I LOVE TAMIL


Monday, March 22, 2010

நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுமா? இன்று, உலக தண்ணீர் தினம்

சென்னை, மார்ச் 22-

உலக தண்ணீர் தினம் இன்று (திங்கள்கிழமை) சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

அபாய நிலை

உலக அளவில் மக்கள்தொகை பெருகிக்கொண்டே போகிறது. ஆனால், தேவையான நீர் ஆதாரமோ இல்லை. முன்பு, வீட்டிற்கு முகம் தெரியாதவர் ஒருவர் வந்து, "அம்மா கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க'' என்று கேட்டால், அவரை யார் என்றே கேட்காமல், முக மலர்ச்சியுடன் தண்ணீர் கொடுத்த காலங்கள் போய், இப்போது வீட்டிலேயே காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் காலம் வந்துவிட்டது. நீர் மாசு அடைவதால் இந்த அபாய நிலை.

"நீரின்றி அமையாது உலகு'' என்ற வள்ளுவரின் வாக்கை மறந்து, தற்போதைய நவீன விஞ்ஞானம் மூலம் மனித இனமே இல்லாத நிலவு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எதுவும் இருக்கிறதா? என்று ஆராய கோடி கணக்கில் பணம் தண்ணீராய் செலவு செய்யப்படும் வேதனையான நிலைதான் உள்ளது. இருக்கும் நீர் ஆதாரங்களை காக்க கடுகளவும் நடவடிக்கைகள் இல்லை.

உலக தண்ணீர் தினம்

பறந்து... விரிந்த... இந்த உலகத்தை சுற்றி 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீரே உள்ளது. மீதம் உள்ள 2.5 சதவீதம்தான், நிலப்பரப்பில் நல்ல நீராக இருக்கிறது. ஆனால், இதிலும் 2.24 சதவீதம் துருவப்பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எஞ்சியுள்ள 0.26 சதவீத நீரைத்தான் குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், இது எப்படி பெருகி வரும் மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த உண்மையை அறிந்த ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி `உலக தண்ணீர் தினம்' சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஷமாகும் நீர்

ஆனால், நாட்டில் இருக்கும் சொற்ப நீர் ஆதாரங்களோ கழிவுகளால் மாசு படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடி டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. இதனால், நிலத்தடி நீரும் விஷமாகி வருகிறது. இந்த அபாயத்தை கூட உணராமல், நீர் ஆதாரங்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்களும் மாண்டுபோகும் நிலைதான் ஏற்படும்.

எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், "தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம்'' என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

நன்றி: www.dailythanthi.com on 22-Mar-2010

No comments: