I LOVE TAMIL


Monday, July 19, 2010

விவசாய அழிவுக்கே விரிவாக்கத் திட்டம்

ஆர்.எஸ். நாராயணன்

இந்தியாவின் ஒட்டுமொத்த வருமான மதிப்பு உயர்கிறது. ஆனால், ஆண்டுக்காண்டு விவசாயம் வழங்கும் வருமான மதிப்பு இறங்கிக் கொண்டே போகிறது. இன்றல்ல, நேற்றல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பே விவசாய வருமான மதிப்பு இறங்கிவிட்டது.

ஆண்டுதோறும் பட்ஜெட் சமர்ப்பிக்கும்போது நமது நிதி அமைச்சர்கள் இதை ஒரு புதிய விஷயமாக ஓராண்டுக்கு முன் நிகழ்ந்ததாக முகமன் கூறி, இனி விவசாய வருமானத்தை உயர்த்த இந்தத் துறையில் இப்படி இப்படிப் பணம் ஒதுக்குவதாகச் சொல்வதுண்டு.

விவசாயத்தைப் பொறுத்தவரை பட்ஜெட் கூட்டம் என்பது ஒரு திதி. அப்பா சிரார்த்தத்தை மத்திய அரசு செய்யும். அம்மாக்களின் சிரார்த்தத்தை மாநில அரசுகள் செய்யும். விவசாய வளர்ச்சி என்பது இவ்வாறு விவசாய நினைவாஞ்சலிகளாக மாறிவிட்டது.  2010-2011 பட்ஜெட்டில் விவசாய உற்பத்திக்கு வழக்கம்போல் முதலிடம் உண்டு.

 நிதியமைச்சரின் கூற்றுப்படி, ""பசுமைப்புரட்சி ஆழமாக வேர்விடாத ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமைப்புரட்சியை உருவாக்க ரூ. 400 கோடி ஒதுக்கப்படுகிறது. பருப்பு உற்பத்தியைப் பெருக்கவும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை உயர்த்தவும் ரூ. 300 கோடி. ரூ. 3,75,000 கோடி விவசாயக் கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    மண்வள மீட்பு, மண் பாதுகாப்பு, பல்லுயிர்ப்பெருக்கம் தொடர்பான வள மீட்புப் பண்ணை அமைப்புக்கு பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு ரூ. 200 கோடி''.

2010 - 2011 -ல், இறந்துவிட்ட விவசாயத்துக்குரிய திதி நாளில் மதிப்புக்குரிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்படி வேதமந்திரங்களை மக்களவையில் ஓதியுள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் வீரபாண்டியார் தேவாரமாகவோ, திருவாசகமாகவோ பாடினார். சம்ஸ்கிருதத்தில் பாடினால் என்ன? தமிழில் பாடினால் என்ன? ஆண்டுதோறும் விவசாயத்துக்கு சங்கு ஊதும் நாடகம் தொடர்கிறது.

பசுமைப்புரட்சியின் எதிர்விளைவால் இழக்கப்பட்ட மண்வளப் பாதுகாப்பு என்ற பெயரில் பஞ்சாப், ஹரியாணாவுக்கு வழங்கப்படும் நிதி ரூ. 200 கோடி. பசுமைப்புரட்சியைப் புகுத்தி வடகிழக்குப் பகுதியில் மண்வளத்தை அழிக்க நிதி உதவி ரூ. 400 கோடி!  அதாவது, ஒரிசா, பிகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் புதிய பசுமைப்புரட்சி என்றால் மேலும் ரசாயன உரம், பி.ட்டி விதை விநியோகம், உயிர்க்கொல்லி புகுத்தப்படும். அப்பகுதிகளில்தான் பாரம்பரியங்கள் சற்று எஞ்சியுள்ளன. குறிப்பாகப் பல்லுயிர்ப்பெருக்க வளர்ச்சிக்காக அனைத்துலக நிதியில் இயங்கும் இங்குள்ள சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் தென்கிழக்குப்பகுதி கிராமங்களிலிருந்துதான் பாரம்பரிய விதைகளை வாங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. இனி இதற்கும் ஆபத்து இருக்கிறது. மண்வளத்தைக் காப்பாற்ற ரூ. 200 கோடி. மண்வளத்தை அழிக்க ரூ. 400 கோடி. விவசாயத்துக்கு திவசம் செய்யும் கடமை அமைச்சர்களுக்கு உள்ளபோது, அவர்களிடமிருந்து இப்படித்தான் எதிர்பார்க்க முடியும்.

ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாடு வரை விரிந்து பரந்துள்ள பீடபூமிப்பகுதிகளில் பருப்பும் எண்ணெய் வித்தும் உற்பத்தி உயர ரூ. 300 கோடி.

இந்த ரூ. 300 கோடியை 60 ஆயிரத்தால் வகுக்க வேண்டும். ஒரு கிராமத்துக்கு 5 லட்சம்  என்று வகுத்து 60,000 பயறு - பருப்பு - எண்ணெய் வித்து கிராமங்கள் உருவாகப் போகின்றன. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்? 2,000 முதல் 3,000 கிராமம் பயன் பெறலாம். எல்லாம் திட்டப்படி செயல்பட வேண்டும். செயல்திட்டம் தயாரானதாகத் தெரியவில்லை. சாதாரணமாக மத்திய அரசு வழங்கும் பணத்தை மாநிலம் வேறு செலவுக்குப் பயன்படுத்தலாம்.

விவசாயிகளுக்குக் கடன் ரூ. 3,75,000 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் ஒரு புதிய முதலீடு அல்ல. பெரும்பாலும் புக் அட்ஜஸ்ட்மெண்ட்தான். கடந்த ஆண்டு கடனை அடைக்கவே சரியாக இருக்கும். இது ஒரு வட்டிக்கடன். (மாதம் 1 சதவீதம்) நம் மக்கள் 5 வட்டி, 10 வட்டி என்று கடன் வாங்கியதை 1 வட்டியாக மாற்றிக்கொள்ள உதவும்.

தேச வருமானத்தில் விவசாய வருமானத்தின் பங்கு மிகவும் குறைந்துவிட்டது என்று குறைப்படும் திட்ட நிபுணர்களும், ஆட்சியாளர்களும் எந்த அளவுக்கு இத்துறைக்குப் பணம் ஒதுக்கப்படுகிறது என்று கணக்குப் பார்த்தால் உண்மை தெரியும். தொழில்துறை, சாலை மேம்பாடு என்று எடுத்துக்கொண்டால் ஆயிரங்கோடி, லட்சங்கோடி என்று பணம் செலவழிக்கப்படுகிறது.

விவசாயம் என்றால் ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி என்ற அளவில்தான் பணம் ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் பணமும் உருப்படியாக உற்பத்திக்கு உதவுவதாக இல்லை. அமைச்சர், கட்சித் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா? யாரோ செலவழிப்பதற்கு யாரோ திட்டம் போடுவதால் பட்ஜெட் அறிவிப்பு பற்றி சீரியஸôக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நல்ல திட்டங்கள் விவசாயத்தில் மட்டுமல்ல; நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, நீர்வடிப்பகுதி மேம்பாடு என்ற திட்டங்களுக்கும் மாவட்டந்தோறும் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.

உண்மையில், அப்படிப் புரளும் பணம் அதற்குரிய பணிகளுக்குச் செலவிடப்பட்டிருந்தால், நாடு செழித்திருக்கும். அப்பணிகளுக்கு அப்பணங்களைச் செலவு செய்ய மாவட்டங்களும் வட்டங்களும் தனிரூட் போட்டு கபளீகரம் செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவார்கள். திறந்த மனமுள்ள ஊழலுக்கு இடம் கொடுக்காத  நல்ல அதிகாரிகளும் அறிவார்கள்.

அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது. ஆகவே, உள்ளூரில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்களை மானாவாரி பூமியில் விளைவிக்க வேண்டும் என்பது நல்ல கொள்கை. மானாவாரி பூமியில் நெல், கோதுமை, புஞ்சைத் தானியங்களையும் நன்கு திட்டமிட்டுப் பயிரிடலாம்.

மானாவாரியில் கிடைக்கும் நீரை உகந்த அளவில் பயன்படுத்த வேண்டுமே தவிர, மாபெரும் அணைக்கட்டுத் திட்டமெல்லாம் போட்டு மண்வளத்தைக் கெடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஸ்ப்ரிங்க்ளர் அமைக்கலாம். ரைன்கன் அமைக்கவும் வழி செய்யலாம். முழு மானியம் வழங்கினால் ஸ்ப்ரிங்க்ளர், ரைன்கன் மூலம் உற்பத்தியை உயர்த்தலாம்.

பருப்புவகைப் பயிர்களையும் நேரடி விதைப்பாக நெல்லையும், பலவிதமான புஞ்சைத் தானியங்களையும் மானாவாரியில் பயிரிட்டு உற்பத்தியை உயர்த்தப் பல்லாயிரம் கோடி ரூபாய் விவசாயத்துக்கு ஒதுக்கிச் சரியான முறையில் செலவிட வேண்டும்.

அரிசி, கோதுமை, பருப்பு விலை உயர்ந்த அளவில் எண்ணெய் வித்துகளின் விலை உயரவில்லை. நிலக்கடலைப்பருப்பு, தேங்காய் விலைகள் மந்தமாயுள்ளன. தேங்காய் விலை 30 ஆண்டுக்கு முன் விற்ற விலைதான் இன்றும். திண்டுக்கல் அய்யம்பாளையம், சோழவந்தான் பகுதிகளில் விவசாயிகளுக்கு சராசரி ரூ. 2.50 என்ற விலைக்குத்தான் உரிக்காத தேங்காய்கள் இறக்கியவுடன் கிட்டுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் தேங்காயில் லாபம் எடுத்துத் தங்கள் குழந்தைகளை நகரங்களில் நல்ல படிப்புக்குச் செலவு செய்தார்கள். இன்று தென்னந்தோப்புகளையே விற்றுத்தான் படிப்புச் செலவும், மருத்துவச் செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பொதுவாக பருப்புகளாகட்டும் எண்ணெய்வித்துகளாகட்டும் அங்காடிகளில் அவற்றுக்குரிய லாபமான விலை கிடைத்தால் விவசாயிகளுக்கு எந்த உதவியும் தேவையில்லை. எவ்வளவுதான் அரசு திட்டங்கள் போட்டு பருப்பு - எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தி உயர்வுக்கு என்று பணம் செலவழித்தாலும்கூட உற்பத்தி உயராது. அங்காடியில் நல்ல விலைக்கு விவசாயிகளின் சரக்கு விலை போனால்தான் அந்த விவசாயி தாக்குப்பிடிப்பான்.

பணவீக்கத்தால் விலை உயர்கிறது. பணவீக்கம் என்பது நுகர்வோருக்கு மட்டும் பிரச்னை இல்லை. விவசாயிகளுக்கும் பிரச்னைதான்.

கடந்த முப்பது ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி உயரவும் சமையல் எண்ணெய்க்குரிய எண்ணெய் வித்து உற்பத்தி உயரவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏன் எந்தப் பயனும் இல்லாமல் போனது? மக்களை வாழ வைக்க வேண்டிய விவசாயம் நிலை தடுமாறிச் செல்கிறது.

மண்ணை விஷமாக்காமல் வளப்படுத்தி நலவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய விவசாயமே நோய்க்குறிகளுடன் காட்சியளிக்கிறது. விவசாயத்தை மேலும் நோயாக்க பசுமைப்புரட்சி கிழக்கு இந்தியாவுக்குப் புறப்படுகிறதாம். இது மேலும் அழிவுக்கு வழிகாட்டுவதாயுள்ளது.

இந்தியா முழுவதுமே மண் விஷமாகிவிட்டது. பஞ்சாப் - ஹரியாணாவில் மட்டுமே ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கும் பணி நிகழ்கிறதாம்! எல்லா இந்திய மாநிலங்களிலும் மண்வளப் பாதுகாப்புக்குரிய இயற்கை இடுபொருள் பயன்பாடுகளுக்கும், இயற்கைப் பூச்சி விரட்டி உற்பத்திப் பயன்பாடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு மானியம் வழங்காமல் ரசாயன உரங்களுக்கும் விஷமான பூச்சி மருந்துக்கும் வழங்கப்படும் மானியங்கள் இறுதியில் விவசாயத்தை முற்றிலும் அழித்துவிடும் ஆபத்து உள்ளது.

நன்றி: www.dinamani.com - 15 Jul 2010 

           

         

No comments: