I LOVE TAMIL


Monday, July 26, 2010

தகுதிச் சுற்றிலேயே தள்ளாட்டம்!


உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தை ஒரு மாத காலம் ஈர்த்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 4.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பா கண்டத்தில் உள்ள சிறிய நாடான ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

1920-ம் ஆண்டு கால்பந்து விளையாட ஆரம்பித்த ஸ்பெயின், 1934-ம் ஆண்டு முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. அதன்பிறகு 10 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற ஸ்பெயினால் கோப்பையை வெல்லமுடியவில்லை.  

இருப்பினும் தொடர்ந்து முயற்சித்த ஸ்பெயின், 2010 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனது. உலகக் கோப்பையில் பங்கேற்க ஆரம்பித்து 75 ஆண்டுகள் கழித்து கோப்பையை வென்று நீண்டகாலக் கனவை நனவாக்கியுள்ளது. 

உலகக் கோப்பை போட்டியில் முதல் ஆட்டத்தை தோல்வியில் துவங்கினாலும், இறுதி ஆட்டத்தை வெற்றியில் முடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின். முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் தோற்றபோது ஸ்பெயின் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளானார் கேப்டனும், கோல்கீப்பருமான இகர் காஸில்லஸ்.   

அதன்பிறகு நடைபெற்ற எல்லா ஆட்டங்களிலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது ஸ்பெயின். பெரிய அளவில் கோல்களை அடிக்காவிட்டாலும், எதிரணிகளை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது தான் ஸ்பெயினுடைய வெற்றியின் ரகசியம். 

உலகக் கோப்பையில் லீக் சுற்றில் சிலிக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஒரு கோல் மட்டுமே அடித்து வெற்றிபெற்றது ஸ்பெயின். முதலில் விமர்சனத்துக்குள்ளான கேப்டன் காஸில்லஸ் கோப்பையைக் கைப்பற்றி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவரின் கடும் போராட்டத்துக்குக் கிடைத்ததுதான் சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் குளோவ் விருது.   

உலகக் கோப்பையில் சாம்பியனாகி உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்பெயினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்காமல் இருக்க முடியாது. ஸ்பெயினை பாராட்டும் அதேநேரத்தில் கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் நிலையை நினைத்தால் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு வழியில்லை. 

உலகின் மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் நாடுகள் எல்லாம் உலகக் கோப்பை கால்பந்தில் ஜொலிக்கின்றன. ஆனால் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் இந்தியாவோ தகுதிச்சுற்றிலேயே தள்ளாடுகிறது. கால்பந்து விளையாட ஆரம்பித்து 60 ஆண்டுகளைக் கடந்தபோதும் ஒருமுறைகூட உலகக் கோப்பையில் பங்கேற்றதில்லை என்பது வேதனைக்குரியது.  

1948-ம் ஆண்டு முதல் கால்பந்து விளையாடிவரும் இந்திய அணி, 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் முதன்முறையாக விளையாடத் தகுதிபெற்றது. ஆனால் காலணி (ஷூ) இல்லாமல் விளையாடுவதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) தடைவிதித்ததாலும், பிரேசிலுக்கு செல்வதற்கான பயணச் செலவுகள் அதிகம் என்பதாலும் இந்தியா உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. 

1954-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாட பிஃபா தடை விதித்தது. அதன்பிறகு 1958 முதல் 1982 வரை இந்தியா போட்டிகளில் பங்கேற்கவில்லை. 1986 முதல் 2010 வரை 24 ஆண்டுகளாகப் பங்கேற்று வரும் இந்திய கால்பந்து அணியால் உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறமுடியவில்லை.  

2010 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் 205 நாடுகள் பங்கேற்றன. ஆசியக் கண்டத்திலிருந்து இந்தியா உள்பட 43 நாடுகள் பங்கேற்றன. 

உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்ற 32 அணிகளில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவை ஜப்பான், வடகொரியா, தென்கொரியா அணிகள் மட்டுமே.  

இந்திய கால்பந்து அணியில் இப்போதைய கேப்டன் பாய்ச்சுங் பூட்டியாவைத் தவிர மற்ற வீரர்கள் யார் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. உலகக் கோப்பையில்தான் இப்படி என்றால் ஆசியக் கோப்பையிலோ அதைவிட மோசம். 

1960 முதல் பங்கேற்று வரும் இந்திய அணி, 1964, 1984-ம் ஆண்டுகளில் மட்டுமே விளையாடத் தகுதிபெற்றது. 1964-ல் இரண்டாம் இடத்தைப்பெற்ற இந்திய அணி, 1984-ல் முதல் சுற்றிலேயே வெளியேறியது.  

உலகின் குட்டி நாடுகள் எல்லாம் உலகக்கோப்பையில் ஜொலிக்கின்றன. இந்தியாவோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.  கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வீரர்களை உருவாக்கத் தரமான ஆடுகளங்கள், பயிற்சியாளர்கள் அவசியம். ஆனால் அவை இரண்டுமே இந்தியாவில் இல்லை என்பது மிகப்பெரிய குறை. 

நம்முடைய விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களோ விளையாட்டைப் பற்றியோ, வீரர்களைப் பற்றியோ, மைதானங்கள் பற்றியோ கண்டுகொண்டதாகவோ, கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளப்  போராடும் விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களுக்கு விளையாட்டைப் பற்றிச் சிந்திக்க நேரம் ஏது?

விளையாட்டு அமைப்புகளும், பயிற்சியாளர்களும் கவனம் செலுத்தாத வரையில் கால்பந்து விளையாட்டில் கோப்பை என்பது இந்தியாவுக்குக் கானல் நீர்தான். 

  நன்றி: www.dinamani.com -   22 Jul 2010

No comments: