பலசூர், நவ. 23: அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அக்னி-2 ஏவுகணைச் சோதனை முதல் முறையாக இரவு நேரத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
ஒரிசாவில் பலசூரில் உள்ள ஏவுகணைத் தளத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 7.50 மணிக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கழக (டிஆர்டிஓ) வட்டாரங்கள் கூறியதாவது:
20 மீ. நீளமும், 17 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் எடையுள்ள வெடிபொருள்களைத் தாங்கிச் செல்லும் திறன் உடையது.
இந்த ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அக்னி-2 ஏவுகணையை முழுமையாக செயல்படுத்துவதற்கான வழிமுறையில் இந்த சோதனை முக்கியமான நிகழ்வாகும்.
சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்த மற்ற விவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன என டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்னதாக, 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அக்னி-1 ஏவுகணையும், 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அக்னி-3 ஏவுகணையும் சோதனை செய்யப்பட்டுள்ளன.
நன்றி : http://dinamani.com - 24.11.2009
No comments:
Post a Comment