I LOVE TAMIL


Friday, October 17, 2008

உறக்கம் கலையட்டும்..!

உறக்கம் கலையட்டும்..!

ஒருபுறம் வளரும் பொருளாதாரங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்று மேலைநாடுகள் ஏளனம் செய்கின்றன. இன்னொருபுறம், இந்த வளரும் பொருளாதாரங்களில் ஊழலை அதிகப்படுத்துவதுடன், ஊழல் மூலம் உருவாகும் கறுப்புப் பணத்தைத் தங்களது வளர்ச்சிக்கு எடுத்துச் செல்கின்றன. ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் கறுப்புப் பணத்தை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பவர்கள், வளரும் பொருளாதாரங்களில் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளின் கூட்டமைப்பு, 2006-ம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. சுவிஸ் வங்கிகளில் மிக அதிகமாக ரகசியப் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருக்கும் நாடுகள் என்று இந்தியா, ரஷியா, இங்கிலாந்து, உக்ரைன் மற்றும் சீனாவைப் பட்டியல் இடுகிறது அந்த அறிக்கை. அதில் 1,456 பில்லியன் டாலர்களுடன் (அதாவது, 55 லட்சம் கோடி ரூபாய்!) முதலிடத்தில் இருப்பது நமது இந்தியாதான். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுகிறோமோ இல்லையோ, இந்த விஷயத்தில் நமக்குத்தான் தங்கப் பதக்கம்!

உலக நாடுகளின் கறுப்புப் பணத்தை எல்லாம் சேர்த்தாலும்கூட, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணம்தான் அதிகம் என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். இந்தப் பணம் கணக்கில் வராத, முறையான வகையில் சம்பாதிக்கப்படாத லஞ்சப் பணமாகத்தான் இருக்கும் என்பதையும் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்கு இந்தியாவின் சொத்து சூறையாடப்பட்டு வெளியேறி இருக்கிறது என்று அர்த்தம்.

கறுப்புப் பணம் உள்நாட்டிலேயே புழங்கும்போது, விலைவாசி உயரும் அபாயம் இருக்கிறது என்றாலும், பொருளாதாரம் சுறுசுறுப்பாகச் செயல்படும் என்பதுதான் நிபுணர்களின் கருத்து. அதேநேரத்தில், இந்தியாவின் செல்வம் அயல்நாடுகளுக்குக் கடத்தப்படும்போது நமது பொருளாதார முன்னேற்றத்தில் நிச்சயமாக பாதிப்பு இருக்கும்.

இன்னொரு ஆராய்ச்சிக் குறிப்பின் தகவல்படி உலகளாவிய கோடீஸ்வரர்களின் சொந்த சொத்தான கறுப்புப் பணம் சுமார் 11.5 ட்ரில்லியன் டாலர்களாம். அதாவது, 100 கோடி என்பது ஒரு பில்லியன். 1000 பில்லியன் ஒரு ட்ரில்லியன். கணக்குப் போட்டுப் பார்த்தால் நமக்குத் தலைசுற்றுகிறது. இத்தனை பணமும், உலகிலுள்ள 70 "வரி ஏய்ப்பவர்களின் சொர்க்கங்கள்' என்று அழைக்கப்படும் நாடுகளில் உள்ள ரகசிய வங்கிகளில் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வங்கிகள் இந்தப் பணத்தை வளர்ச்சி அடைந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடனாகக் கொடுக்கின்றன. இந்த வங்கிகளில் முதலீடு செய்பவருக்குத் தங்கள் கறுப்புப் பணத்திற்குக் குறைந்த வட்டி கிடைத்தால் போதும். தங்களது பெயர் வெளியில் தெரியக்கூடாது என்று பணம் போடுபவர்கள் விரும்புவதுபோல, பணம் எங்கே டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதும் ரகசியமாக வைக்கப்படுகிறது. இடைத்தரகர் மாயமாகி விட்டால், போட்டு வைத்த முதலும் "அம்போ'தான்.

1970-களில் பின்தங்கிய மற்றும் வளரும் பொருளாதாரங்களிலிருந்து இந்தக் கறுப்புப் பண வங்கிகள் மூலம் வளர்ச்சி அடைந்த பொருளாதார வல்லரசுகளுக்குக் கைமாறிய பணம் மட்டும் சுமார் 5 ட்ரில்லியன் டாலர்கள் என்கிறது இன்னொரு அறிக்கை. உலகின் 1 சதவீத மக்கள் மொத்த உலகப் பொருளாதாரத்தின் 57 சதவீதத்துக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

இப்படி, மற்ற நாடுகளின் கறுப்புப் பணத்துக்குப் பாதுகாப்பு அளிக்க இன்னொரு நாடு முன்வருவது என்பது எப்படி ஐக்கிய நாடுகள் சபையால் அனுமதிக்கப்படுகிறது என்று இதுவரை எந்த நாடும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு நாட்டின் அதிபரும் தங்களது கறுப்புப் பணத்தை இதுபோல வெளிநாடுகளில் வைத்திருப்பதுதான்.

இன்னொரு விஷயம். இந்தக் கறுப்புப் பணத்தைக் கையாளும் வங்கிகளும், அதன் முகவர்களும், திருட்டுப் பொருளை வாங்கி விற்பவர்கள் போன்ற சமூக விரோதிகள். படித்தவர்கள், கோட்டும் சூட்டும் அணிந்து ஆங்கிலம் பேசுபவர்கள் என்பதால் அவர்கள் யோக்கியமானவர்கள் ஆகிவிட மாட்டார்கள். யாரும் கேள்வி கேட்க முடியாத, கணக்கு வழக்கு இல்லாத பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கையாளும் இவர்கள் தீவிரவாதிகளுக்கும், சர்வதேச ஆயுதக் கடத்தல்காரர்களுக்கும் உதவவில்லை என்பது என்ன நிச்சயம்?

உலகம் விழித்துக் கொள்ள வேண்டிய வேளை வந்துவிட்டது!

Source : www.dinamani.com - Thursday October 16 2008 00:00 IST

No comments: