I LOVE TAMIL


Saturday, November 29, 2008

விளையாட்டு பொம்மைகள்

விளையாட்டு பொம்மைகள்

மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளை (20 மைக்ரான் அளவு) பயன்படுத்தக்கூடாது என்று தடை உள்ளதால், அனைவரும் தடிமனான பிளாஸ்டிக் பைகளுக்கு மாறினோமே தவிர, பிளாஸ்டிக் தீங்கானது என்பதை உணர்ந்து செயல்படவில்லை. இதே உணர்வற்ற தன்மைதான் குழந்தைகளுக்கான பொம்மைகள் தேர்வு செய்வதிலும்!.

இந்தியாவைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு எந்த வகையான பொம்மைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இதுவரை அமலில் இல்லை என்பதே அதற்குச் சான்று.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பொம்மைகளில் சில ரசாயனப் பொருள்கள் கலந்திருந்தால் அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. இருந்தும்கூட, நடைமுறையில் அந்தச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக அங்குள்ள அமைப்புகள் குறை கூறுகின்றன. அந்நாட்டில் பொம்மை தொடர்பான விபத்துகளில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 80,000 என்கிற செய்தியைப் பார்க்கும்போது, இந்தியாவில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தும் ஆர்வம்கூட நம்மிடம் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.

இந்தியக் குடும்பங்களில் குழந்தைகளின் முதல் உயிர்த்துடிப்பான விளையாட்டுப் பொம்மைகள் - சொன்னால் வேடிக்கையாக இருக்கும் - தாத்தா பாட்டிதான். தாத்தா பாட்டிகளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தையும் தாய் தந்தையருடன் பழகும் விதத்தையும் எளிதாக வேறுபடுத்திவிட முடியும். இருந்தாலும் குழந்தைகளுக்கென தனியாக, வண்ணங்கள் தீட்டப்படாத மரப்பாச்சி பொம்மைகள், மரத்தால் செய்யப்பட்ட யானை மற்றும் விலங்கு உருவங்கள், மரச் சொப்புகள், பனைவோலையில் செய்யப்பட்ட கிலுகிலுப்பைகள், இப்படியாகத்தான் விளையாட்டுப் பொருளாக கொடுக்கப்பட்டன. அதுவும்கூட வயதுக்கு ஏற்ப வேறு பொம்மைகளும், நடைவண்டிகளுமாக அவர்களது விளையாட்டுப் பொருள்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால், தற்போது இவையெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்கு ரிமோட் கார், பல்டி அடிக்கும் யந்திர மனிதன், ஜாய் ஸ்டிக், செல்போன், ஸ்பைடர்மேன், ஏகே 47 துப்பாக்கி என வாங்கித் தரப்படுகின்றன. இவை அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்கள். உடைந்தால் குழந்தையை காயப்படுத்தும் தன்மை உள்ளவை. இவற்றில் வளைந்து கொடுக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்துமே அதன் ரசாயனத் தன்மை காரணமாக குழந்தையின் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை.

குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் மீது பூசப்படும் வண்ணங்களில் காரீயம் ( லெட்) அதிக அளவு இருப்பதாகக் கூறி, அமெரிக்காவில் கோடிக் கணக்கில் பொம்மைகளை அதைத் தயாரித்த நிறுவனங்களே திரும்பப் பெறும்படி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைவருமே தங்கள் பொம்மைகளை வாயில் வைத்து கடிக்காமல் விளையாடுவதே இல்லை என்பதால் செயற்கை வண்ணங்கள் வழியாக குழந்தைகளுக்கு காரீயம் உள்ளுக்குச் சென்று, நுரையீரல் தொடர்பான நோய்கள், குறிப்பாக ஆஸ்துமா மற்றும் புற்றுநோய்களுக்கு இடம்தருகின்றன

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு எந்தெந்த பொம்மைகளை வாங்கித் தருவது, அவர்களை எந்தப் பொருள்களுடன் மட்டும் விளையாட வைப்பது என்ற ஒரு வாரப் பயிற்சியை தாய்மார்களுக்கு அளித்த பிறகு, அவர்தம் குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடி காயமடைந்து மருத்துவமனைக்கு வருவது இல்லாமல் ஆகிவிட்டது என்ற புள்ளிவிவரம் அண்மையில் வெளியானது. அத்தகைய பயிற்சிகள்கூட இந்தியாவில் கிடையாது.

குழந்தைகள் நுரையீரல் பாதிப்பினால் இளமையிலேயே ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளாவதும், மருத்துவச் செலவுகளும் தவிர்க்கப்பட வேண்டுமானால், பொம்மைகள் விஷயத்திலும் கவனமாக இருந்தால் சாத்தியமாகும். தற்போது குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் அவர்களை கருணையோடு தொடர்பில்லாத இயந்திரத்தனமான மனிதர்களாக மாற்றுகின்றன என்பதுதான் உளவியல் மருத்துவர்களின் கணிப்பு.

குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் நகைகள், உடைகள், பொம்மைகள், அதன் மேல் பூசப்படும் வண்ணங்கள், குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு, சாக்லெட், ஐஸ் கிரீம் ஆகியவற்றில் கலக்கப்படும் வண்ணங்கள் ஆகியவற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ரசாயனங்கள் என்னவென்று அரசு அறிவிக்க வேண்டும். இன்னமும் நம் குழந்தைகளுக்கு எது நன்மை என்று தெரியாத விளையாட்டுப் பொம்மைகளாக பெற்றோர் இருத்தல் கூடாது.

சீனாவில் பால்பவுடரில் கலப்படம் என்றதும், தமிழ்நாடு முழுவதிலும் எல்லா கடைகளிலும் விற்கப்படும் குழந்தை உணவுப் பொருள்களை அதிகாரிகள் சோதிப்பது தீவிரமாக நடைபெறுகிறது.

கவிஞர் கண்ணதாசன் பாடியதைப் போல, ""பட்டபின் அறிவதே பழக்கமென்று ஆன பின்பு, கெட்டவன் அழுகை தானே கெடுவதை நிறுத்த வேண்டும். பட்டுப் பின் தேறல்தானே "பட்டணத்தார்' வாழ்க்கை!''.

Source: www.dinamani.com - Friday November 28 2008

No comments: