I LOVE TAMIL


Monday, March 22, 2010

நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுமா? இன்று, உலக தண்ணீர் தினம்

சென்னை, மார்ச் 22-

உலக தண்ணீர் தினம் இன்று (திங்கள்கிழமை) சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

அபாய நிலை

உலக அளவில் மக்கள்தொகை பெருகிக்கொண்டே போகிறது. ஆனால், தேவையான நீர் ஆதாரமோ இல்லை. முன்பு, வீட்டிற்கு முகம் தெரியாதவர் ஒருவர் வந்து, "அம்மா கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க'' என்று கேட்டால், அவரை யார் என்றே கேட்காமல், முக மலர்ச்சியுடன் தண்ணீர் கொடுத்த காலங்கள் போய், இப்போது வீட்டிலேயே காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் காலம் வந்துவிட்டது. நீர் மாசு அடைவதால் இந்த அபாய நிலை.

"நீரின்றி அமையாது உலகு'' என்ற வள்ளுவரின் வாக்கை மறந்து, தற்போதைய நவீன விஞ்ஞானம் மூலம் மனித இனமே இல்லாத நிலவு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எதுவும் இருக்கிறதா? என்று ஆராய கோடி கணக்கில் பணம் தண்ணீராய் செலவு செய்யப்படும் வேதனையான நிலைதான் உள்ளது. இருக்கும் நீர் ஆதாரங்களை காக்க கடுகளவும் நடவடிக்கைகள் இல்லை.

உலக தண்ணீர் தினம்

பறந்து... விரிந்த... இந்த உலகத்தை சுற்றி 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீரே உள்ளது. மீதம் உள்ள 2.5 சதவீதம்தான், நிலப்பரப்பில் நல்ல நீராக இருக்கிறது. ஆனால், இதிலும் 2.24 சதவீதம் துருவப்பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எஞ்சியுள்ள 0.26 சதவீத நீரைத்தான் குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், இது எப்படி பெருகி வரும் மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த உண்மையை அறிந்த ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி `உலக தண்ணீர் தினம்' சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஷமாகும் நீர்

ஆனால், நாட்டில் இருக்கும் சொற்ப நீர் ஆதாரங்களோ கழிவுகளால் மாசு படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடி டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. இதனால், நிலத்தடி நீரும் விஷமாகி வருகிறது. இந்த அபாயத்தை கூட உணராமல், நீர் ஆதாரங்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்களும் மாண்டுபோகும் நிலைதான் ஏற்படும்.

எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், "தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம்'' என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

நன்றி: www.dailythanthi.com on 22-Mar-2010

Friday, March 12, 2010

ஊழலுக்குப் போட்ட உரம்

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கான உரங்களை விற்பதில் ஊழல் செய்ததாக ஒரு மொத்தக்கொள்முதல் வியாபாரி மீதும், ஒரு சில்லறை விற்பனையாளர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை, ரூ.12.5 கோடி மதிப்புள்ள 3435 டன் பொட்டாசியம் குளோரைடு உரத்தை வெளிச்சந்தைக்கு கொண்டுபோய் விற்றுள்ளனர்.

இந்த உரம் முழுவதும் விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஒரு டன் உரத்தின் உண்மையான விலை ரூ.35,584. ஆனால், இந்த உரத்தை விவசாயிகளுக்கு மானிய விலையில், அதாவது ஒரு டன் உரம் ரூ.4833-க்கு விற்பனை செய்ய வேண்டும். அதனால் ஒரு டன் உரத்துக்கு மத்திய அரசு தரும் மானியம் ரூ.30,751. ஆனால் இந்த உரம் முழுவதையும் வெளிச்சந்தையில் விற்றதால் கிடைத்துள்ள தனி லாபம் ரூ.10.5 கோடி. இது தவிர, விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் "அரிய சேவை' செய்வதற்காக, விற்பனை விலையில் குறிப்பிட்ட தொகையை மொத்த விற்பனையாளருக்கும், சில்லறை விற்பனையாளருக்கும் அரசே வழங்குகிறது.

பருவமழை பொய்த்தாலும் வயலில் பாடுபட்டு, வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிக்கு விளைச்சல் நன்றாக இருந்து, சந்தை வாய்ப்புகள் நன்றாக இருந்தால்தான் ஓரளவு பணம் கிடைக்கும். மண்ணில் போட்டதைவிட அதிகமான பணத்தை கண்ணில் பார்க்க முடியும். ஆனால் உரத்தை துறைமுகத்திலேயே கைமாற்றி விடுபவருக்கு ரூ.10.5 கோடி கிடைக்கிறது. இதைவிட மிகப்பெரிய வாழ்வியல் முரண் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணை திறக்கப்பட்ட பின்னரும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயிகள் வேதனைக் குரல் எழுந்தபோது, தேவையான உரம் கையிருப்பில் உள்ளது என்றுதான் தமிழக அரசு புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இருந்தும்கூட, இறக்குமதி செய்யப்பட்டு, மானிய விலையில் விற்கப்பட வேண்டிய உரம் தமிழகத்துக்கே வராமல் ஆந்திர மாநிலத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

இந்த ஊழலும்கூட, மத்திய புலனாய்வுத் துறை கண்டுபிடித்து மாநில அரசுக்குக் கடிதம் எழுதியதால் அம்பலத்துக்கு வந்த ஊழல். விவசாயத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு, சில தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைக்கு திருப்பிவிடப்படுவதாக புலனாய்வுத் துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. விவசாயத்துக்கு அல்லாமல் வேறு தொழில்துறைக்கு இவை விற்கப்பட்டிருக்குமெனில் மேலும் ஒரு சில கோடி ரூபாய் அதிக லாபம் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.

ஆனால், இந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. துறை நடவடிக்கை என்பது எத்தனை ஆண்டுகளில், எத்தனை தலையீடுகளைக் கண்டு, எப்படி முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

வேளாண்மைக்கு அதிக அளவில் மானியம் கிடைக்கிறது, விதைகள், விவசாயக் கருவிகள், உரம், காட்டாமணக்கு போன்ற புதிய சாகுபடிகள், பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், சொட்டுநீர்ப்பாசனம் என எல்லா இனங்களிலும் மானியம் ""செழிப்பாக'' இருக்கும் துறை வேளாண் துறை. விவசாயிகளின் பெயர், அவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே எண், சிட்டா புத்தகம் விவரம் தெரிந்திருந்தால்போதும், மேசையிலேயே மானியத்தை ""அறுவடை'' செய்யலாம் என்கிற வாய்ப்புகள் உள்ள துறை வேளாண்துறை.

பல ஊழல்களில் அதிகாரிகள்தான் ஏஜன்டுகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வழிகாட்டியாக தூண்டுகோலாக இருக்கிறார்கள் என்பதால், அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் அரசு இயந்திரம் பழுதடையாமல் இருக்கும்.

சென்னையில் நடந்த பிரபல வணிகவளாக தீ விபத்தில், அந்தப் பகுதிக்கு பொறுப்பான தீயணைப்புத் துறை அதிகாரி மற்றும் மாநகராட்சிப் பொறியாளர் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டதுபோல, இந்த ஊழலில் தொடர்புடைய வேளாண் துறை அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்ப்பதுதான் நியாயமானதாக இருக்கும். வேளாண் அமைச்சரும் இதற்கு தார்மிக பொறுப்பேற்க வேண்டும்.

Source : www.dinamani.com / 01.10.2008

ரொக்க இருப்பு விகிதம்

நாமும் தெரிந்து கொள்வோம்...
ரொக்க இருப்பு விகிதம்

சோபனா சதா
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு

பங்கு வர்த்தகத்தில் அண்மைக்காலமாக ‘கேஷ் ரிசர்வ் ரேஷியோ (சி.ஆர்.ஆர்.) என்றழைக்கப்படும் ரொக்க இருப்பு விகிதம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து நாமும் தெரிந்து கொள்வோம்.
ரொக்க இருப்பு விகிதம் என்றால் என்ன?
வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகள் வாயிலாகவும், குறித்த கால டெபாசிட் திட்டங்கள் வாயிலாகவும் டெபாசிட்டுகளை திரட்டுகின்றன. இவ்வாறு திரட்டப்படும் மொத்த டெபாசிட்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கியிடம் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும். இதற்கு ரொக்க இருப்பு விகிதம் என்று பெயர்.
தற்போது வங்கிகள் அவற்றின் மொத்த டெபாசிட்டில் பாரத ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. இதன்படி ஒரு வங்கியிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகள் ரூ.1,000 கோடி என்றால் இதில் ரூ.65 கோடியை அவ்வங்கி பாரத ரிசர்வ் வங்கியிடம் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும்.
ரொக்க இருப்பு விகிதம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? அதன் அடிப்படை நோக்கம் என்ன?
ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) 1950&ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகளில் பொதுமக்கள் வைத்திருக்கும் டெபாசிட்டுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் கோரும்போது அவர்களுக்கு உடனடியாக டெபாசிட் தொகை கொடுக்கப்பட வேண்டும். இதற்காக பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள முக்கியமான விதிமுறைகளில் ரொக்க இருப்பு விகிதமும் ஒன்றாகும். குறிப்பாக நாட்டில் விலைவாசி உயர்ந்து இருக்கும்போது, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் நிதி நெருக்கடி ஏற்படும்போது பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இதனை பாரத ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது.
நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இது எவ்வாறு கையாளப்படுகிறது?
நாட்டில் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும்போது பணப்புழக்கத்தை குறைக்க ரொக்க இருப்பு விகிதம் உயர்த்தப்படுகிறது. உதாரணமாக ஒரு வங்கியிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகள் ரூ.1,000 கோடி என்றும் ரொக்க இருப்பு விகிதம் 10 சதவீதம் எனவும் வைத்துக் கொண்டால் அவ்வங்கி ரூ.100 கோடியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டும். எனவே இவ்வங்கிக்கு, கடன் வழங்க ரூ.900 கோடிதான் கிடைக்கும். இதே ரொக்க இருப்பு விகிதம் 20 சதவீதமாக உயர்த்தப்படும்போது ரூ.200 கோடியை இருப்பு வைக்க வேண்டும். இப்போது வங்கிக்கு கடன் வழங்க ரூ.800 கோடிதான் கிடைக்கும். ஆக, ரொக்க இருப்பு விகிதம் அதிகரிக்கும்போது வங்கிக்கு கடன் வழங்க கிடைக்கும் நிதி குறைந்து விடும். இதனால் நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விடும்.
இந்நிலையில் சென்ற சில மாதங்களுக்கு முன்னர் நாட்டின் பணவீக்க விகிதம் 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததையடுத்து, பாரத ரிசர்வ் வங்கி இவ்வாண்டு ஜூலை மாதத்தில் வெளியிட்ட அதன் ஆய்வு அறிக்கையில், ரொக்க இருப்பு விகிதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி இருந்தது. இதனால் வங்கிகள் கூடுதலாக ரூ.8,000 கோடியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டும் என்ற நிலை உருவானது. இதனால் வங்கிகளுக்கு கடன் வழங்க கிடைக்கும் நிதியில் ரூ.8,000 கோடி குறைந்து விடும். இதனையடுத்து, நாட்டில் பணப்புழக்கம் குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்பது ஒரு பொருளாதார கோட்பாடாகும்.
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
அண்மைக்காலமாக சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் கடும் நிதி நெருக்கடியால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு வர்த்தகத்தில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கிக் கொண்டு வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடும் குறைந்து வருகிறது. இதனால் நாட்டில் பணப்புழக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம் என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, பாரத ரிசர்வ் வங்கி அக்டோபர் மாதத்தில் மட்டும் ரொக்க இருப்பு விகிதத்தை மொத்தம் 2.50 சதவீதம் குறைத்து 6.50 சதவீதமாக குறைத்தது. எனவே வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய டெபாசிட்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மிச்சமாகி பொதுமக்களுக்கு கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும். இதனையடுத்து, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வங்கிகள் வைக்கும் ரொக்க இருப்பிற்கு வட்டி வழங்கப்படுகிறதா?
வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க இருப்பிற்கு வட்டி எதுவும் வழங்கப்படுவதில்லை.
சி.ஆர்.ஆர். இருப்பு வைக்க தவறும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படுமா?
நிர்ணயிக்கப்பட்ட ரொக்க இருப்பு விகிதத்தை விட குறைவாக இருப்பு வைத்தால் எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ அந்த தொகைக்கு வட்டி விதிக்க பாரத ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு.
ஒரு நாளில் எவ்வளவு இருப்பு வைக்க வேண்டுமோ அதற்கு குறைவாக வங்கிகள் இருப்பு வைத்தால், குறையும் தொகைக்கு வங்கி கடனிற்கான வட்டி விகிதத்தை காட்டிலும் 3 சதவீதம் கூடுதல் வட்டி விதிக்கப்படும். அடுத்த நாளும் இதே நிலை தொடர்ந்தால் இவ்விகிதம் மேலும் 2 சதவீதம் உயர்ந்து விடும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வங்கிகளுக்கான உரிமத்தை ரத்து செய்வது அல்லது அத்தகைய வங்கியை பெரிய வங்கி ஒன்றுடன் இணைக்கும் நடவடிக்கையை பாரத ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்.
ரொக்க இருப்பு விகிதத்தை நிர்ணயிக்க வரம்புகள் எதுவும் உள்ளதா?
பாரத ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படும் ரொக்க இருப்பு விகிதம் குறைந்தபட்சம் 3 சதவீதமாகவும் அதிகபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இதற்கு முன்னர் இருந்தது. இந்த விதிமுறை 2006&ஆம் ஆண்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது இதுபோன்ற விதிமுறைகள் கிடையாது.
பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 24&ந் தேதி அன்று நிதிக் கொள்கை ஆய்வு அறிக்கையை வெளியிட உள்ளது. அதில் ரொக்க இருப்பு விகிதம் மேலும் குறைக்கப்படுமா, இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: www.dailythanthi.com - 22.10.2008

புத்தாண்டைப் புரிந்துகொள்வோம்

ஆங்கிலப் புத்தாண்டு என்றதுமே இன்றைய இளைஞர்களுக்கு நினைவுக்கு வருவது கேளிக்கைகளும், கொண்டாட்டங்களும் தான் புத்தாண்டு ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு நாள்களில் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளால் ஜனவரி 1-ம் தேதியே புத்தாண்டாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
ஜனவரி 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது பழமையான வரலாறு. கி.மு. 46-ல் ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர் ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவித்தார்
ஜனுஸ் என்பவர் ரோமானியர்களின் வாயில் கடவுள் (காட் ஆஃப் கேட்). அவருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு முகங்கள் உண்டு. பின்னால் இருக்கும் முகம் பழைய விஷயங்களையும், முன்னால் இருக்கும் முகம் எதிர்காலத்தையும் குறிப்பதாக இருந்தது புது வருஷத்துக்குள் பிரவேசிக்க உதவும் கடவுளாக அவரை ரோமானியர்கள் வழிபட்டனர்.
ஜனுஸ் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டே ஜனவரி என்று ஆண்டின் முதல் மாதத்துக்கு ஜூலியஸ் சீசர் பெயர் சூட்டினார் ஆனால் முதல் புத்தாண்டு கொண்டாட் டத்திலேயே சீசர் மிகப்பெரிய வன்முறையை அரங்கேற்றினார். புரட்சியில் ஈடுபட்ட யூதர் களுக்கு எதிராக தனது படையை ஏவிவிட்டு தெருக்களில் ரத்த ஆறு ஓடச் செய்தார்.
பின்னர் வந்த புத்தாண்டுகள் கேளிக்கை தினமாகவே கொண்டாடப்பட்டன
கிறிஸ்தவ மதம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய காலகட்டத் தில் அந்நாடுகளில் அறிவிப்பு நாள் (அனவுன் ஷியேசன் டே) என்று கூறப்படும் மார்ச் 25-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி, "கடவுளின் அருளால் ஏசு கிறிஸ்து உனது கருவில் உருவாவார்' என்று மேரி மாதாவுக்கு தேவதூ தர் கேபிரியல் மார்ச் 25-ம் தேதி அறிவித்தார் என்று கூறப்படுகிறது
1066-ம் ஆண்டு இங்கிலாந்தின் மன்னரான வில்லியம், ஜூலியஸ் சீசரைப் பின்பற்றி ஜனவரி-1 ம் தேதியைத்தான் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட் டார். எனினும் அவரது காலத்துக்குப்பின் ஜனவரியை நிராகரித்து மார்ச் 25-ம் தேதி மீண்டும் புத்தாண்டாக ஏற்கப்பட்டது
பின்னர் சுமார் 500 ஆண்டுகளுக்குப்பின் 1582-ம் ஆண்டு போப் எட்டாவது கிரிகோரி, மீண்டும் ஜனவரி ஒன்றை புத்தாண்டாக பிரகடனப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை ஜனவரி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது
ஆனால் அவரும் யூதர்களுக்கு எதிரான போக்கைக் கைவிடவில்லை. 1577-ல் புத் தாண்டு தினத்தன்று, ரோமில் உள்ள அனைத்து யூதர்களும் கண்டிப்பாக கத்தோலிக்க மதவழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு அடுத்த புத்தாண்டில் யூதர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதற்காக யூதர்கள் மீது சிறப்பு வரி விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்
1581-ம் ஆண்டு புத் தாண்டு தினத்தில் யூதர்களின் மத புத்தகங்களைக் கைப்பற்றி அழிக்குமாறு படையின ருக்கு போப் கிரிகோரி உத்தரவிட்டார். இதனை அமல்படுத்த முயன்றபோது ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால்தான் யூதர்களின் நாடான இஸ்ரேலில் இன்றும் ஜனவரி 1-ம் தேதி பொது விடுமுறை கிடையாது. காலண்டரில் மாற்றம் கொண்டு வந்த போப் கிரிகோரி, லீப் ஆண்டைக் கணக் கிட்டு, காலண்டரில் பத்து நாள்களை அதிகப் படுத்தி, 1582-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதியை, அக்டோபர் 15-ம் தேதி என்று கடைப்பிடிக்க உத்தரவிட்டார். அவர் அங்கீக ரித்த காலண்டர் அவரது பெயரிலேயே "கிரி கோரியன் காலண்டர்' என்று அழைக்கப்படு கிறது
தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போப் கிரிகோரியால் அங்கீகரிக்கப்பட்ட காலண்டர் பின்பற்றப்படுகிறது
பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உள்பட்ட இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அத னைப் பின்பற்றி ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களால் எப்போதோ இந்தியா வுக்கு கொண்டு வரப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் இன்று பல கோடிகள் புரளும் வணிகமாகி விட்டது
நவயுவ இளைஞர்கள், இளைஞிகளையும், மேல் தட்டுமக்களையும் மையமாகக் கொண்டே ஹோட்டல்களிலும், விடுதிகளிலும், வணிக நிறுவனங்கள் ஆங்கிலப் புத் தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளைச் செய்கின்றன என்பது கண்கூடான உண்மை
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது விற்பனை உச்சத்தை எட்டுவது வருந்தத்தக்க விஷயம் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவங்கள் எவரும் எளிதில் மறந்துவிட முடியாது
மும்பையில் இரண்டு இளம்பெண்கள் குடிபோதையில் இருந்த கும்பலால் பலாத்காரத் துக்கு உள்ளானார்கள். சென்னை ஹோட்டலில் நீச்சல் குளத்துக்கு மேல் அமைக்கப்பட் டிருந்த மேடை சரிந்ததில் இருவர் உயிரிந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினர் மனதில் மட்டுமல்லாமல் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் வலியை ஏற்படுத்தி விடுகிறது
இதற்காக கொண்டாட்டத்தை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்று கூறுவதற் கில்லை. கொண்டாட்டத்தில் ஈடுபவர்கள் நிதானத்தையும், கட்டுப்பாட்டையும் தவறவி டக் கூடாது என்பதே முக்கியம்.
புத்தாண்டு பிறப்பு வழக்கமான ஒன்று என்றாலும் இலக்கை நிர்ணயித்து அதை எட்ட முயல்வதற்கான வரையறையாகக் கொண்டால் ஒவ்வொரு புத்தாண்டும் வாழ்க்கையின் ஏணிப்படியாகத்தான் அமையும்.

Thanks - www.dinamani.com - 27.12.2008

Tuesday, March 9, 2010

தலையங்கம்:பேர ​பா​யம் காத்​தி​ருக்​கி​றது...!

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக. 

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை. 

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்? 

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. 

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா?  இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது. 

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை? 

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை. 

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. 

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது. 

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? 

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி? 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது. 

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?


நன்றி: www.dinamani.com - 09 Mar 2010

Saturday, March 6, 2010

Brothers in arms: Rajpal and Zeeshan eye top prize


Referred By: Mr. M. Chinnamaruthu
Thanks to : http://dc-epaper.com on 27-Feb-2010

Friday, March 5, 2010

தலையங்கம்:விவசாயத்துக்கு அப்"பால்'...

இந்திய விவசாயத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாகவும், விவசாயிகளின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் உறவாகவும் தொடர்வது கால்நடைப் பராமரிப்பு. சமீபகாலமாக, விவசாயம் பின்னடைவுகளைச் சந்தித்துவரும் வேளையிலும், இந்தியாவில் பால் உற்பத்தி கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பதும், இறைச்சி ஏற்றுமதியும் கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது என்பதும் வெளியில் பேசப்படாத வெற்றிகள்.

இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இரண்டு பங்கு அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமா? 2007-08-ம் நிதியாண்டுக்கான புள்ளிவிவரப்படி, அரிசி (ரூ. 95,038 கோடி), கோதுமை (ரூ. 71,579 கோடி), கரும்பு (ரூ. 33,691 கோடி) ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பைவிட, பால் உற்பத்தியின் மதிப்பு (ரூ. 1,62,136 கோடி) அதிகம். சொல்லப்போனால், இந்தியாவின் மிகப்பெரிய விவசாய வளம் எது என்று கேட்டால், பால்வளமாகத்தான் இருக்கும்.


இவ்வளவு இருந்தும், பால் உற்பத்தியும், கால்நடைப் பராமரிப்பும் நமது அரசின் சிறப்புக் கவனத்தைப் பெறவில்லை என்பது மட்டுமல்ல, விவசாயிகள் மத்தியிலும் பெற வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கப் பெறாமல் தொடர்கிறது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை, விவசாயத்துடன் இணைந்த அல்லது விவசாயம் சார்ந்த ஒன்றாகத்தான் கருதுகிறார்களே தவிர, முன்னுரிமை பெற்ற ஆதாயம்தரும் செயல்பாடாக ஏனோ கருதுவதில்லை.


அரை நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியச் சூழலில், கிராமங்களைச் சுற்றிலும் ஏராளமான மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. மாடு அல்லது ஆடு மேய்ப்பது என்பதேகூட ஒரு பிழைப்பாக இருந்த காலம் உண்டு. நெல் பயிரிடும்போது கிடைக்கும் துணைப்பொருளான வைக்கோலுக்கு மிகவும் குறைவான விலைதான் கிடைத்தது என்பதுடன், விவசாயியைப் பொறுத்தவரை வயலில் கிடைத்த வைக்கோலை வீணாக்காமல் உபயோகிப்பதற்குக் கால்நடை வளர்ப்பு என்கிற நிலைமை இருந்த காலம் அது.


இன்றைய நிலைமை அதுவல்ல. விளைநிலங்கள் குறைந்து வருகின்றன என்பதுடன், அதிகரித்த கரும்பு, வாழை போன்ற பணப்பயிர் விவசாயம், வைக்கோல் விலையை அதிகரித்து விட்டிருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கமும், வளர்ச்சிப் பணிகளும் மேய்ச்சல் நிலங்களை வெகுவாகக் குறைத்து விட்டிருக்கின்றன.


இந்த நிலையில், கால்நடைப் பராமரிப்புக்காக அத்தியாவசியத் தேவைகள் என்று கருதப்படும், புல், வைக்கோல், கால்நடைத் தீவனம் போன்ற எல்லாமே இலவசமாக இருந்ததுபோய் ஒரு செலவினமாக மாறிவிட்டிருக்கிறது.


பராமரிப்பு தவிர வேறு எந்தவிதச் செலவும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த கால்நடை வளர்ப்பு என்பதை இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது என்கிற நிலைமை. இனிமேல், பால் உற்பத்தியையும், கால்நடை வளர்ப்பையும் ஒரு முழுநேரத் தொழிலாக அல்லது விவசாயத்துக்கு நிகரான முக்கியத்துவமுள்ள ஒரு தொழிலாக இந்திய விவசாயி கருதியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.


பால் உற்பத்திக்காகவே புல் வளர்ப்பு, கால்நடைகளின் மருத்துவப் பராமரிப்பு, கால்நடைத் தீவனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது என்பது விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். பால் உற்பத்தியை அதிகரிக்க அதிக அளவில் பால் சுரக்கும் பசு மற்றும் எருமை இனங்களை வாங்குவதில் முதலீடு செய்வதுடன் நின்றுவிடாமல், புல், வைக்கோல், மருந்துகள், கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றிலும் முதலீடு செய்தால்தான், கால்நடை வளர்ப்பு என்பது பயனளிப்பதாக இருக்கும்.


பால் உற்பத்தியிலும், கால்நடைப் பராமரிப்பிலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு காட்டிய ஆர்வம்தான் இன்று பால் உற்பத்தி, ஏனைய விவசாய உற்பத்திகளைவிட அதிகமாக இருப்பதன் காரணம். கடந்த 30 ஆண்டுகளாக, நாம் தனியார் கால்நடைப் பண்ணைகளை ஊக்குவிப்பதில் காட்டும் முனைப்பை, கால்நடைப் பராமரிப்பை ஒரு தனிப்பட்ட விவசாயியை முன்னிறுத்தித் தருவதில் காட்டாமல் விட்டிருக்கிறோம்.


கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்பது கிராமத்துக்கு கிராமம் அமைக்கப்பட்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் பரவலாகக் கலப்பின கறவை மாடுகளை வாங்கவும், பராமரிக்கவும் கடனுதவி வழங்கப்பட்டு எழுபதுகளில் "வெள்ளைப் புரட்சி' என்கிற பெயரில் பால் உற்பத்திப் பெருக்கத்துக்கு வழிகோலியதை நாம் மறந்து விட்டோம் என்றே தோன்றுகிறது.


இன்றைய நிலையில் தேசிய அளவிலான பால் உற்பத்தி என்பது சுமார் 100 மில்லியன் டன்கள். இதில் பால் பண்ணைகளின் பங்கு வெறும் 15 விழுக்காடுதான். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சேகரிக்கப்படும் பாலின் அளவு வெறும் 9 மில்லியன் டன்கள் மட்டுமே. இன்னொரு புள்ளிவிவரம்கூட இருக்கிறது. தேசிய அளவிலான பால் உற்பத்தியின் சரிபாதி, குஜராத் மாநிலத்தின் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கமும், கர்நாடக அரசின் நந்தினி பால் பண்ணையும் தரும் பங்களிப்பு.


கூட்டுறவு முறையில் பால் பண்ணைகள் கிராமம்தோறும் அமைப்பதும், அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை அந்தச் சங்கங்களுடன் இணைந்து கால்நடைகளின் மருத்துவத் தேவைகளையும், இனப்பெருக்கத் தேவைகளையும் பூர்த்தி செய்வதும், கால்நடைப் பராமரிப்பை ஒரு விவசாயத் தொழிலாகக் கருதி வங்கிகள் கடனுதவி வழங்குவதும்தான் பால் உற்பத்தி பெருகுவதற்கும், பாலின் விலை கட்டுக்குள் அடங்கி இருப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும். சில தனியார் பண்ணைகள், இடைத்தரகர்கள் மூலம் பால் சேகரிப்பது, அரசுப் பண்ணைகள் தாங்களே கால்நடைகளை வளர்ப்பது போன்ற போக்கு பாலின் விலையை அதிகரிக்க மட்டுமே உதவும்.


கால்நடைகளின் பராமரிப்பில் விவசாயிகளை அதிக கவனம் செலுத்த ஊக்குவிப்பது, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தி மற்றும் சேகரிப்பை உறுதிப்படுத்துவது, வங்கிகளின் பங்களிப்பு ஆகியவை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல முடுக்கிவிடப்பட்டால், உலகத்துக்கே பால் விநியோகம் செய்யும் நிலைமைக்கு இந்தியா உயர முடியும். சராசரி இந்திய நகர்ப்புறவாசிக்குக் குறைந்த விலையில் பால் கிடைக்கவும் வழிகோல முடியும்...


விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது!


நன்றி: www.dinamani.com - 05 Mar 2010