 40 தினங்களாகிவிட்டன. மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் நீலகிரி மாவட்டம்தான் தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. சுப்ரியா சாஹு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது பிளாஸ்டிக்கின் கோரப் பிடியிலிருந்து சுற்றுலாத் தலமான ஊட்டியை முற்றிலுமாக விடுவித்து, தமிழகத்துக்கே அவர் வழிகாட்டினார் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

சென்னையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. உலக அளவில் எடுத்துக்கொண்டால் நூறாயிரம் கோடி டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் டன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அடுத்த சில நிமிடங்களிலோ, மணித்துளிகளிலோ குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் என்பது தெளிவு.

சென்னையை எடுத்துக்கொண்டால், மாநகரத்தின் மொத்த கழிவுப் பொருள்களில் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் குப்பை பிளாஸ்டிக் பைகள். சட்டப்படி, 20 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளைத் தயாரிப்பதேகூட குற்றம். ஆனால், இந்தச் சட்டத்தை யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. நடைமுறைப்படுத்துவதாகவும் தெரியவில்லை.

ஒரு பலசரக்குக் கடையிலோ, காய்கறிக் கடையிலோ, வெற்றிலை பாக்குக் கடையிலோ இதுபோன்ற 20 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தரப்பட்டால், பொதுமக்கள் யாரிடம் போய் புகார் செய்வது என்று யாருக்காவது தெரியுமா? அந்தப் புகாரை காவல்துறை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. அரசாவது இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா, மக்களுக்குத் தெளிவான வழிமுறைகளை முன்வைக்கிறதா என்றால் கிடையாது.

பெட்ரோலியக் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் பல உப பொருள்களில் ஒன்றுதான் பிளாஸ்டிக் என்பதுகூட நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். இந்த பிளாஸ்டிக் கண்டுபிடித்தபோது, மனிதன் இயற்கையை வென்றுவிட்டான் என்றும், பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டதால் இயற்கை நமக்கு அளிக்கும் தாதுப் பொருள்களான இரும்பு, செம்பு, தகரம், அலுமினியம் போன்றவை மேலும் பல காலத்துக்குக் கிடைக்கும் என்றும் மனித இனமே பெருமைப்பட்டது. சணலுக்கும் காகிதப் பைகளுக்கும் வேலை இல்லாமல் போவதால், காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படும் என்று மகிழ்ந்தவர்களும் ஏராளம்.

இந்த மகிழ்ச்சி எல்லாம் அரை நூற்றாண்டு காலத்தில் மறைந்து, பிளாஸ்டிக் மனித இனத்துக்கு மட்டுமன்றி, உலகில் வாழும் உயிரினங்களுக்கும் ஏன் உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இறைவனின் படைப்பில் உலகிலுள்ள அத்தனை பொருள்களுமே மண்ணில் மக்கிவிடும் தன்மையன. அதனால் கழிவுகள் மலைபோலக் குவிந்துவிடாமல் உலகம் காப்பாற்றப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்கள் மக்கும் தன்மை இல்லாதவையாய் இருப்பதுடன், நிலத்தடி நீர் முறையாகச் சேகரிக்கப்பட முடியாமல் தடுக்கவும் செய்கின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்குக் குறைந்தது 1000 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இந்த பிளாஸ்டிக் எரிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் வாயு புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது எனகிறார்கள்.

பிளாஸ்டிக்கால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான். நீர்நிலைகள், கழிவுநீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் என்று எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பிளாஸ்டிக்கினால், உலகம் முழுவதுமே பாலைவனமாக மாறிவிடும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகளே எச்சரிக்கை விடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதுடன் பலரும் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தில்லி, சண்டிகர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உதகமண்டலத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு முழுமூச்சாக பிளாஸ்டிக் தவிர்ப்பு மக்கள் இயக்கமாக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றமேகூட 60 மைக்ரானுக்கும் கீழேயுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைந்திருக்கிறது.

பிளாஸ்டிக்கை முழுமையாகத் தவிர்த்து விடுவதோ தடை செய்வதோ சாத்தியமானதல்ல. மனித இனத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே இன்னும் பல பொருள்கள் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், கழிவுநீர் ஓடைகளை அடைக்காமல், கண்ட இடங்களில் வீசி எறியப்பட்டு நிலத்தடி நீருக்குத் தடையாக இருக்காமல், கடலில் கலந்துவிடாமல் பாதுகாக்க முடியும். மக்கள் மனது வைத்தால், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிமைப்படுத்தி நகராட்சி அமைப்புகளுக்கு உதவ முடியும்.

இந்த விழிப்புணர்வை அரசுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நமக்கும் சமுதாயக் கடமை இருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் முயன்றால்... ஏன் முடியாது?

Thanks to : www.dinamani.com - 25 Sep 2009

Wednesday, September 2, 2009

தண்ணீர்... தண்ணீர்!


பருவமழை பொய்ப்பதால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம். அடுத்து உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய

பிரச்னை குடிநீர். கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

நோக்கி தமிழகம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 92,000 கிராமங்களில் 3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நிலைமை 160 பேரூராட்சிகளிலும் 52 நகராட்சிகளிலும் உள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் கிராமப்புற மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவதும், அதிகாரிகளை முற்றுகையிடுவதும் அதிக எண்ணிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன.

நாளுக்கு நாள் இதன்பிடி கிராமப்புற மக்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக மாறிக்கொண்டிருக்கிறது.

நகராட்சி, மாநகராட்சிகளில் இத்தகைய குடிநீர்ப் போராட்டம் நடந்தால், இந்தப் போராட்டத்துக்கு அரசியல் மற்றும் அதிகார ஆதரவு கிடைக்கும். ஏனென்றால், இதைக் காரணம் காட்டி இரண்டு லாரிகளில் தண்ணீர் விநியோகம் என்று சொல்லி, ஒரு லாரியை

ஓட்டல்களுக்குத் திருப்பிவிட்டு நாள்தோறும் கணிசமான தொகையைப் பார்க்க முடியும். ஆனால் கிராம மக்களுக்காக குடிநீர் விநியோகம் என்பதை பேரூராட்சிகளால் செய்ய முடியாதே!

மேலும், கிராம மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.

அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடிநீர்க் கிணற்றிலிருந்து தண்ணீரை மேனிலைத்தொட்டிக்கு ஏற்றி, விநியோகம் செய்யப்படுகிறதே தவிர, இவை

பல இடங்களில் சுத்திகரிக்கப்படுவதுகூட இல்லை. ஆனால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. கிணறுகள் வற்றிவிட்டன.

தமிழக அரசின் கொள்கைப்படி, ஒரு தனிமனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு கிராமத்தில் 40 லிட்டர், பேரூராட்சியில் 70 லிட்டர், நகராட்சியில் 90 லிட்டர், மாநகராட்சியில் 135 லிட்டர். இத்தகைய மாறுபட்ட அளவீட்டு முறையே அநியாயமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் குடிநீர்த் தேவை என்னவோ ஒரே அளவுதான். நகர மக்கள் குளிக்க, துணி துவைக்க, தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச, கழிவறைக்குப் பயன்படுத்த என்று எல்லா பயன்

பாட்டுக்கும் சேர்த்துத்தான் மாநகராட்சி மக்களுக்கு அதிகமான அளவும், கிராமத்து மனிதனுக்குக் குறைந்த அளவும் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் கிராமத்து மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த

பட்சத் தேவைகூடப் பூர்த்தியாகவில்லை.

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி வழங்கும் குடிநீரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிப்பதற்குப் பயன்படுத்துவதே இல்லை. இவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் கேன்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். உள்ளாட்சி விநியோகம்

செய்யும் பெருமளவு குடிநீர், குளியல் மற்றும் நவீன கழிவறைக்கே செலவிடப்படுகிறது என்பது மற்றொரு கசப்பான உண்மை.

அண்மையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய ஆய்வு, நீர்க் கசிவுகளும் குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் நீர்த் திருட்டும் மிக அதிகமாக இருப்பதால்தான் மக்களுக்குத் திட்டமிட்ட அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறது. நீர்த் திருட்டு

இழப்பும்கூட, இத்திட்டத்தில் பயன்பெறும் வழியோர கிராமங்களின் தலையில் விழுகிறது.

கல்வியைத் தத்தெடுத்து வளர்க்கும் அரசியல்வாதிகள், குடிநீர் கேன் விநியோகத்தையும், அதற்கான ஆலைகளையும் தத்தெடுத்து சேவை செய்கிறார்கள். இவர்கள் உள்ளாட்சி விநியோகிக்கும் நீரை அப்படியே கேன்களில் பிடித்து, "பியூர் வாட்டர்' என்ற பெயரில்

அடைத்து விற்கிறார்கள். "பியூரிபைடு ட்ரிங்கிங் வாட்டர்' என்று லேபிள் ஒட்டினால் சட்டப்படி குற்றம். ஆனால் "பியூர் வாட்டர்' என்பது திருட்டுக் குடிநீராக இருந்தாலும் தண்டனை இல்லை.

இதில் வேடிக்கையானதும் வேதனையானதும் என்னவென்றால், ஏரிகளையும் குளங்களையும் அழித்த நகர, மாநகரங்கள், தங்களுக்குத் தேவையான குடிநீரை, உலகத்தில் மழையே பெய்யாவிட்டாலும்கூட தங்களுக்கு மட்டும் கிடைக்கும்படி செய்துகொள்ள முடிகி

றது. ஏனென்றால், ஆட்சியாளர்களின் இருப்பிடமாக நகரம் இருக்கிறது. ஆனால் கிராம மக்கள் அப்படியல்ல. அவர்களது ஏரி மற்றும் நிலத்தடி நீரை அண்டை நகரங்கள் உறிஞ்சுவதால்தான் அவர்கள் கிணறு வற்றிப்போகிறது. அதனால்தான் அவர்கள் தாகத்துக்குத் தண்ணீர் இன்றித் தவிக்கிறார்கள்.

தமிழக அரசு குடிநீர்ப் பிரச்னைக்காக மொத்தம் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ. 21 கோடி வழங்கியுள்ளது. குறைந்த பட்சம், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில்

மட்டுமாவது நேர்மையாகவும் முறைகேடுகளால் நிதி ஒதுக்கீடு காணாமல் போகாதபடியும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகர மக்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வதைச் சற்றே குறைத்துக்கொண்டு, கிராமங்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.

ஒரு லிட்டர் குடிநீரை ஒரு ரூபாய்க்கு வாங்கும் சக்தி நகர மக்களிடம் இருக்கலாம். கிராம மக்களிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்குகிற அளவுக்குத்தானே கிராமப்புறப் பொருளாதாரம் இருக்கிறது!

Thanks : www.dinamani.com on 02 Sep 2009

ஊழலின் உறைவிடம்!

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôர் திடீர் சோதனை நடத்தி, ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது ரூ.1 லட்சம் வரை கணக்கில் வராத தொகையைக் கைப்பற்றினர். அதாவது ஒரு நாள் சராசரி "மாமூல்' அளவு இது!

அரக்கோணத்தில் ரூ. 1.90 லட்சம் பிடிபட்டதுடன், அந்த அலுவலகத்தின் இணை சார்-பதிவாளர் தன் சொந்தச் செலவில் 7 பேரை தினக்கூலிக்கு பணியமர்த்தியிருக்கிறார் என்றால், கையூட்டு எந்த அளவுக்குக் கிடைக்கிறது என்பது வெளிப்படை.
இப்படி திடீர் சோதனைகளை முடுக்கி விட்ட தமிழக அரசையும், தொடர்புடைய அதிகாரிகளையும் பாராட்டத்தான் வேண்டும். அதேநேரத்தில், இவர்கள் மீது உண்மையாகவே நடவடிக்கை எடுத்து, தண்டிக்கப்பட்டால்தான், இந்த அலுவலகங்களில் லஞ்சம் ஓரளவு கட்டுப்படும். இல்லாவிட்டால் இந்த நடவடிக்கைகள் வெறும் விளம்பரத்துக்காக என்பதாய் பிசுபிசுத்துப் போய்விடும்.
இச்சோதனைகளின் விளைவாக, எல்லா கட்டணங்களையும் வங்கி வரைவோலையாகக் கொண்டு வாருங்கள் என்று, ஏதோ பணத்தை கையால் தொடுவதற்கே கூச்சப்படுவதைப்போல, பத்திரப் பதிவகங்களில் தற்போது சொல்லப்படுகிறது. பிரச்னை, கட்டணங்கள் ரொக்கமா அல்லது வரைவோலையா என்பதல்ல. கையூட்டு வாங்குகிறார்களா இல்லையா என்பதுதான்.
பத்திரப் பதிவகங்களில் இந்த அளவுக்கு ஊழல் நடப்பதற்குக் காரணம், நில விற்பனையைப் பதிவு செய்யவும், நில உரிமையாளர் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கும், நிலத்தின் மதிப்பைக் குறைத்துப் பதிவு செய்து, பத்திரச் செலவைக் குறைக்கவும்தான். இந்திய மொத்த வருவாயில் (ஜிடிபி) தற்போது ரியல் எஸ்டேட் வணிகத்தின் பங்கு 10 சதவீதத்துக்கும் மேல். ஆகவே, பத்திரப் பதிவுகளுக்கு கையூட்டும் ஊழலும் மோசடிகளும் அதிகமாகிவிட்டன. கருப்புப் பணத்தைக் கையில் வைத்திருப்போரின் முதல் வேலை நிலம் வாங்குவதுதான். இருந்தும், நியாயமான ஆவணங்களைப் பதிவு செய்யவும் கையூட்டு இல்லாமல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு சீர்கேடான நிலைமை பத்திரப் பதிவகங்களில் இருக்கிறது.
2004-ம் ஆண்டு உலக வங்கி ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில்தான் சொத்துப் பதிவுக்கான செலவினங்கள் மிக அதிகம். மேலும், நில ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் லஞ்சம் ஆண்டுதோறும் ரூ.123 கோடி என்ற தகவல் நிலஅதிர்வு போன்றதுதான்.
மேலும், நிலமதிப்பைக் குறைத்துப் பதிவு செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு, நாட்டின் மொத்த வருவாயில் 1.3 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 2007-ல் இந்தியாவின் மொத்த உற்பத்தி வருவாய் (ஜிடிபி) 1,21,749 கோடி அமெரிக்க டாலர் என்றால், நிலமதிப்பைக் குறைக்கும் மோசடிகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு 1,582 கோடி அமெரிக்க டாலர்கள்! அரசுக்கு வர வேண்டிய ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வருமானத்தையும் இழந்து, இவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து, கையூட்டும் மக்கள் கொட்ட வேண்டும் என்றால் இந்த நிலைமையை என்னவென்பது?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலிப் பத்திர ஊழல் பல ஆயிரம் கோடி அளவுக்கு நடந்தது. அதில் சிலர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். நியாயமாக, ஒவ்வொரு சார்-பதிவாளருக்கும் இந்தக் குற்றத்தில் பொறுப்பு உண்டு. ஒரு வங்கியின் காசாளர் ஒரு நூறு ரூபாய் கள்ளநோட்டைத் தெரியாமல் வாங்கி, அது கண்டுபிடிக்கப்பட்டால், அதை வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது. அந்த இழப்பை அவர்தான் செலுத்த வேண்டும். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான போலிப் பத்திர ஊழலில் சார்-பதிவாளர்கள் தொடர்பே இல்லாதது போல, கழற்றிவிடப்பட்டார்கள்.
போலிப் பத்திரம் எந்த அளவுக்கு புழக்கத்தில் சென்றுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய, நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் பத்திரங்களை நேரில் கொண்டுவந்து மறுமுத்திரை பெற்றுச் செல்ல அறிவுறுத்தி, அந்த நேரத்தில் போலிப் பத்திரத்தைக் கண்டறிவதுடன் நில ஆவணங்களை கணினியில் ஒழுங்குபடுத்தலாம் என்ற நல்ல ஆலோசனையை அரசு முன்வைத்தபோது, அதை அப்படியே அமுக்கி, நடைமுறைப்படுத்த முடியாதபடி செய்தவர்களும் பதிவுத்துறை அதிகாரிகள்தான். காலைச் சுற்றிய பாம்பு கடித்துவிடும் என்ற அச்சம்!
பத்திரப்பதிவுக்கு வரும் வீடு அல்லது நிலத்தின் வழிகாட்டி மதிப்புக்கும், சந்தை மதிப்புக்கும் பெருத்த வேறுபாடு நிலவுகிறது. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பத்திரப்பதிவு அதிகாரிகளுக்குத் தரப்பட்டிருக்கிறது. அதனாலும் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் ஆகியவை சொத்தின் மதிப்பில் சுமாராக 7.7 சதவீதம் வருவதும்தான் இந்த ஊழல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். இதைச் சீர்செய்யாதவரை இத்துறையில் ஊழலை ஒழிக்கவே முடியாது.
ஆவணங்களை முழுமையாக கணினிமயமாக்குவதுடன், ஒவ்வொரு ஊரின் பெயர், நிலத்தின் புல எண் குறிப்பிட்டாலே, அது யார் பெயரில் உள்ளது, எந்த ஆண்டு கடைசியாக விற்பனைப் பரிமாற்றம் நடந்தது, தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை அனைவரும் பார்க்கும் வெளிப்படைத் தன்மை இருந்தாலே போதுமானது - பதிவுத்துறை ஊழலை 99 சதவீதம் ஒழித்துவிட முடியும்

Thanks : www.dinamani.com on 27 Aug 2009