I LOVE TAMIL


Saturday, November 8, 2008

தெரிந்தே செய்யும் தவறு!

தெரிந்தே செய்யும் தவறு!

கடந்த 17 ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்ட எச்சரிக்கைகள் அனைத்தும் இப்போது உண்மையாகி வருகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை அறிவிக்கப்பட்ட நேரத்தில் எழுப்பப்பட்ட முதலாவது எச்சரிக்கை, அரசின் தலையீடுகளை முழுமையாகத் தளர்த்துவதும், உலகமயம் என்கிற பெயரில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் நமது பொருளாதாரத்தை இணைப்பதும், நம்மைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதுதான். வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருளாதாரச் சரிவுகளை நேரிடுவதுபோல, வளரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு அதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சக்தி கிடையாது என்பதுதான் அந்த எச்சரிக்கைக்குக் காரணம்.

அமெரிக்காவில் அரசின் தலையீடு இல்லாததால் ஒரு சில தனியார் வீட்டுவசதி நிறுவனங்களும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்த தவறுகளுக்கும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்தியாவும் பலியாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் உலகமயமாக்கலின் வேதனை தரும் தாக்கம். அமெரிக்காவின் தோளைப் பிடித்துக் கொண்டிருக்க நாம் முடிவு செய்ததால், அந்த நாடு ஆட்டம் காணும்போது நாமும் ஆட்டம் காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

தன்னுடைய நாட்டு வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் திவாலாகத் தொடங்கி, அந்த வங்கிகளுக்குக் கடன் கொடுத்திருந்த நிதிநிறுவனங்கள் மூழ்கத் தொடங்கி, அந்த நிதிநிறுவனங்களில் முதலீடு செய்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை இழக்க நேரிட்ட நிலையில், தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நிதி நிறுவனங்களுக்குப் பண உதவி அளித்து மக்கள் மத்தியில் எழுந்த பீதியையும், பொருளாதாரத் தேக்கத்தையும் களைய முற்பட்டது. அப்படி எதுவுமே நடக்காமல், இந்தியாவில் திடீரென்று விலைவாசி உயர்கிறது, பங்குச் சந்தை சரிகிறது, ஏற்றுமதி குறைகிறது, அரசு தவிக்கிறது.

வரைமுறை இல்லாமல் அன்னிய முதலீடுகளைப் பங்குச்சந்தையில் அனுமதித்தால், எப்போதுமே நாம் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முப்பெரும் பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங் - சிதம்பரம் - அலுவாலியா குழுவினர் கேட்க மறுத்தனர். அவரவர் நாட்டில் பிரச்னைகள் வரும்போதோ, நமது நாட்டின்மீது அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கும்போதோ அல்லது வேண்டுமென்றே நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று நினைத்தாலோ, குறுகிய காலத்தில் அன்னிய முதலீடுகளைத் திருப்பி எடுப்பதன் மூலம் நமது பொருளாதாரம் சிதைக்கப்படும் ஆபத்து இருப்பதைத் தெரிந்தும் தெரியாததுபோல மன்மோகன்சிங்கும் சகாக்களும் இருந்தது ஏன்? புரியவில்லை.

பங்குச்சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரங்கள் எல்லாமே, சூதாட்ட மனப்போக்குள்ள பங்குத்தரகர்களின் கையில் அகப்பட்டுத் தவிக்கும் போக்கை உடையவை. அதனால்தான் நமது பழைய பொருளாதாரக் கொள்கை சேமிப்பின் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. மக்கள் ஊதாரித்தனமாகச் செலவிடுவதை ஆதரிக்காமல், தனிநபர் சேமிப்பு, அரசுத் தரப்பில் ஆஸ்தி அதிகரிப்பு, பொதுச் சொத்துகளை அதிகப்படுத்தும் முதலீடுகள் என்று முந்தைய பொருளாதார நிபுணர்கள் திட்டமிட்டனர்.

மக்கள், அரசு வங்கிகளிலும், அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும், அரசு நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும், தங்கத்திலும் முதலீடு செய்தனர். இந்த முதலீடுகள் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்பட்டன. இப்போது, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச்சந்தை என்று மக்களின் முதலீடுகள் தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்க வழி வகுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், உலகளாவிய தாக்கங்கள் நம்மைத் தள்ளாட வைக்கின்றன.

வங்கிகள் அதிகமாகக் கடன் வசதி அளித்துப் பொருளாதாரம் தேக்கமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நிதியமைச்சகத்தின் இப்போதைய முடிவு. இதற்காக, மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 3,00,000 கோடியை அரசு வங்கிகளுக்கு அளிக்கப் போகிறது. அந்த வங்கிகள் குறைந்த வட்டிக்குக் கடன்களை வாரி வழங்கப் போகின்றன. விளைவு? பணப்புழக்கம் அதிகரிக்கும். விலைவாசியும் அதிகரிக்கும். வாராக் கடன்களும் அதிகரிக்கும். முதலில் பிரகாசமாகத் தெரியும் பொருளாதாரம் விரைவில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரும்.

தெரிந்தே தவறு செய்கிறார்கள். கேட்டால் உலகம் போற்றும் பொருளாதார மேதைகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிக்கனத்தையும் சேமிப்பையும் வற்புறுத்தாமல், கடனை வாரி வழங்கி அகலக்கால் வைக்க வழிகாட்டுகிறார்கள். வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தனா, துந்தனா, துந்தனா!

Source: www.dinamani.com - Saturday November 8 2008

No comments: