I LOVE TAMIL


Tuesday, November 24, 2009

ஒளியும் இருளும்!

வரப்போகும் ஆண்டுகளில், இந்தியா முழுவதுமே கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் கொதித்தெழும் சம்பவங்கள் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மின் தட்டுப்பாடு என்பது தனிநபரைப் பாதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தொழிற்சாலைகளையும், விவசாயத்தையும் அல்லவா மிகவும் கடுமையாகப் பாதிக்கப் போகிறது. அதன் தொடர் விளைவாகப் பொருளாதாரம் சீர்குலைந்து, இந்தியாவின் வளர்ச்சி என்பதே தடைபடப் போகிறதே, அதைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தால் எப்படி?

 இன்றைய நிலையில், இந்தியாவின் அதிகபட்ச மின் உற்பத்தித் திறன் ஏறத்தாழ 1,50,000 மெகாவாட். அடுத்த மூன்றே ஆண்டுகளில் நமது தேவை 2,00,000 மெகாவாட்டாக இருக்கும் என்றும், 2020-ல் நமது தேவை 4,00,000 மெகாவாட்டுக்குக் குறையாமல் தேவைப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. நமது அதிகபட்ச உற்பத்தித் திறன் 1,50,000 மெகாவாட் என்றால், அதில் 70 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் தான் உண்மையான உற்பத்தித்திறன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  அரசின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி மற்றும் விநியோகம், அரசு இயந்திரத்தின் மெத்தனத்தையும் சுவீகாரம் செய்து கொண்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நமது மின்வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஒன்றுக்கும் உதவாத பழைய தொழில்நுட்பங்களை இன்னும் கட்டிக்கொண்டு அழுவது. இயந்திரங்களும் பழையன. பராமரிப்போ மிகமிக மோசம். மின் உற்பத்திக்கு ஆகும் செலவில் பாதி, அடிக்கடி நிகழும் மின் தடங்கல்களைச் சரி செய்வதற்குத் தேவைப்படுகிறது. போதாக்குறைக்கு, மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்போ, உலகத் தரத்துடன் ஒப்பிடும்போது மிக மிக அதிகம்.
  நமது மின்வாரியங்கள்தான் திறமையாகச் செயல்படுவதில்லை, ஊழியர்கள் முழுக் கவனத்துடன் பணியாற்றுவதில்லை என்று தனியாருக்கு விநியோகத்தையும், கட்டண வசூலையும் தில்லி போன்ற இடங்களில் கொடுத்துப் பார்த்தபோது, அவர்களும் திறமையாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை. தனியார்வசம் ஒட்டுமொத்த மின்துறையையும் தாரை வார்த்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என்று நினைத்தால், அது பகல்கனவு! 2003-ல் கொண்டு வரப்பட்ட மத்திய மின் சட்டம் பிரச்னையை எந்தவிதத்திலும் சமாளிக்க உதவவில்லை என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே!
  இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே, நமது மின் தேவையைப் பற்றிய கவலை எழுந்தது. அப்போது, டி.டி. கோசாம்பி மற்றும் ஹோமி பாபா என்று இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவால் அடையாளம் காணப்பட்டு, இதைப் பற்றிய திட்டமிடவும் ஈடுபடுத்தப்பட்டனர்.
 பூமத்திய ரேகையை ஒட்டிய, சூரிய ஒளியை மிக அதிகமாகப் பெறும் தட்பவெப்ப நிலையைக் கொண்ட இந்தியா, தனக்கு இயற்கையாக அமைந்திருக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்பது விஞ்ஞானி டி.டி. கோசாம்பியின் வாதமாக இருந்தது. ஆனால், மிக அதிகமான முதலீடுடைய அணுசக்தியைப் பயன்படுத்துவதுதான், நாளைய அதிகரித்த தேவைக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் உகந்தது என்பது ஹோமி பாபாவின் கருத்து. ஹோமி பாபாவின் கருத்துக்குத் தந்த அதே முக்கியத்துவம் டி.டி. கோசாம்பியின் ஆலோசனைக்கும் தரப்பட்டு, இரண்டு முறைகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்தி இருந்தால், இன்றைக்கு நாம் மின்தேவைக்காகப் பயப்பட்டிருக்கத் தேவையில்லை.
 இன்னொரு வேடிக்கை தெரியுமா? நமது மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி அமைச்சகம், 2002 முதல் 2007 வரை நிதிநிலை அறிக்கைகளில் ஆராய்ச்சிக்காகவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும் அளிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் ஆண்டுதோறும் 44 சதவிகிதம் முதல் 76 சதவிகிதத்தைப் பயன்படுத்தாமலே திருப்பி அளித்திருக்கிறது என்கிறது தணிக்கை அதிகாரியின் அறிக்கை. இப்போது, விழித்துக் கொண்டு முழு மூச்சில் சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தியைப் பெருக்கவும், காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி இருக்கிறது, மகிழ்ச்சி!
 இன்னொரு விஷயம். உற்பத்திப் பெருக்கம் எவ்வளவு அவசியமோ, அதே அளவு சிக்கனமும் தேவைதானே. சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் நகரங்களில் உள்ள வியாபார நிறுவனங்கள், விடுதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், ஷாப்பிங் மால் என்கிற பெயரில் வர்த்தக நிறுவனங்கள் இவையெல்லாம் வீணடிக்கும் மின்சாரம் கொஞ்சநஞ்சமா? இவர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலித்தால், அதையும் விற்பனை விலையுடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுவார்கள்.
 வியாபாரத்துக்காக, கொள்ளை லாபத்துக்காக  மின்சாரம் ஒருபுறம் வீணாகிறது. ஆனால், வீட்டு உபயோகத்துக்கும், தொழிற்சாலைகளுக்கும், விவசாயத்துக்கும் தினந்தோறும் மின்வெட்டு அரங்கேறுகிறது. கட்டுப்பாடே இல்லாத சந்தைப் பொருளாதாரத்தின் பின்விளைவுகள் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே அல்லவா சீர்குலைத்து விடும்.
 மின் உற்பத்தியை அதிகரிக்க முடிகிறதோ இல்லையோ, வண்ண வண்ண விளக்குகள், விளம்பரப் பலகைகள், வாடிக்கையாளர்களைக் கவரப் பயன்படுத்தப்படும் அளவுக்கு அதிகமான மின் விரயங்கள் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டே தீர வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்து விடும் என்பது நினைவிலிருக்கட்டும்!


Thanks to : www.dinamani.com -  24 Nov 2009 

No comments: