சென்னை, நவ. 23: ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக, உணவுத் துறை புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி, முகவரிச் சான்றுக்கு அடையாளமாக தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்றைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பிடச் சான்று வழங்கும் திட்டத்தை தபால் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
விண்ணப்பத்துடன் ரூ. 250 கட்டணம் செலுத்தினால், தீவிர விசாரணை மற்றும் நேரடி களஆய்வுக்குப் பிறகு நாம் வசிக்கும் முகவரிக்கான சான்று அட்டை வழங்கப்படும்.
ரேஷன் கார்டுக்கு... ரேஷன் கார்டு பெறுவதற்கு இந்த இருப்பிடச் சான்றை ஆதாரமாகக் காட்டலாமா? என்ற கருத்து உணவுத் துறையில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அட்டையை, ரேஷன் கார்டு பெறுவதற்கான முகவரி ஆதார ஆவணங்களில் ஒன்றாகப் பயன்படுத்தலாம் என உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அட்டைக்கு விண்ணப்பிக்க நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்றால் போதுமானது.
வேறு என்னென்ன... இருப்பிடச் சான்றுக்கு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை, சொந்த வீடாக இருப்பின் அதன் சொத்து வரி ரசீது, மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, தொலைபேசி கட்டணம் செலுத்திய ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், குடிசை மாற்று வாரியம் என்றால் அதன் ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களில் இப்போது தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அடையாள அட்டையும் இணைந்துள்ளது.
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ""இருப்பிடச் சான்று இருந்தாலும், பழைய கார்டில் பெயர் நீக்கத்துக்கான சான்று அவசியமாகும். அது இல்லாமல் இருப்பிடச் சான்றை மட்டும் காட்டினால் ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பம் நீக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.
நன்றி : www.dinamani.com - 24 Nov 2009
No comments:
Post a Comment