I LOVE TAMIL


Friday, March 12, 2010

ஊழலுக்குப் போட்ட உரம்

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கான உரங்களை விற்பதில் ஊழல் செய்ததாக ஒரு மொத்தக்கொள்முதல் வியாபாரி மீதும், ஒரு சில்லறை விற்பனையாளர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை, ரூ.12.5 கோடி மதிப்புள்ள 3435 டன் பொட்டாசியம் குளோரைடு உரத்தை வெளிச்சந்தைக்கு கொண்டுபோய் விற்றுள்ளனர்.

இந்த உரம் முழுவதும் விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஒரு டன் உரத்தின் உண்மையான விலை ரூ.35,584. ஆனால், இந்த உரத்தை விவசாயிகளுக்கு மானிய விலையில், அதாவது ஒரு டன் உரம் ரூ.4833-க்கு விற்பனை செய்ய வேண்டும். அதனால் ஒரு டன் உரத்துக்கு மத்திய அரசு தரும் மானியம் ரூ.30,751. ஆனால் இந்த உரம் முழுவதையும் வெளிச்சந்தையில் விற்றதால் கிடைத்துள்ள தனி லாபம் ரூ.10.5 கோடி. இது தவிர, விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் "அரிய சேவை' செய்வதற்காக, விற்பனை விலையில் குறிப்பிட்ட தொகையை மொத்த விற்பனையாளருக்கும், சில்லறை விற்பனையாளருக்கும் அரசே வழங்குகிறது.

பருவமழை பொய்த்தாலும் வயலில் பாடுபட்டு, வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிக்கு விளைச்சல் நன்றாக இருந்து, சந்தை வாய்ப்புகள் நன்றாக இருந்தால்தான் ஓரளவு பணம் கிடைக்கும். மண்ணில் போட்டதைவிட அதிகமான பணத்தை கண்ணில் பார்க்க முடியும். ஆனால் உரத்தை துறைமுகத்திலேயே கைமாற்றி விடுபவருக்கு ரூ.10.5 கோடி கிடைக்கிறது. இதைவிட மிகப்பெரிய வாழ்வியல் முரண் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணை திறக்கப்பட்ட பின்னரும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயிகள் வேதனைக் குரல் எழுந்தபோது, தேவையான உரம் கையிருப்பில் உள்ளது என்றுதான் தமிழக அரசு புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இருந்தும்கூட, இறக்குமதி செய்யப்பட்டு, மானிய விலையில் விற்கப்பட வேண்டிய உரம் தமிழகத்துக்கே வராமல் ஆந்திர மாநிலத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

இந்த ஊழலும்கூட, மத்திய புலனாய்வுத் துறை கண்டுபிடித்து மாநில அரசுக்குக் கடிதம் எழுதியதால் அம்பலத்துக்கு வந்த ஊழல். விவசாயத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு, சில தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைக்கு திருப்பிவிடப்படுவதாக புலனாய்வுத் துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. விவசாயத்துக்கு அல்லாமல் வேறு தொழில்துறைக்கு இவை விற்கப்பட்டிருக்குமெனில் மேலும் ஒரு சில கோடி ரூபாய் அதிக லாபம் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.

ஆனால், இந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. துறை நடவடிக்கை என்பது எத்தனை ஆண்டுகளில், எத்தனை தலையீடுகளைக் கண்டு, எப்படி முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

வேளாண்மைக்கு அதிக அளவில் மானியம் கிடைக்கிறது, விதைகள், விவசாயக் கருவிகள், உரம், காட்டாமணக்கு போன்ற புதிய சாகுபடிகள், பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், சொட்டுநீர்ப்பாசனம் என எல்லா இனங்களிலும் மானியம் ""செழிப்பாக'' இருக்கும் துறை வேளாண் துறை. விவசாயிகளின் பெயர், அவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே எண், சிட்டா புத்தகம் விவரம் தெரிந்திருந்தால்போதும், மேசையிலேயே மானியத்தை ""அறுவடை'' செய்யலாம் என்கிற வாய்ப்புகள் உள்ள துறை வேளாண்துறை.

பல ஊழல்களில் அதிகாரிகள்தான் ஏஜன்டுகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வழிகாட்டியாக தூண்டுகோலாக இருக்கிறார்கள் என்பதால், அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் அரசு இயந்திரம் பழுதடையாமல் இருக்கும்.

சென்னையில் நடந்த பிரபல வணிகவளாக தீ விபத்தில், அந்தப் பகுதிக்கு பொறுப்பான தீயணைப்புத் துறை அதிகாரி மற்றும் மாநகராட்சிப் பொறியாளர் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டதுபோல, இந்த ஊழலில் தொடர்புடைய வேளாண் துறை அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்ப்பதுதான் நியாயமானதாக இருக்கும். வேளாண் அமைச்சரும் இதற்கு தார்மிக பொறுப்பேற்க வேண்டும்.

Source : www.dinamani.com / 01.10.2008

No comments: