கடன்பட அஞ்சு!
கடன் அட்டை கலாசாரம் என்பது சிறு பொறியாகக் கிளம்பி இன்று பெரிய காட்டுத் தீயாக பரவிவிட்டது. கடன் அட்டைகள் என்பவை காமதேனுவோ கற்பகவிருட்சமோ அல்ல. கடன் அட்டை காட்டி எதை வாங்கினாலும் அதை வட்டியும் அசலுமாகத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும், அவை இலவசம் அல்ல.
முதல் கடன் அட்டையை வாங்குவதுதான் சிறிது சிரமம். பிறகு அந்த அனுபவத்திலேயே மேலும் மேலும் பல அட்டைகளை வாங்கிவிடுகின்றனர். ஏற்கெனவே கடன் அட்டை வைத்திருப்பதையே ஒரு தகுதியாகக் கருதி பிற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் தருகின்றன என்பது வியப்பாக இருக்கிறது.
கடன் அட்டைகளை விற்க உதவும் தரகர்களுக்கு, அவர்கள் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தரகுத் தொகை கிடைத்துவிடுகிறது. வங்கிகள் தங்களிடம் உள்ள பணத்தை அதிக வட்டி கிடைக்கும் இனங்களுக்குத் திருப்ப முடிகிறது. வணிக நிறுவனங்களுக்குத் தங்களுடைய மின்னணு சாதனங்களையும், இதர நுகர்பொருள்களையும் எளிதில் விற்று பணமாக்க முடிகிறது. கடன் வாங்குகிறவர்களுக்கோ ""வெறும் கையில் முழம்'' போட முடிகிறது. இந்த வகையில் கடன் அட்டைகள் தொழில், வணிகத் துறைகளுக்குச் சேவையைச் செய்கிறது.
கடனைப் பெற்றவரால் அதைத் திரும்ப அடைக்க முடியாமல் போகும்போதோ, தவணை தவறும்போதோதான் கடன் அட்டையின் உண்மையான சொரூபம் தெரிகிறது. கடன் அட்டைகள் மீது வாங்கப்படும் கடன்களுக்கு வருஷாந்திர அடிப்படையில் 36% முதல் 49% வரைகூட வட்டி விதிக்கப்படுகிறது.
நம் நாட்டில் இப்போது கடன் அட்டைகள் மூலம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கட்ட முடியாமல் நிலுவையில் இருக்கும் தொகையின் அளவு 20,000 கோடி ரூபாயை எட்டிவிட்டது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகமிகக் குறைவு என்றாலும், இந்திய வங்கிகள் அளித்த கடன் அட்டை இன கணக்கில் இது கணிசமான தொகையாகும்.
பல மத்தியதர குடும்பங்களில் கடன் அட்டைகளை வைத்து கடன் வாங்கிய பல குடும்பத்தலைவர்கள் இரவில் தூக்கத்தை இழந்து, பகலில் நிம்மதியை இழந்து ஆழ்ந்த மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இந்தப் பட்டியலில் முதலிடம் பெறுகின்றனர். வீட்டுக்கடன், வாகனக் கடன், நகைக்கடன், துணிக்கடன் என்று ஒரே சமயத்தில் பல கடன்களை வாங்கியவர்களும் இருக்கின்றனர். இந்தக் கடன் சுமையிலிருந்து மீளவும், கடன்களை குறைந்த வட்டியுடனான நீண்டகாலத் தவணையுள்ள கடனாக மாற்றிக்கொள்ளவும் இப்போது வங்கிகளே தனி ஆலோசனை மையங்களைத் தொடங்கியுள்ளன. அத்தகையவர்கள் இப்போதாவது கடைப்பிடிக்க சில யோசனைகளைத் தெரிவிப்பது நல்லது என்றே தோன்றுகிறது.
முதலில் கடன் அட்டைகளின் எண்ணிக்கைகளைக் குறைத்து, குறைந்த வட்டியில் நல்லவிதமாக சேவை அளிக்கும் நிறுவனத்தின் கடன் அட்டையை மட்டும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய வருவாய் எவ்வளவு, அதில் அவசியமான செலவுகள் என்ன, தேவையற்ற செலவுகள் என்ன என்று மாதம்தோறும் ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்து, தேவையற்ற செலவுகளைப் படிப்படியாகக் குறையுங்கள். வீடு, நிலம் போன்ற உங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் மீதோ அல்லது தங்க நகைகளின் மீதோ குறைந்த வட்டி இனத்தில் கடனை வாங்கி, கடன் அட்டைகள் மீதான சிறு கடன்களையெல்லாம் வட்டியும் முதலுமாகச் செலுத்தி அடைத்துவிடுங்கள். ""ஒரே கடன் அட்டை, ஒரே கடன் தவணை'' என்று சுருக்கிக் கொள்ளுங்கள். மறுபடியும் புதுக் கடன் எதையும் வாங்காதீர்கள்.
உங்களுடைய வருமானத்தில் 10% தொகையை மாதந்தோறும் கட்டாயம் சேமியுங்கள். அதை சேமிப்பு என்று கருதாமல், அதையும் எதிர்காலத் தேவைக்கான ""நிரந்தரச் செலவாக''க் கருதுங்கள். அந்தத் தொகை உங்களுக்கு ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.
அதிக வட்டி செலுத்த வேண்டிய கடன்களை, குறைந்த வட்டியிலான கடனுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்ய சில நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் முன்வரும். அவை தரும் கடனை கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடாமல், அவை விதிக்கும் நிபந்தனைகள், சட்ட அம்சங்கள் போன்றவற்றைப் படித்துப் பார்த்து முடிவுக்கு வாருங்கள்.
வாழ்க்கையில் ஆடம்பரச் செலவுகளையும், போலி கெüரவத்துக்கான செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆயுள் இன்சூரன்ஸ், மருத்துவ இன்சூரன்ஸ் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளையும் அவசியம் எடுங்கள். நிதி நிர்வாகம் தொடர்பாக வீட்டில் அப்பா, அண்ணன் என்று பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் பேசி ஆலோசனை பெறுங்கள். மூத்தவர்களின் அறிவுரைகள் சமயத்தில் கசப்பாக இருந்தாலும், உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் நல்ல மருந்து என்பதை மறவாதீர்கள்.
தமிழ்நாட்டின் மரபே நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் மற்றவர்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லி பண்பாடு வழுவாமல் நடப்பதைப் பார்த்துக் கொள்வதுதான். கடன் இல்லாத வீடும் நாடும் யாருக்கும் அடிமையாகாது. தனிமனித சேமிப்பு நாட்டின் சேமிப்பாக மாறும் என்பதால், சேமிக்கப் பழகுங்கள். ""ஆன முதலின் அதிகம் செலவானால் மானம் அழிந்து, மதி கெட்டு,..'' என்று எச்சரிப்பது தமிழ் மூதுரை. அதை எந்நாளும் மறவாதீர்
Source: www.dinamani.com - Tuesday November 11 2008
No comments:
Post a Comment