I LOVE TAMIL


Saturday, November 22, 2008

கங்கை போலவே காவிரியும்!

கங்கை போலவே காவிரியும்!

கங்கையை தேசிய நதியாக அறிவிக்கத் தீர்மானித்து, அதற்காக தனி ஆணையம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.

கங்கை பாயும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநில அரசுகளுடன் கலந்து பேசி, ஆணையத்தின் அதிகார வரம்புகள் விரைவில் நிர்ணயிக்கப்பட்டு, விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே, மாசுபடும் கங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் "மத்திய கங்கை ஆணையம்' உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் எதுவுமே நிறைவேறவில்லை. "கங்கையை தேசிய நதியாக மத்திய அரசு அறிவித்து, தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டால்தான் கங்கையைக் காப்பாற்ற முடியும்' என்று கூறி, துவாரகா பீடம் சங்காராசாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி பல காலமாக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரி வந்தார். இதற்காக இயக்கங்களும் உருவாகின. இப்போது இந்தியாவின் முதல் தேசிய நதி கங்கை என்று அறிவிக்க உள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

இத்தனை நாள்களாக இல்லாத கருணை இப்போது மட்டும் கங்கை மீது ஏன் ஏற்பட்டது என்றால், கங்கை வெறும் சாக்கடையாக மாறிவிட்டதோ என்று அச்சப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனதுதான். சுமார் 2500 கிமீ நீளமுள்ள கங்கை நதியில் நாளொன்றுக்கு 36 லட்சம் கனஅடி அளவுக்கு தொழில்துறை கழிவுகள் கலக்கின்றன. இதுதவிர, நகர்ப்புற சாக்கடைகளும் இதைவிட பல மடங்கு கலக்கின்றன.

நதிகள் அனைத்தும், ஓடிக்கொண்டே தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் திறனை இயற்கை அளித்திருக்கிறது. ஆனால் அந்த திறனைச் செயல்படுத்த முடியாதபடி கங்கை மாசுபட்டுக் கிடக்கிறது என்பதால்தான் தேசிய நதியாக அறிவிக்க உள்ளனர். அமைக்கப்படவுள்ள ஆணையத்தின் முக்கிய நோக்கமே நதியில் ஓடும் நீரின் அளவு, தரம் இரண்டும் குறையாமல் பார்த்துக்கொள்வதுதான்.

கங்கையை மீண்டும் பழைய நிலைமைக்கு நலம் பெறச் செய்ய என்ன நடவடிக்கைகள் தேவை என்று பல சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல கருத்துகள் தெரிவித்துள்ளன. இவர்களில் கான்பூர் ஐஐடி சுற்றுச்சூழல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.டி அகர்வால் பரிந்துரைப்பவை: "கங்கையின் நீரோட்டத்தில் இடையிடையே மாறுபடும் நதியின் வேகம், குறையும் நீரின் அளவு, கலக்கும் கழிவுகளின் அதிகரிப்பு, பாழ்பட்ட நதிப்படுகை, சூரிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் தேங்குதல் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும். இதைச் செய்தால் கங்கை தானே உயிர் பெறும். சக்தி பெறும்' என்பதுதான்.

இங்கே குறிப்பிடப்படும் அனைத்து குறுக்கீடுகளுக்கும் நதியின் குறுக்கே அமையும் அணைகள்தான் காரணம். கங்கை நதியில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சுமார் 25-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியுள்ளன. புனல் மின்உற்பத்திக்குப் போதுமான நீரைத் தேக்கி வைத்து, நதியில் சிறிதளவு நீரைத்தான் விடுகின்றன. நதியில் எப்போதும் குறிப்பிட்ட கனஅடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனைகள் குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் குறைவான நீரில் கலக்கும் அதிக அளவு கழிவுகளைச் சுத்திகரிக்கும் திறன் கங்கைக்கு குறைந்துபோகிறது. பாழ்பட்டு, மணல் இல்லாமல் கிடக்கும் நதியால் தன்னைத்தானே சுத்திகரிக்க இயலாது.

கங்கை நதிக்கு என்ன கேடுகள் நேர்ந்துள்ளனவோ, எதனால் தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும் திறனை கங்கை இழந்து நிற்கிறதோ அவை அனைத்தும் இந்திய நதிகள் அனைத்துக்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக நமது காவிரி நதிக்கும் பொருந்தும்.

காவிரியைத் தடுத்துத் தடுத்து, அதன் வேகத்தை மாற்றி அமைத்து, திசை திருப்பித் தேக்கிவைத்து, காவிரி நதி முழுவதுமே மணல் இல்லாதபடி கொள்ளையடித்து, அத்தனை தொழிற் கழிவுகளையும் நகரக் கழிவுகளையும் காவிரியில் கலந்து, தஞ்சை நெற்களஞ்சியத்தில் கொண்டுபோய் சேர்க்கிறோம். ரசாயன உரங்களுடன் இந்த நஞ்சையும் உறிஞ்சியெடுத்த நெல்மணிகளைத்தான் நாம் உண்கிறோம். நஞ்சை பாய்ச்சி நஞ்சை விளைவிக்கின்றோம். கர்நாடகத்தில் விளையும் நெல்மணிகளையும் காவிரிப் படுகையில் விளையும் நெல் மணிகளையும் ஆய்வு செய்தாலே போதும், எவ்வளவு நஞ்சு கலந்துகிடக்கிறது என்பது புரியும். இந்த நஞ்சுக்குக் காரணம் கர்நாடகம் அல்ல. பெரும்பாலும் தமிழகம்தான் பொறுப்பு.

கங்கையை மட்டுமல்ல காவிரியையும் தேசிய நதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு குரல் கூட தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கவில்லை. ஒரு வேளை இந்தப் பிரச்னையை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கினால், பெங்களூரில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து நேரும் என்ற அச்சத்தால் இருக்கலாம். மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால் யாருடன் கூட்டணி என்பது உறுதியாகாத நிலையில் இதைப் பற்றிப் பேசி, பின்னர் சங்கடப்பட வேண்டாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம்.

ஆனால் காவிரியைத் தேசிய நதியாக அறிவித்து, அதை முழுமையாகக் கண்காணிக்கும் பொறுப்பை மத்திய அரசின் ஆணையம் ஏற்றால்தான் காவிரி நலம் பெறுவாள். காவிரிக்கு "உயிர்' இருக்கும்போதே சிகிச்சையைத் தொடங்கிவிடுவதுதான் நல்லது.

Source: www.dinamani.com - Saturday November 22 2008

No comments: