பசுமை இல்ல வாயு பற்றியும், புவி வெப்பமடைதல் பற்றியும் யாராவது எழுதினாலோ, பேசினாலோ அவர்கள் தேவையில்லாமல் மக்களைப் பயமுறுத்தும் எதிர்மறைச் சிந்தனையாளர்கள் என்பதுபோல மிகவும் சாதுர்யமாகத் தங்களது விளம்பர யுக்திகளின் மூலம் வர்ணிக்க முற்படுகின்றன, பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமீட்டும் எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று எச்சரித்தால், மனித இனம் வசதியாக வாழ்வதைப் பார்க்கப் பிடிக்காத வயிற்றெரிச்சல் வாதிகள் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
இயற்கையுடன் விளையாடத் தொடங்கி இருக்கிறோம். ஒருசில தலைமுறைகள் மனித இனம், அதிலும் ஒரு சிறிய விழுக்காடு மட்டும், வசதியாக வாழ்வதற்காக வருங்கால உலகத்தையே பாலைவனமாக்கும் முயற்சி அரங்கேறி வருகிறது. இதன் விளைவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னும்கூட மனிதன் சுதாரித்துக் கொண்டு, வசதிகளைச் சுருக்கிக் கொண்டு வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முன்வராமல் போனால் அதை என்னென்று கூறுவது?
இந்த ஆண்டு ரஷியா இதுவரை காணாத வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட ரஷிய நாட்டு மக்கள், ஏரிகள், நதிகள் என்று பெரும் திரளாகப் படையெடுத்துக் கோடை வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ள முற்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 233 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். பூமி வெப்பமடைதல் பொய்யென்றால், ரஷியாவில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்குவானேன்?
இந்தியாவுக்கு வருவோம். இமயமலையில் பனிப்பாறைகள் உருகி, பனிச் சிகரத்தின் உயரம் கணிசமாகக் குறைந்து வருகிறதே, அது ஏன்? டேவிட் ப்ரிஷியர்ஸ் என்கிற அமெரிக்கர் 1983-லிருந்து ஐந்து தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோதெல்லாம் இமயமலையையும், அதன் பனிப்பாறைகளையும், சிகரங்களையும் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பவர். பனிச்சிகரங்களின் உயரம் குறைந்து வருவது அவருக்கு அதிர்ச்சி அளித்ததால், முன்பு எந்த இடத்திலிருந்து ஒரு சிகரத்தைப் படம் பிடித்தாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் படமெடுத்துப் பதிவு செய்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.
சுமார் நாற்பது மாடிக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடமாகச் சுருங்கினால் எப்படி இருக்கும், அதுபோல பல பனிச் சிகரங்கள் சுருங்கி இருப்பதை டேவிட் ப்ரிஷியர்ஸ் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறார். ருங்பெக் பனிச் சிகரம் செங்குத்தாக சுமார் 330 அடி உயரம் குறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.
இமயமலையிலுள்ள பல பனிச் சிகரங்கள் அசுர வேகத்தில் சுருங்கத் தொடங்கி இருப்பதை சீன ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படியே போனால், கைலாயம்கூடக் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா போன்ற பனிச் சிகரங்கள் ஆண்டுக்கு 26 அடி உயரம் குறைந்து வருவதாகத் தெரிகிறது.
இதற்கு மூல காரணம் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு. வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உள்வாங்க இயற்கையால் முடியாமல் போகிறது. காற்று மண்டலத்தில் வியாபித்துவிட்டிருக்கும் கரியமில வாயுவால் வானமண்டலமே வெப்பமடைந்திருக்கிறது.
மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையின் அளவு குறைந்து விட்டிருக்கிறது. பருவநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, உருகும் பனியை ஈடுகட்டும் அளவுக்கு குளிர்காலத்தில் பனி உறைவது இல்லை. மேலும், பெட்ரோல், டீசல் புகையிலிருந்து வெளியேறும் கரியமில வாயு பனிச் சிகரங்களில் படர்வதால் வழக்கத்தைவிட அதிகமாக பனிச்சிகரம் உருகிவிடுகிறது; பனி உறைவதும் இல்லை.
புவி வெப்பமடைதல், பனிச் சிகரங்கள் உறைதல் போன்றவைகளின் தொடர்ச்சியாக நாம் சந்திக்கப் போகும் சவால் இன்னொன்றும் இருக்கிறது. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் வெளியாகி இருக்கும் "சயன்ஸ்' இதழ், இதன் தொடர்விளைவுகள் சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகளைப் பெரிய அளவிலும், கங்கை, சீனாவில் பாயும் மஞ்சள் நதி மற்றும் யாங்க்ட்ஸ் நதிகளை சிறிய அளவிலும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது.
சிந்து மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 60 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் தன்மையது இந்த பனிச் சிகரங்கள் உருகும் போக்கு என்பதை நாம் உணர்வதாகவே தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், குறிக்கோளையும் நிர்ணயிப்பது பல பில்லியன் டாலர் லாபம் மட்டுமே. பெருவாரியான மத்தியதர, மேல் மத்தியதர, பணக்கார மக்களின் எண்ணப்போக்கை நிர்ணயிப்பது இன்று அனுபவிக்கும் கார், ஏ.சி., குளிர்பதனப் பெட்டி, விமானம் போன்ற வாழ்க்கை வசதிகள் மட்டுமே.
"எப்போதோ வரப்போகும் ஆபத்தைப் பற்றி இப்போதே சிந்தித்துக் கவலைப்படுவது போன்ற முட்டாள்தனம் இருக்க முடியுமா? புவி வெப்பமடைதல், கரியமில வாயு, பனிச் சிகரங்கள் உருகுதல் என்றெல்லாம் இந்த எதிர்மறைச் சிந்தனையாளர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்? நாம் அப்போது உயிரோடு இருக்கப் போகிறோமா? இருப்பதுவரை சுகமாக வாழ்வதை அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் நாளையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்'' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி-
உங்களுக்கெல்லாம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிடையாதா? வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே உங்களுக்கு இல்லையா?
No comments:
Post a Comment