மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் கருணாநிதியின் நேரடிப் பார்வையில் தனித்துறை அமைக்கப்படும் என்று அண்மையில் நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இத்தகைய தனித்துறை அமைக்கப்படுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் முதலில் நடைபெறுகிறது.
இதுநாள்வரை, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சமூக நலத் துறையின் கீழ், சமூக நல அமைச்சரின் பொறுப்பில் நடைபெற்று வந்தது. தற்போது முதல்வர் நேரடிப் பார்வையில் இத்துறை செயல்படும் என்றாலும்கூட, இத்துறைக்கென தனி அமைச்சரை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அதற்கான தேவை இருக்கிறது.
இந்தியாவில் கடந்தமுறை எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி 2.9 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள். தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை 16.42 லட்சம். அதாவது 2.6 சதவீதம். இதில் மிகவும் சிக்கலானதும், முக்கியமானதும் என்னவென்றால், இவர்களில் 70 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அரசின் நலத் திட்டங்களின் பயனைப் பெற முடிகிறது என்பதும், கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அரசின் பயனையும் பெறாமல் கல்வியும் பெறமுடியாமல் மெல்ல மெல்ல காலவெள்ளத்தில் பின்தள்ளப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் 1.25 லட்சம் பேர் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர். இவர்கள் மட்டுமே அரசின் பலன்களை பெறுகிறார்கள். மற்றவர்கள் அரசின் நலத்திட்டம் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டத்துக்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.176 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மாணவர்களாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் உணவுப் படி ரூ.200 லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும், இன்னும் செய்யவேண்டியவை நிறைய இருக்கின்றன. அவற்றைச் செய்யும்போது இன்னும் நன்றாக இருக்கும்.
உடற்குறையால், பார்வையிழப்பால், செவித்திறன் குறைவால் 40 சதவீதம் பாதிக்கப்பட்டோர், மூளைவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை மாற்றுத் திறனாளிகள் என்று வகைப்படுத்துகிறார்கள். ஆனால், இவர்களுக்காக நடைபெறும் சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை, சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், அவை தேவைக்குத் தகுந்தபடியாக இல்லை.
இத்தகைய மாற்றுத் திறனாளிகளின் கல்விக்காக சில திட்டங்கள் இருந்தாலும்கூட, இன்றைய நவீன உலகத்துடன் போட்டியிடும் வகையிலான தொழிற்கல்வி அளிக்கும் புதிய பயிற்சிகள் அரசு நிறுவனங்களில் கிடைப்பதில்லை. வழக்கமாக சொல்லித்தரும் அதே காலாவதியான அதே தொழிற்பயிற்சிகளைத்தான் அளிக்கின்றனர். சில தனியார் அமைப்புகள், வெளிநாட்டு நிதியுதவியைக் கொண்டு அமைத்துள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சிக் கூடங்கள் ஆச்சரியத்தை தந்தாலும், அரசுத் தரப்பில் இத்தகைய முயற்சிகள் இதுவரை இல்லை என்பதே உண்மை.
மாற்றுத் திறனாளி என்பவர் இரண்டு வகையிலும் பாதிக்கப்பட்டிருப்பவர். அவரால் மற்றவர்களைப்போல செயல்பட முடியாது என்பது ஒரு பாதிப்பு. மற்றவர்களுக்கு இணையாகச் சம்பாதித்தாலும், தனது ஊனத்தை சரிக்கட்ட ஒரு தனிநபரை அமர்த்திக்கொள்ளும் கட்டாயம் இருப்பதால் அவரது வருமானத்தின் கணிசமான பகுதி அதற்காக செலவாகிப் போகிறது.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக தன்னார்வ அமைப்புகள் நடத்தும் பகல்நேர மையம், உண்டுறைப் பள்ளி ஆகியவற்றுக்கு அரசு நிதியுதவி அளிப்பதுடன், மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்றபடி கட்டடங்கள் கட்டுவதற்காக மானியம்கூட தருகிறது. ஆனால் மிகச் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே உண்மையான தொண்டினை அளிக்கின்றன. மற்றவர்கள் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, வெறுமனே தலைகள் கணக்கைக் காட்டி சம்பாதிக்கின்றன என்பதுதான் நடைமுறை உண்மை. இத்தகைய மோசமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வதன் மூலம், ஓரளவு ஒழுங்கை நிலைநிறுத்த முடியும்.
அரசு அலுவலகங்கள் மிகச் சிலவற்றில் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தள மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இத்தகைய சாய்தள வசதி கொண்ட பள்ளிகள் எத்தனை என்று கணக்கிட்டால், விரல்விட்டு எண்ணிவிடலாம்.
விமான நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி கழிவறைகள் உள்ளன. அவை அவர்தம் ஊனத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள். ஆனால் இத்தகைய கழிப்பறைகள் அரசு அலுவலகங்களிலோ அல்லது பள்ளிகளிலோ கிடையாது. உடற்குறை, பார்வை குறையுள்ளவர்கள் மற்றவர் உதவியில்லாமல் இந்தக் கழிவறையைப் பயன்படுத்த முடியாது. கழிவறையில் உட்கார்ந்தபின் ஊன்றி எழுவதற்கு ஏதுவாக, சுவரில் கம்பிகள் பொருத்தப்பட்ட கழிவறைகளே இல்லை. பேருந்துகளில்கூட ஊனமுற்றவருக்காக ஒரு இருக்கை உள்ளதே தவிர, அந்த இருக்கை சாதாரண மனிதர் அமரும் அதே இருக்கைதான், 40 சதவீத உடற்குறை உள்ளவர் இந்த இருக்கையில் அமர்ந்து எழ முடியாது.
மூளை வளர்ச்சி குன்றியவர்கள் நீங்கலாக, மற்ற மூன்று வகைகளில் பாதிப்புகள் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான ஊதியத்தை சம்பாதிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர அரசினால் முடியும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போலவே, மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தலாம். இவர்தம் திறமைக்கேற்ப அரசுத்துறை வேலைகளையே அயல்பணி ஒப்பந்தமாக செய்துகொள்ள முடியும். மேலும், கோயில்களில் காலணி பாதுகாத்தல், பஸ்நிலையங்களில் சைக்கிள் ஸ்டாண்டுகள், பேருந்து நிலையங்களில் ஓய்வறை நிர்வாகம், பொருள் வைப்பு நிர்வாகம் ஆகியவற்றை இத்தகைய மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கு மட்டுமே வழங்கினால், அவர்கள் பொருளாதார ரீதியில் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமையும்.
நன்றி: www.dinamani.com - 27 Mar 2010
No comments:
Post a Comment