I LOVE TAMIL


Monday, November 30, 2009

மரணத்தின் 'ஓலகிரி' ஆகாமல் நீலகிரி மாற வழி



அதீத ஆபத்தையும், இழப்பையும் உண்டாக்கியுள்ள, உண்டாக்கி வரும் நிலச்சரிவுகள் எப்படி ஏற்படுகின்றன? என்ற கேள்விக்கு பல விதமான உணர்ச்சிகரமான விடைகள் மிகுந்த ஆத்திரத் துடன் நமக்குக் கிடைத்தாலும், விஞ்ஞானப் பூர்வமான, உணர்வுப் பூர்வமான விடை என்ன? என்பதையும் நாம் அவசியம் பார்க்க வேண்டும்.
பொதுவாக எந்த மலைப் பிரதேசத்திலும், மலைப் பகுதி யின் பரந்த மையப் பகுதிகளில் சரிவு நிகழ்வதே கிடையாது. அதே சமயம் மலையின் சரிவுப் பகுதிகளில் தான் இது அதிகம் நிகழ்கிறது. இதற் கான காரணங்கள் தான் என்னென்ன?முதலாவதாக மலைகளில் மட்டுமே இந்தச் சரிவுகள் நிகழ்வதிலிருந்து நமக்கு ஒரு உண்மை புலப்படும். அதாவது பாறைகளால் உருவாகியுள்ள மலைப் பகுதிகளின் மேல், குறிப்பிட்ட உயரத்தில், ஒரு அடி முதல் 20, 40 அடிகள் வரை என்று மண் மேவியுள்ளது. இது பல நூறு வருடங்களாக இறுகிப் படிந்துள்ளது.இந்நிலையில் மழைக் காலம் துவங்கி மழை விட்டு விட்டோ, தொடர்ந்தோ பெய் யும் போது மழை நீர் உட் புகுந்து, உட்புகுந்து மண் பகுதியை ஆக்கிரமிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு தான் மிக முக்கிய நிகழ்வு.இந்த மழைநீர் சிறிது ஆழம் சென்ற பிறகு தொடர் மழை இல்லை என்றால் மீண்டும் அந்த மண் பகுதி காய்ந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும்.பிறகு சிறிது காலம் கழித்து மழை என்றாலும் கவலை இல்லை.

அப்படி இல்லாமல் தொடர் மழை அதுவும் கனமழை அதுவும், வெயிலே காணாத நிலை என்றால் நிச்சயம் நிலச்சரிவுக்குக் கொண் டாட்டம் தான். எப்படி?15 முதல் 20 அடி உயரத்திலான மண்பகுதிக்குள் மழை நீர் அந்த இடத்தின் மூலமோ பக்கத்து இடங்களின் மூலமோ அடைந்து இந்த அளவு மண் முழுவதுமே ஈரமாக்கப்படும் போது முற்றிலும் இதன் அடிப்பகுதியில் தாங்கும் பாறையின் தொடர்பை இழந்து விடுகிறது. உடனடியாக மரம், செடி, வீடுகளுடன் சரிவை அடைகிறது. இது தவிர்க்க இயலாத ஒன்று.காரணம் மரம், செடி, வளர்க்கும் போதோ, வீடுகள் கட்டும் போதோ அந்த இடத்தின் மண் ஆதிக்க உயரம் என்ன என்பதை யாரும் அறிய முற்படுவதே இல்லை.அவசரம், மேலும் அறியாமை, குருட்டு நம்பிக்கை இதற்கான காரணங்கள். ஆக மழை தொடர்ந்து தாக்கும் போது ஈரமான முழுப் பகுதியும் பாறைகளுடனான தொடர்பை இழந்துவிடுகிறது. சரிகிறது.


நிலைமை இப்படி இருக்க, தற்போதைய சரிவுகளின் தீவிரத்திற்கான மற்ற காரணங் களோ மிக மிக பயமூட்டுவதும், சிந்திக்க வைப்பதுமானது. அது என்ன?அதுதான் 2004க்குப் பிறகான, அதாவது சுனாமி தாக்குதலுக்குப் பிறகான புவிநிலை. அப்போது கடலுக்கடியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப் பும் அதனால் வெளியான 1400 கி.மீ., நீள 200 கி.மீ., அகல 5000 அடி உயர தீவு வடிவான லாவா, கேம்மா, வெளிப்பட் டால் உருவான கடலடித் தீவின் போது தென் ஆசியப் பகுதி முழுவதும் ஏற்பட்ட நிலத்தடி அதிர்வு மறுக்க முடியாத மாபெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்பது உண்மையே.கடந்த பல மாதங்கள் முன், கூட இதே நீலகிரி பகுதியில் வெப்ப வாயும், புகையும், சத்தமும் கூடிய வெடிப்பு ஏற்பட்டு பலமுறை கிலி உண்டாக்கியது நினைவுக்கு வரலாம்.


இதே போல் பல இடங்களிலும் கூட, இன்றைய தேதி வரையிலும் கூடத் தொடரும் நிலநடுக்கம் என்ற செயலால் பூமியின் மேற்பரப்பு முழுவதுமே நடுக்கத்துக்கும் சிறு சிறு அசைவுக்கும் ஆட்பட்டே வருகிறது என்பதே உண்மை. இவ்வகை நடுக்கம் என்பது பாறை மீது படிந்திருக்கும் மண்பகுதியை தளர்த்தவும், மழை நீர் உட்புக எளிமைப் படுத்தவும் உதவுகிறது என்பதும் பேருண்மை.


ஆக இவற்றுடன் மலைப் பகுதிகளில் முக்கியமாக பாறைகளுக்கு வெடி வைத் தல், மழை நேரங்களில் அதிக பாரத்துடனான வாகன ஓட்டம், கட்டுமானப் பொருட் களுடனான சவாரி என்பவையும் சரிவுக்கு சலாம் போடுகின்றன.அதிர்வால் ஏற்பட்ட பாறைச் சரிவை நீக்க மீண்டும் வெடிகளையே வெடிக்கின்றனர் என்பது வேடிக்கை தான்.இந்நிலையில் மழைச் சரிவுகளில் மரங்கள் வளர்ப்பது என்பது நல்லது என்ற கூற்றை விட உயரம் குறைந்த பயிர் களை வளர்ப்பதே சாலச்சிறந் தது.ஏனென்றால் மழைக்காலங் களில் மிகவும் ஆபத்தைச் சந்திக்கப் போகும் சரிவுப் பகுதிகளில் மழை நீருடன் கனமான மரங்களும் சேரும்போது மண்பகுதி அடியோடு, மிகுந்த, பாதிப்போடு, வேகத் தோடு சரியும் என்பதுடன் இதன் விழும் தொலைவும் கூடும் என்பதே நிஜம். அங்கும் புதியசரிவை கனமான பெரிய மரங்கள் உண்டாக்கும்.


தீர்வுகள் தான் என்ன?மலைப்பகுதிகளின் சரிவுப் பகுதிகளில் மழைநீர் நிற்கும் நேரத்தையும் மிகவும் குறைப்பது. அதற்கான சரியான வடிகால் பகுதிகளை அமைப்பது. இதன் மூலம் குறுகிய அளவிலான ஆழத்தை நீர் அடையும் போதே, நிலம் காக்கப்படும்.குறிப்பாக மழைப்பாதைகளின் மேற்புறங்களில் கசிவுநீர் செங்குத்தாக விழாமல் பக்கவாட்டுப்பகுதிகளில் கடத்தி விழ வைப்பது.எந்த வகையிலும் மழைநீரை அதிகம் உட்புறம் எடுத்துச் செல்லும் படியான வகையிலும், ஈரத்தை நிறுத்தி வைக்கும் வகையிலும் இல்லாமல் இருக்க மரம், தாவரம் சாலைச் சரிவுகளில் வளர்ப்பதை தடுப்பது. பாறை மீது மண் இல்லாத நிலை ஏற்படும் வரை சரிவும் நீடிக்கும். அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. கட்டுப்பாடு தேவை ரயில் பாதையை தடை செய்து விஞ்ச் அமைப்பது. தனித்த பாறைகளை அகற்றுவது. சாலைகளை அதிக கனத்துடன் அமைக்காதிருப்பது. மினி பஸ் விடுவது.


மழை சீசன்களில் வாகனத்தைக் குறைப்பது. இடிதாங்கிகளை அமைப்பது, 50 சதுர கி.மீ., கட்டடப்பகுதி என்றால் பெரும்பாலான பகுதி கட்டட அடியில் ஈரத்தை தொடர்ந்து காத்து வருவது ஆபத்தை உண்டாக்கிறது. இதன் மூலம் அதிக வெயிலில் மண் இறுகி மீண்டும் கூடுதல் பலம் பெறும் வாய்ப்பு தடையாகிறது. அடைமழையின் போது மண்ணின் தளர்வு நிலை தடுக்கப்பட வேண்டும். எனவே கட்டுமானத்துக்குத் தடை அவசியம். மலைப்பகுதிகளில் வெடி வெடிப்பதை தடுப்பதன் மூலம் காய்ந்த மண் பகுதியின் இறுக்கம் பாதுகாக்கப்படும். இல்லையேல் தளர்ந்து விடும்.இப்பகுதிகளில் கட்டடம் கட்டும் முன்பாக கட்டடத் திற்கான மொத்தப்பரப்பின் அடித்தளத்திற்காக மண் ஆழத்தையுமே பார்ப்பது என்பது இயலாத காரியம் எனவே சாய்வுப் பகுதிகளை கட்டடம் கட்டும் பகுதியாக அனுமதிக்காமல் இருப்பது.


டன் பாறையை உடைத்தும், அடித்தளமிடல் வேண்டும். தொடர்ந்து வந்த பாதிப்புகளால் சுற்றுலா பயணிகளின் வரவு மிக குறையும் போது பேராசையால் முதலீடு செய்த பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து நட்டமும், ஈ ஓட்டும் நிலையும் தான் ஏற்படும்.முதலீடு விரையமாகும். பெரிய கட்டடங்களின் முதலீட்டுக்கும், பாதுகாப்புக்கும் உறுதியே கூற முடியாது.உறுதியான கட்டடங்களுக்கும், மரங்களுக்கும், மேலிருந்து சரியும் கட்டடம் மற்றும் மரங்கள் இழப்பை ஏற்படுத்துகின்றன.ஓட்டல் பிற தங்குமிட கழிவு நீர் வடிகாலை கசியாத குழாய் மூலம் தூரத்தில் வெளியேற்றுவது அவசியம்.இனி, சிந்தித்து செயல்படுவதின் மூலமே நீலகிரி, "மரணத்தின் ஓலகிரி' ஆகாமல் தடுக்கப்படும்.
- எ.ஆர்.நாகராஜன்,
வானியல், புவியியல்
ஆய்வாளர்.

நன்றி : http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5788 - 30.11.2009


Tuesday, November 24, 2009

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தபால் துறையின் இருப்பிடச் சான்று போதும்

சென்னை, நவ. 23:  ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக, உணவுத் துறை புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி, முகவரிச் சான்றுக்கு அடையாளமாக தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்றைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இருப்பிடச் சான்று வழங்கும் திட்டத்தை தபால் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
  விண்ணப்பத்துடன் ரூ. 250 கட்டணம் செலுத்தினால், தீவிர விசாரணை மற்றும் நேரடி களஆய்வுக்குப் பிறகு நாம் வசிக்கும் முகவரிக்கான சான்று அட்டை வழங்கப்படும்.
  ரேஷன் கார்டுக்கு...  ரேஷன் கார்டு பெறுவதற்கு இந்த இருப்பிடச் சான்றை ஆதாரமாகக் காட்டலாமா? என்ற கருத்து உணவுத் துறையில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
  இந்த நிலையில், தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அட்டையை, ரேஷன் கார்டு பெறுவதற்கான முகவரி ஆதார ஆவணங்களில் ஒன்றாகப் பயன்படுத்தலாம் என உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
  தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அட்டைக்கு விண்ணப்பிக்க நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்றால் போதுமானது.
  வேறு என்னென்ன...  இருப்பிடச் சான்றுக்கு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை, சொந்த வீடாக இருப்பின் அதன் சொத்து வரி ரசீது, மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, தொலைபேசி கட்டணம் செலுத்திய ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், குடிசை மாற்று வாரியம் என்றால் அதன் ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களில் இப்போது தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அடையாள அட்டையும் இணைந்துள்ளது.
  இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ""இருப்பிடச் சான்று இருந்தாலும், பழைய கார்டில் பெயர் நீக்கத்துக்கான சான்று அவசியமாகும். அது இல்லாமல் இருப்பிடச் சான்றை மட்டும் காட்டினால் ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பம் நீக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.


நன்றி : www.dinamani.com - 24 Nov 2009


முதல்​மு​றை​யாக இரவு நேரத்​தில் அக்னி-​2 சோதனை

பல​சூர்,​ நவ. 23: அணு ஆயு​தங்​களை ஏந்​திச் செல்​லும் திற​னு​டன் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்ள அக்னி-​2 ஏவு​க​ணைச் சோதனை முதல் முறை​யாக இரவு நேரத்​தில் திங்​கள்​கி​ழமை நடத்​தப்​பட்​டது.

   ஒ​ரி​சா​வில் பல​சூ​ரில் உள்ள ஏவு​க​ணைத் தளத்​தில் இருந்து திங்​கள்​கி​ழமை இரவு 7.50 மணிக்கு இந்த சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.
   இது குறித்து மத்​திய பாது​காப்பு மற்​றும் மேம்​பாட்டு கழக ​(டிஆர்​டிஓ)​ வட்​டா​ரங்​கள் கூறி​ய​தா​வது:​
    20 மீ. நீள​மும்,​ 17 டன் எடை​யும் கொண்ட இந்த ஏவு​கணை 2 ஆயி​ரம் கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் வகை​யில் உள்​நாட்​டி​லேயே வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு டன் எடை​யுள்ள வெடி​பொ​ருள்​க​ளைத் தாங்​கிச் செல்​லும் திறன் உடை​யது.
    இந்த ஏவு​கணை ஏற்​கெ​னவே ராணு​வத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அக்னி-​2 ஏவு​க​ணையை முழு​மை​யாக செயல்​ப​டுத்​து​வ​தற்​கான வழி​மு​றை​யில் இந்த சோதனை முக்​கி​ய​மான நிகழ்​வா​கும்.
   சோ​தனை வெற்​றி​க​ர​மாக நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது. இதன் செயல்​பா​டு​கள் குறித்த மற்ற விவ​ரங்​கள் ஆரா​யப்​பட்டு வரு​கின்​றன என டிஆர்​டிஓ வட்​டா​ரங்​கள் தெரி​வித்​தன.
   இ​தற்கு முன்​ன​தாக,​ 700 கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் அக்னி-​1 ஏவு​க​ணை​யும்,​ 3,500 கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் அக்னி-​3 ஏவு​க​ணை​யும் சோதனை செய்​யப்​பட்​டுள்​ளன.


நன்றி : http://dinamani.com - 24.11.2009

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.
  இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.
  தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.
  அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.
  2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.
  இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.
  வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.
  நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
  நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.
  தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
  ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.
  திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
  மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.
  திறந்தவெளிக்  கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.
  நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.
  கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.
  தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
  இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.
  இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.
  மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.
  நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.

(கட்டுரையாளர்: மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).   
நன்றி : http://dinamani.com - 24 Nov 2009

ஒளியும் இருளும்!

வரப்போகும் ஆண்டுகளில், இந்தியா முழுவதுமே கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் கொதித்தெழும் சம்பவங்கள் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மின் தட்டுப்பாடு என்பது தனிநபரைப் பாதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தொழிற்சாலைகளையும், விவசாயத்தையும் அல்லவா மிகவும் கடுமையாகப் பாதிக்கப் போகிறது. அதன் தொடர் விளைவாகப் பொருளாதாரம் சீர்குலைந்து, இந்தியாவின் வளர்ச்சி என்பதே தடைபடப் போகிறதே, அதைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தால் எப்படி?

 இன்றைய நிலையில், இந்தியாவின் அதிகபட்ச மின் உற்பத்தித் திறன் ஏறத்தாழ 1,50,000 மெகாவாட். அடுத்த மூன்றே ஆண்டுகளில் நமது தேவை 2,00,000 மெகாவாட்டாக இருக்கும் என்றும், 2020-ல் நமது தேவை 4,00,000 மெகாவாட்டுக்குக் குறையாமல் தேவைப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. நமது அதிகபட்ச உற்பத்தித் திறன் 1,50,000 மெகாவாட் என்றால், அதில் 70 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் தான் உண்மையான உற்பத்தித்திறன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  அரசின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி மற்றும் விநியோகம், அரசு இயந்திரத்தின் மெத்தனத்தையும் சுவீகாரம் செய்து கொண்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நமது மின்வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஒன்றுக்கும் உதவாத பழைய தொழில்நுட்பங்களை இன்னும் கட்டிக்கொண்டு அழுவது. இயந்திரங்களும் பழையன. பராமரிப்போ மிகமிக மோசம். மின் உற்பத்திக்கு ஆகும் செலவில் பாதி, அடிக்கடி நிகழும் மின் தடங்கல்களைச் சரி செய்வதற்குத் தேவைப்படுகிறது. போதாக்குறைக்கு, மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்போ, உலகத் தரத்துடன் ஒப்பிடும்போது மிக மிக அதிகம்.
  நமது மின்வாரியங்கள்தான் திறமையாகச் செயல்படுவதில்லை, ஊழியர்கள் முழுக் கவனத்துடன் பணியாற்றுவதில்லை என்று தனியாருக்கு விநியோகத்தையும், கட்டண வசூலையும் தில்லி போன்ற இடங்களில் கொடுத்துப் பார்த்தபோது, அவர்களும் திறமையாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை. தனியார்வசம் ஒட்டுமொத்த மின்துறையையும் தாரை வார்த்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என்று நினைத்தால், அது பகல்கனவு! 2003-ல் கொண்டு வரப்பட்ட மத்திய மின் சட்டம் பிரச்னையை எந்தவிதத்திலும் சமாளிக்க உதவவில்லை என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே!
  இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே, நமது மின் தேவையைப் பற்றிய கவலை எழுந்தது. அப்போது, டி.டி. கோசாம்பி மற்றும் ஹோமி பாபா என்று இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவால் அடையாளம் காணப்பட்டு, இதைப் பற்றிய திட்டமிடவும் ஈடுபடுத்தப்பட்டனர்.
 பூமத்திய ரேகையை ஒட்டிய, சூரிய ஒளியை மிக அதிகமாகப் பெறும் தட்பவெப்ப நிலையைக் கொண்ட இந்தியா, தனக்கு இயற்கையாக அமைந்திருக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்பது விஞ்ஞானி டி.டி. கோசாம்பியின் வாதமாக இருந்தது. ஆனால், மிக அதிகமான முதலீடுடைய அணுசக்தியைப் பயன்படுத்துவதுதான், நாளைய அதிகரித்த தேவைக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் உகந்தது என்பது ஹோமி பாபாவின் கருத்து. ஹோமி பாபாவின் கருத்துக்குத் தந்த அதே முக்கியத்துவம் டி.டி. கோசாம்பியின் ஆலோசனைக்கும் தரப்பட்டு, இரண்டு முறைகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்தி இருந்தால், இன்றைக்கு நாம் மின்தேவைக்காகப் பயப்பட்டிருக்கத் தேவையில்லை.
 இன்னொரு வேடிக்கை தெரியுமா? நமது மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி அமைச்சகம், 2002 முதல் 2007 வரை நிதிநிலை அறிக்கைகளில் ஆராய்ச்சிக்காகவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும் அளிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் ஆண்டுதோறும் 44 சதவிகிதம் முதல் 76 சதவிகிதத்தைப் பயன்படுத்தாமலே திருப்பி அளித்திருக்கிறது என்கிறது தணிக்கை அதிகாரியின் அறிக்கை. இப்போது, விழித்துக் கொண்டு முழு மூச்சில் சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தியைப் பெருக்கவும், காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி இருக்கிறது, மகிழ்ச்சி!
 இன்னொரு விஷயம். உற்பத்திப் பெருக்கம் எவ்வளவு அவசியமோ, அதே அளவு சிக்கனமும் தேவைதானே. சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் நகரங்களில் உள்ள வியாபார நிறுவனங்கள், விடுதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், ஷாப்பிங் மால் என்கிற பெயரில் வர்த்தக நிறுவனங்கள் இவையெல்லாம் வீணடிக்கும் மின்சாரம் கொஞ்சநஞ்சமா? இவர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலித்தால், அதையும் விற்பனை விலையுடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுவார்கள்.
 வியாபாரத்துக்காக, கொள்ளை லாபத்துக்காக  மின்சாரம் ஒருபுறம் வீணாகிறது. ஆனால், வீட்டு உபயோகத்துக்கும், தொழிற்சாலைகளுக்கும், விவசாயத்துக்கும் தினந்தோறும் மின்வெட்டு அரங்கேறுகிறது. கட்டுப்பாடே இல்லாத சந்தைப் பொருளாதாரத்தின் பின்விளைவுகள் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே அல்லவா சீர்குலைத்து விடும்.
 மின் உற்பத்தியை அதிகரிக்க முடிகிறதோ இல்லையோ, வண்ண வண்ண விளக்குகள், விளம்பரப் பலகைகள், வாடிக்கையாளர்களைக் கவரப் பயன்படுத்தப்படும் அளவுக்கு அதிகமான மின் விரயங்கள் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டே தீர வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்து விடும் என்பது நினைவிலிருக்கட்டும்!


Thanks to : www.dinamani.com -  24 Nov 2009 

Monday, November 16, 2009

அபாயத்தின் அறிகுறி!

வளிமண்டலம் மாசடைந்து புவிவெப்பம் அதிகரிப்பது உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் பாதிக்கிறது என்பது தெரிந்த விஷயம். நிலத்தில் வாழும் உயிரினங்களைவிட மிகஅதிகமாகப் பாதிக்கப்பட இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான் என்பது பெரிய அளவில் ஏன் நம்மைக் கவலைப்பட வைக்கவில்லை என்பது தெரியவில்லை.


அண்மையில் மீன் மற்றும் மீனளம் (ஃபிஷ் அண்ட் ஃபிஷரீஸ்) என்கிற மேலைநாட்டுப் பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம், நம்மைத் திடுக்கிட வைக்கிறது. புவிவெப்பமாதல் காரணமாக பல்லுயிர்பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்தப் பத்திரிகை.

கடல் நீரின் தட்பவெப்பத்தைப் பொறுத்துத்தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்தப் பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்போது, இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும்; இல்லாவிட்டால் அழிந்துவிடும் அபாயம்தான் ஏற்படும்.

குறிப்பாக, பூமத்திய ரேகையையொட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதைத் தொடர்ந்து குளிர்ப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தாக வேண்டும். அப்போதுதான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப் பகுதிகளில் உள்ள குளிரைத் தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பதும் சந்தேகம்தான்.

துருவப் பகுதிகளில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையே குறைவுதான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.

வெப்ப மண்டலங்களிலும், துருவப் பகுதிகளுக்குக் கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவிவெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் என்பதுதான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன் இனங்களுக்குத்தான். குறைந்தது 600 கி.மீ. தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதியில் வாழும் 90% மீன்இனங்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வுக்கட்டுரை.

இந்தப் பிரச்னை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுதான்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால் பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும்.

வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடிப் பேர் தங்களது தினசரி உணவில் மீனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பயமுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், புவிவெப்பமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன் பிடிப்பு குறையக் குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்குத் தொழில்நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப்பொழுதே கடலில் முன்பு போல மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல்மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும்.

இதன் உடனடித் தாக்கம் உணவுப் பஞ்சம். தொடர் விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப் பாதிப்பு. உலக நாடுகள் ஒன்றுகூடி உடனடியாகத் தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


Thanks to : www.dinamani.com - 16 Nov 2009

கரையும் மலைகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தாலும், 40-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்!


அதிக அளவு மழை பெய்திருப்பதை நிலச்சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறினாலும், இதை இயற்கையின் பேரிடர் என்பதைக் காட்டிலும், மானுடத்தின் பிழை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

1994-ல் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில், மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் போதே, இதற்கான காரணங்களையும், இனிவரும் காலங்களில் எத்தகைய அணுகுமுறை மூலம் இதைத் தவிர்க்க முடியும் என்பது குறித்தும், பல்வேறு அமைப்புகள் கருத்துத் தெரிவித்த பிறகும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேறு என்னதான் சொல்ல முடியும்?

நீலகிரியில் நிலச்சரிவு என்பதே 1970-க்குப் பிறகுதான் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது.

நீலகிரியில் உள்ள குன்றுகள் அனைத்துமே முழுக்கமுழுக்கப் பாறைகளால் அமைந்தவை அல்ல. பெரும்பாலான குன்றுகள் கால்பங்கு பாறை, முக்கால் பங்கு மண்ணாக இருப்பவை. சில இடங்களில் பாறைகள் பாதி, மண் பாதி கலந்து நிற்கிறது. அந்தந்தக் குன்றுகளில் உள்ள பாறை, மண் விகிதம் மற்றும் கடல்மட்டத்தின் உயரத்துக்கு ஏற்ப தனக்கான தாவரங்களையும் மரங்களையும் நீலகிரி மலை தனக்குத்தானே வளர்த்து செழித்திருந்தது - திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறும்வரை.

பிரிட்டிஷ் அரசின் அன்றைய கோயமுத்தூர் கவர்னர் ஜான் சலைவன் இந்த மலைக்கு முதலில் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி. மலையின் அழகும், அதன் குளுமையும் பிடித்துப்போனதால், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான கோடை வாசஸ்தலமாக மாற்றினார். சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் அதிகாரிகள் வருவதற்காகவே மலை ரயில் பாதை (இரு தண்டவாளங்களுக்கு இடையே பல்சக்கரங்களுடன் ஒரு தண்டவாளம் இருக்கும் வகையில்) அமைக்கப்பட்டது. கவர்னர் சலைவனின் இந்த ஊடுருவலை மலைவாழ் மக்களான படுகர், தோடா இனத்தவர் எதிர்த்தனர். அந்தப் பழங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதான் தனது விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது.

கோடை வாசஸ்தலம் என்பதோடு, இங்கே தேயிலை பயிரிட முடியும் என்பதையும் கண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக காடுகளை அழித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த மலையின் பாறை - மண் கலப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கிடைத்த இடங்களையெல்லாம் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காகக் காட்டை அழித்தனர்.

1970-களில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்ததால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. எத்தகைய மழையிலும் வேர்களால் மண்ணைப் பிடித்துக் காத்துநின்ற மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு, மழையில் வெறும் மண் கரைந்தது. நீர் ஊறி, ஓதம் தாளாமல் மண்முகடுகள் சரிந்து, மனிதர்கள் இறப்பது வாடிக்கையானது. நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் (பயோ டைவர்சிட்டி) முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.

தேயிலைத் தோட்டங்களுக்காக மலை அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, சுற்றுலாத் தலமாக மாறியதால் பயணிகள் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகரித்தது. இவர்களுக்காக காடுகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்தன. உதகை, குன்னூர் இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 500 விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. சரியான கழிவுநீர் வாய்க்கால்கூட உதகை, குன்னூரில் இல்லை என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.

1994 மரப்பாலம் நிலச்சரிவின் போதே, தொலையுணர் தொழில்நுட்பத்தின் மூலம் மலையின் தன்மையையும், காட்டின் அளவையும் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தொலையுணர் தொழில்நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியுள்ள நமக்கு, நீலகிரி மலைகளின் வகைகளையும், எத்தகைய காடுகள் அங்கே இருந்தால் நிலச்சரிவு ஏற்படாது என்பதையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஆக்கிரமிப்பாலும், காடு அழிப்பாலும் முற்றிலும் மாறிக்கிடக்கும் "ஒத்தக் கல் மண்டூ' என்கிற உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைகளில் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகள் வழியாக மழை நீர் கீழே இறங்குகிறது என்பதைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் நீர் வெளியேற வாய்க்காலும், மண்கரையாமல் இருக்கக் காடுகளும் வளர்க்க முயல வேண்டும்.

பாறையின்றி மண்மேடுகள் மட்டும் இருக்கும் பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை விதிப்பதும், போக்குவரத்து வசதி என்ற பெயரில் நீலகிரியில் புதிய சாலைகள் அமைப்பதைக் கைவிடுவதும்கூடப் பயன்தரும்.

நீலகிரி மலையில் சமவெளியாகப் பரந்து கிடக்கும் புல்வெளிகூட, தன் வேர்களால் அந்த மண்மலையைத் பிடித்துக் காத்து நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான், மலையரசி "கரையாமல்' நிற்பாள்; மனிதரையும் அழ வைக்க மாட்டாள்.

Thanks to : www.dinamani.com - 13 Nov 2009

சிக்கலில் "சிங்காரா' காடுகள்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் முக்கியப் பகுதியான சிங்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிப்புறப் பகுதியாகவும் இந்தப் பகுதி அமைந்துள்ளது.
  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான யானைகள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகச் செல்லும் வழித்தடத்தில் முக்கியப் பகுதியாக சிங்காரா அமைந்துள்ளது.
  676 அரிய வகைத் தாவரங்கள், பூச்சிகள் முதல் யானைகள் வரையிலான 173 அரிய வகை உயிரினங்கள் தங்களது வாழ்வாதாரமாக சிங்காரா வனப்பகுதியை நம்பியுள்ளன.
  உயிரியல் மற்றும் சூழலியல் அடிப்படையில் மிகமுக்கியமான பகுதியாகக் கருதப்படும் சிங்காரா பகுதியில், அணுத்துகள்கள் குறித்த உயர் ஆய்வுகளை மேற்கொள்ள "நியூட்ரினோ' ஆய்வுக்கூடத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அணுசக்தி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 20 நிறுவனங்கள் சார்பாக அணுசக்தித் துறை மூலம் இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  சிங்காரா வனப்பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ. 917 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள, இந்தத் திட்டத்துக்காக அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு 35 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்படும். இதன் வழியாக சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடப் பணிகளுக்காகப் பல ஆயிரம் டன் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்.
  மேலும், இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் அதற்கு நாளொன்றுக்கு 3.42 லட்சம் லிட்டர் தண்ணீரும், 3 மெகாவாட் மின்சாரமும் தேவைப்படும் என திட்டத்தை உருவாக்கியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
  இவை எல்லாம் நிகழ்ந்தால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் பேராபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
  நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
  நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டத்தை எவ்விதச் சிக்கலும் இன்றி நிறைவேற்ற ஒத்துழைப்புக் கோரி தமிழக முதல்வரை அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்தார். ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு வலுவாக உள்ள நிலையில் தமிழக அரசு இதில் எந்த முடிவையும் எடுக்க இயலாது என முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாயின.
  வனப்பகுதி நிலங்களை இந்தத் திட்டத்துக்காக அளிக்க வேண்டும் என அணுசக்தித் துறையின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி கடந்த செப்டம்பரில் தெரிவித்தார்.
  ஆனால், "நியூட்ரினோ' ஆய்வுக்கூடம் அமைக்க சிங்காராவே சிறந்த இடம் என மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் கருத்தை மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
  இது தமிழக அரசு மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  இதேபோல, கால் நூற்றாண்டுக்கு முன்னால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் குந்திப்புழா பகுதியில் நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அணை கட்டுவது உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. பறவைகள் ஆய்வாளர் சலிம் அலி, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் உள்ளிட்ட வல்லுநர்கள் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியை ஆய்வு செய்து, இந்தப் பகுதியில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், இதனை தேசியப் பூங்காவாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அறிக்கை அளித்தனர்.
  இதன் பின்னர் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசு கேரள மாநில அரசை வற்புறுத்தியது. இதையடுத்து, அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
  கால் நூற்றாண்டுக்கு முன்னால், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டத்தை தடுத்த மத்திய அரசு, இன்று தமிழக அரசின் கருத்தையும், மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது ஏன்?
  1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அமைதிப் பள்ளத்தாக்கின் சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறை இன்று சிங்காராவை பாதுகாப்பதில் காணாமல் போனது எப்படி?
  இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணுசக்தித்துறை வளர்ச்சி தேவைதான் என்றாலும், அதற்காக அடிப்படை வாழ்வாதாரமான சுற்றுச்சூழலை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்பதே உண்மை.
  ஆட்சியாளர்களால் அழிக்கப்பட இருந்த அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போதாவது ஆட்சியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து திருந்துவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.



Thanks to : www.dinamani.com - 14 Nov 2009

Friday, November 6, 2009

பயன்படாத பயிர்க் காப்பீடு

பி.எஸ்.எம்.ராவ்
நாட்டின் 100 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி  செய்வதுடன், கிட்டத்தட்ட 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இத்தகைய பெருமைமிகு விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், விவசாயத்தைக் காக்கும் திட்டங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவோ போதுமானதாகவோ இல்லை.   

ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகள் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டன. காரீப் பருவத்தில் பயிரிடப்பட்ட பெருமளவு பயிர்கள் மடிந்தன. நஷ்டமடைந்த விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பித்தனர். பல மாதங்களாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை. முதல்வர் ரோசய்யாவும், வேளாண் அமைச்சரும் பலமுறை கடிதம் எழுதிய பிறகும்கூட எதுவும் நடக்கவில்லை. இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசின் பங்குத் தொகை இன்னும் கிடைக்காததே இதற்குக் காரணம்.   

மத்திய அரசு தர வேண்டிய ரூ.358.58 கோடியால் மட்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துவிடப்போவதில்லை. எனினும், விவசாயிகளின் பிரச்னையில் மத்திய அரசுக்கு உரிய அக்கறையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள இது ஓர் உதாரணமாக அமைந்துவிட்டது.  

ஆந்திர விவசாயிகள் கோரியிருக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகையே ரூ. 806.07 கோடிதான். நஷ்டத்தில் சிறு துரும்புதான் இது. இதற்குக் காரணம் விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீடு என்கிற பாதுகாப்பின்கீழ் வராததுதான்.  

பயிர்க்காப்பீடு செய்தவர்கள்கூட, அவர்களாக முன்வந்து அதைச் செய்யவில்லை. அவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதன் விளைவாக, வேறு வழியில்லாமல் இந்தத் திட்டத்தில் அவர்கள் சேர்ந்தார்கள்.   

நடைமுறையில் சிறு விவசாயிகளும், குத்தகைக்கு விவசாயம் செய்வோரும் வங்கிகள் மூலமாகக் கடன் பெறுவதில்லை. இதனால், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கிறது. அதுவும், தானாக முன்வந்து காப்பீடு செய்வோர் மிகச் சொற்பம்.  

காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிரீமியத் தொகை அதிகமாக இருக்கிறது. பருவத்தையும், பயிரையும் பொறுத்து 2 முதல் 20 சதவீதம் வரை பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. கடன்களுக்கு அரசு வழங்கும் வட்டித் தள்ளுபடியைக் காட்டிலும் இது அதிகமானது என்பது வருந்தத்தக்க விஷயம்.  

நாடு விடுதலையடைந்த காலத்திலேயே பயிர்க்காப்பீட்டின் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். 1947-48-ல் இதுபற்றி ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டுவிதமான காப்பீட்டு மாதிரிகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. பயிர்கள் நாசமாகும்போது, ஒவ்வொரு விவசாயியின் நஷ்டத்தையும் தனித்தனியே கணக்கிட்டு அதன்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முதலாவது மாதிரி. அப்படியில்லாமல், ஒரே மாதிரியான பருவநிலை கொண்ட கிராமம், யூனியன், தாலுகா போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மொத்த நஷ்டத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு தரலாம் என்பது இரண்டாவது மாதிரி.  

ஒவ்வொரு விவசாயியின் தனித்தனி இழப்பீட்டைக் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படும் எனக் கருதப்பட்டது. தவறான நஷ்டக் கணக்கு காட்டப்படலாம், வேறு மாதிரியான முறைகேடுகளும் சாத்தியம் என்பதால், இந்தியாவில் முதலாவது மாதிரி, நடைமுறைக்கு ஒத்துவராது என முடிவு செய்யப்பட்டது.  

இதையடுத்து இரண்டாவது காப்பீட்டு மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களின் ஒப்புதல் கோரி மத்திய அரசு அனுப்பியது. எனினும், இந்தத் திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் காரணம் காட்டி பல மாநிலங்கள் இதை ஏற்க மறுத்தன. 

1965-ம் ஆண்டில் மீண்டும் இதே திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இதே கதைதான். மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டும் வகையில், மறுகாப்பீடு செய்யும் பணியை மத்திய அரசே செய்யும் எனக் கூறியபிறகும், எந்த மாநிலமும் திட்டத்தை ஏற்க முன்வரவில்லை.  

1970-ல் எச்-4 பருத்திக்கு மட்டும் பிரத்யேகமான காப்பீட்டுத் திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியது. அந்தச் சூழலில் 1972-ம் ஆண்டு காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டது. இதனால், ஜிஐசி எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனம் எச்-4 பருத்திக்குக் காப்பீடு வழங்கும் பணியை ஏற்றது. இதன்பிறகு, நிலக்கடலை, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. எனினும், தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1978-79 வரை அமலில் இருந்த இந்தத் திட்டத்தில், ரூ. 3,110 விவசாயிகள் மட்டுமே சேர்ந்திருந்தனர். மொத்தம் வசூலான பிரீமியத் தொகை ரூ. 4.54 லட்சம். காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 37.88 லட்சம். 

இதன் பிறகு, 1979-ல் விவசாயக் கடன் பெறுவோர் கட்டாயமாகப் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் அறிமுகமானது. 1984-85 வரை ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 6.23 லட்சம் விவசாயிகள் சேர்ந்தனர். இந்தத் திட்டத்தில் ரூ.1 கோடியே 97 லட்சம் பிரீமியத் தொகை வசூலானது. ரூ. 1 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.   

ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் புதிய திட்டம் 1985-ம் ஆண்டில் அறிமுகமானது. 1999-வரை இந்தத் திட்டத்தில் 7.62 கோடி விவசாயிகள் சேர்ந்தனர். ரூ. 24 ஆயிரத்து 922 கோடி மதிப்பிலான பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் ரூ. 403 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது. ரூ. 2,365 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.  

இந்த இழப்பீட்டுத் தொகையில் ரூ. 803 கோடியை மாநிலங்களும் மீதியை மத்திய அரசும் வழங்கின. பிரீமியத் தொகையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை மிக அதிகமாக இருந்ததால், பிரீமியத் தொகையை மாற்றியமைக்கத் திட்டக்குழு முடிவு செய்தது.   

இதையடுத்து, 1999-ல் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்கிற புதிய திட்டம் அறிமுகமானது. முன்பிருந்த காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையின் மூன்றில் ஒருபகுதியை காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. புதிய திட்டத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் பங்களிப்பு நீக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதியாகப் பகிர்ந்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  

இதன் பிறகு வேளாண் காப்பீட்டு நிறுவனம் 2002-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பொதுக் காப்பீட்டு நிறுவனம், நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் நபார்டும் சேர்ந்து இந்த அமைப்பை நிறுவின. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதே இதன் பணி.  

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 19 பருவங்கள் முடிந்திருக்கின்றன. இழப்பீடு கோருவதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்துக்கு இதுவரை ரூ.1,762.46 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் ரூ.801.20 கோடி நிலுவையில் உள்ளது. அதேபோல், தமிழகத்துக்கு ரூ.436.5 கோடி இழப்பீடு கிடைத்திருக்கிறது. இன்னும் ரூ.663.82 கோடி வர வேண்டியுள்ளது.  

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த ஆண்டின் இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.663.82 கோடியாக இருக்கிறது.   

இது இந்தியா முழுவதுமான ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். ஆனால் பலன் பெறுவது என்னவோ வெறும் 11 லட்சம் விவசாயிகள் மட்டுமே. மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவு.  

காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடையவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் முழுக் காரணம் அரசின் வணிக ரீதியான அணுகுமுறைதான்.    

தற்போதைய அனுபவத்தின் மூலமாவது, விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். பயிர்கள் மடிந்த பிறகு, மிகத் தாமதமாக இழப்பீடு வழங்குவது நடைமுறைக்கு ஒவ்வாதது.   உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி, தொடர்ந்து பயிரிடுவதற்கான வழியை ஏற்படுத்தித் தரவேண்டும். விவசாயத்தின் உண்மையான பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ கணக்கீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவதால் மட்டும் இந்தச் சிக்கல்கள் தீர்ந்துவிடாது. 
நன்றி : www.dinamani.com - 06.11.2009