ரொக்க இருப்பு விகிதம்
சோபனா சதா
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
பங்கு வர்த்தகத்தில் அண்மைக்காலமாக ‘கேஷ் ரிசர்வ் ரேஷியோ (சி.ஆர்.ஆர்.) என்றழைக்கப்படும் ரொக்க இருப்பு விகிதம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து நாமும் தெரிந்து கொள்வோம்.
ரொக்க இருப்பு விகிதம் என்றால் என்ன?
வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகள் வாயிலாகவும், குறித்த கால டெபாசிட் திட்டங்கள் வாயிலாகவும் டெபாசிட்டுகளை திரட்டுகின்றன. இவ்வாறு திரட்டப்படும் மொத்த டெபாசிட்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கியிடம் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும். இதற்கு ரொக்க இருப்பு விகிதம் என்று பெயர்.
தற்போது வங்கிகள் அவற்றின் மொத்த டெபாசிட்டில் பாரத ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. இதன்படி ஒரு வங்கியிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகள் ரூ.1,000 கோடி என்றால் இதில் ரூ.65 கோடியை அவ்வங்கி பாரத ரிசர்வ் வங்கியிடம் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும்.
ரொக்க இருப்பு விகிதம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? அதன் அடிப்படை நோக்கம் என்ன?
ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) 1950&ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகளில் பொதுமக்கள் வைத்திருக்கும் டெபாசிட்டுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் கோரும்போது அவர்களுக்கு உடனடியாக டெபாசிட் தொகை கொடுக்கப்பட வேண்டும். இதற்காக பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள முக்கியமான விதிமுறைகளில் ரொக்க இருப்பு விகிதமும் ஒன்றாகும். குறிப்பாக நாட்டில் விலைவாசி உயர்ந்து இருக்கும்போது, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் நிதி நெருக்கடி ஏற்படும்போது பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இதனை பாரத ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது.
நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இது எவ்வாறு கையாளப்படுகிறது?
நாட்டில் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும்போது பணப்புழக்கத்தை குறைக்க ரொக்க இருப்பு விகிதம் உயர்த்தப்படுகிறது. உதாரணமாக ஒரு வங்கியிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகள் ரூ.1,000 கோடி என்றும் ரொக்க இருப்பு விகிதம் 10 சதவீதம் எனவும் வைத்துக் கொண்டால் அவ்வங்கி ரூ.100 கோடியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டும். எனவே இவ்வங்கிக்கு, கடன் வழங்க ரூ.900 கோடிதான் கிடைக்கும். இதே ரொக்க இருப்பு விகிதம் 20 சதவீதமாக உயர்த்தப்படும்போது ரூ.200 கோடியை இருப்பு வைக்க வேண்டும். இப்போது வங்கிக்கு கடன் வழங்க ரூ.800 கோடிதான் கிடைக்கும். ஆக, ரொக்க இருப்பு விகிதம் அதிகரிக்கும்போது வங்கிக்கு கடன் வழங்க கிடைக்கும் நிதி குறைந்து விடும். இதனால் நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விடும்.
இந்நிலையில் சென்ற சில மாதங்களுக்கு முன்னர் நாட்டின் பணவீக்க விகிதம் 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததையடுத்து, பாரத ரிசர்வ் வங்கி இவ்வாண்டு ஜூலை மாதத்தில் வெளியிட்ட அதன் ஆய்வு அறிக்கையில், ரொக்க இருப்பு விகிதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி இருந்தது. இதனால் வங்கிகள் கூடுதலாக ரூ.8,000 கோடியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டும் என்ற நிலை உருவானது. இதனால் வங்கிகளுக்கு கடன் வழங்க கிடைக்கும் நிதியில் ரூ.8,000 கோடி குறைந்து விடும். இதனையடுத்து, நாட்டில் பணப்புழக்கம் குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்பது ஒரு பொருளாதார கோட்பாடாகும்.
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
அண்மைக்காலமாக சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் கடும் நிதி நெருக்கடியால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு வர்த்தகத்தில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கிக் கொண்டு வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடும் குறைந்து வருகிறது. இதனால் நாட்டில் பணப்புழக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம் என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, பாரத ரிசர்வ் வங்கி அக்டோபர் மாதத்தில் மட்டும் ரொக்க இருப்பு விகிதத்தை மொத்தம் 2.50 சதவீதம் குறைத்து 6.50 சதவீதமாக குறைத்தது. எனவே வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய டெபாசிட்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மிச்சமாகி பொதுமக்களுக்கு கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும். இதனையடுத்து, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வங்கிகள் வைக்கும் ரொக்க இருப்பிற்கு வட்டி வழங்கப்படுகிறதா?
வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க இருப்பிற்கு வட்டி எதுவும் வழங்கப்படுவதில்லை.
சி.ஆர்.ஆர். இருப்பு வைக்க தவறும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படுமா?
நிர்ணயிக்கப்பட்ட ரொக்க இருப்பு விகிதத்தை விட குறைவாக இருப்பு வைத்தால் எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ அந்த தொகைக்கு வட்டி விதிக்க பாரத ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு.
ஒரு நாளில் எவ்வளவு இருப்பு வைக்க வேண்டுமோ அதற்கு குறைவாக வங்கிகள் இருப்பு வைத்தால், குறையும் தொகைக்கு வங்கி கடனிற்கான வட்டி விகிதத்தை காட்டிலும் 3 சதவீதம் கூடுதல் வட்டி விதிக்கப்படும். அடுத்த நாளும் இதே நிலை தொடர்ந்தால் இவ்விகிதம் மேலும் 2 சதவீதம் உயர்ந்து விடும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வங்கிகளுக்கான உரிமத்தை ரத்து செய்வது அல்லது அத்தகைய வங்கியை பெரிய வங்கி ஒன்றுடன் இணைக்கும் நடவடிக்கையை பாரத ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்.
ரொக்க இருப்பு விகிதத்தை நிர்ணயிக்க வரம்புகள் எதுவும் உள்ளதா?
பாரத ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படும் ரொக்க இருப்பு விகிதம் குறைந்தபட்சம் 3 சதவீதமாகவும் அதிகபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இதற்கு முன்னர் இருந்தது. இந்த விதிமுறை 2006&ஆம் ஆண்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது இதுபோன்ற விதிமுறைகள் கிடையாது.
பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 24&ந் தேதி அன்று நிதிக் கொள்கை ஆய்வு அறிக்கையை வெளியிட உள்ளது. அதில் ரொக்க இருப்பு விகிதம் மேலும் குறைக்கப்படுமா, இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Source: www.dailythanthi.com - 22.10.2008
No comments:
Post a Comment