19 மாநிலங்களில் நிலத்தடி நீரில் மாசு : அதிர்ச்சியூட்டும் ஆய்வு
புதுடில்லி: "தமிழகம் உட்பட 19 மாநிலங்களில், நிலத்தடி நீர் அசுத்தமாகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது என்பது அரிதாக இருக்கும்' என ஆய்வில் தெரியவந்துள்ளது.விரிவடைந்து நகரங்கள், பெருகிவரும் வீடுகள், போன்றவற்றால் நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து வருகிறது. நகருக்குவெளியே உள்ள ஏரி, குட்டை, குளங்கள் எல்லாம் மனைகளாகி வருகின்றன. இவைதான் நிலத்தடிக்கு ஆதாரமாக விளங்கியவை. நகரங்கள் விரிவடைவதால், இவையெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகி வருகின்றன.
கொஞ்ச தண்ணீரும் இனி : இப்படி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் பல ஆண்டுகளாக குடியிருந்துவிட்டால், அவருக்கு சொந்தமாக்கி கொள்ளவும் அரசுகள் சலுகை காட்டுகின்றன. இதன் காரணமாக, நீர்நிலைக் கால்வாய்கள் எல்லாம் இப்போது கழிவு நீரை வெளியேற்றும் சாக்கடைகளாக மாறுகின்றன. இதனால் சில இடங்களில் தண்ணீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக பல இடங்களில் மக்கள் புலமபுகின்றனர். தற்போது பல இடங்களில் கிடைக்கும் கொஞ்ச தண்ணீரும் இனி எத்தனை நாளைக்கு என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்போதுள்ள நிலையில் தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 200 மாவட்டங்களில், நிலத்தடி நீர் அசுத்தமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.நிலத்தடி நீர் அசுத்தமாகிறது என்றால், உப்புத்தன்மை, இரும்பு, புளோரைட், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நச்சுத்தன்மை : உப்புத்தன்மையும், இரும்பும் அதிகமாக தண்ணீரில் கலந்து இருப்பதால் காய்கறிகளை வேகவைத்தால், பசுமைத்தன்மை போய் கறுப்பாக மாறிவிடும். அதே போல் புளோரைடும் , நச்சுத்தன்மையும் இருந்தால் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். மேலும் புளோரைட் அதிகமுள்ள தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும். நச்சுத்தன்மை அதிகமுள்ள தண்ணீரால் தோல் நோய்கள், தோல் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பீகார் ,அசாம், அரியானா, இமாச்சலபிரதேசம், குஜராத், ம.பி., உ.பி., மகாராஷ்டிரா, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், டில்லி ஆகிய மாநிலங்களில், மொத்தம் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில், நிலத்தடி நீர் அசுத்தமாகி வருகிறது தெரியவந்துள்ளது.
டில்லியில் நஜாப்கர், கஞ்ச்வாலா, மெக்ருலி, மண்டலங்களில் நிலத்தடி நீரானது உப்பாக உள்ளது. இதே நிலை உ.பி.யில் ஆக்ரா, மதுரா, ஆகிய மாவட்டங்களில் நிலவுகிறது.பீகாரில் பாட்னா மற்றும் போஜ்பூர் மாவட்டங்களிலும், உ.பி.யில் பாலியா, மேற்கு வங்கத்தில் மால்டா, நாடியா, ஹூக்ளி, முர்சிதாபாத், ஹவுரா ஆகிய மாவட்டங்களிலும் நீரில் நச்சுத்தன்மை கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.
Source : www.dinamalar.com - 06.10.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment