நல்லதை நாடு கேட்கும்
அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புக்கு புகையிலைப் பழக்கம் ஒரு முக்கியமான காரணம் என்பது உலகறிந்த உண்மை. அதிலும் புகை பிடிக்கும் பழக்கத்தால் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 12 கோடி பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பொதுஇடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருப்பதை வரவேற்காமல் இருக்க முடியாது. ஏற்கெனவே தில்லி, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, கேரளம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தத் தடை இருந்து வருகிறது. அதேபோல ரயில்களில் புகை பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 9 லட்சம் பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களால் மரணமடைகிறார்கள் என்பதும், புகைபழக்கம்தான் ஆண்களில் ஐந்து பேர்களில் ஒருவர் மரணமடையக் காரணமாக இருக்கிறது என்பதும் அதிர்ச்சி தரும் தகவல்கள். புகைபிடிப்பதை முழுமையாக ஒழித்துவிட முடியாது என்றாலும், புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், புதிதாகப் புகை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை எச்சரிப்பதற்கும் இதுபோன்ற சட்டங்கள் நிச்சயம் உதவும்.
புகை பிடிப்பவர்களால் அவர்களது உயிருக்கு மட்டுமல்லாமல், புகை பிடிக்காத மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் கண்டனத்துக்குரிய விஷயம். பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் வெளியேற்றும் புகை சுற்றியிருக்கும் மற்றவர்களைப் பாதிக்கிறது என்பதுடன் பல தொற்றுநோய்கள் பரவவும் காரணமாக அமைகிறது. புகை பிடிப்பது தங்களது தனிமனித சுதந்திரம் என்று கூறுபவர்கள், சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் மற்றவர்களின் சுதந்திரத்தைப் பற்றியும் கவலைப்பட்டாக வேண்டும்.
வளர்ச்சி பெற்ற நாடுகளில் புகை பிடிப்பவர்களுக்கென்று விடுதிகளில் தனி அறைகள் ஒதுக்கப்படுகின்றன. பொது இடங்களில்கூட தனியாக இடம் ஒதுக்கி அங்கே புகை அகற்றும் கருவிகள் பொருத்தப்படுகின்றன. மற்றவர்கள் புகைப்பதால் நல்ல காற்றைச் சுவாசிக்கும் தனது சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்கிற வாதம் மேலை நாட்டு அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் புகை பிடித்தால் எச்சரிக்கை ஒலியை எழுப்பும் கருவி ஒவ்வோர் அறையிலும் பொருத்தப்பட்டு அதை மீறி புகைபிடித்தால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
ஹாங்காங், அயர்லாந்து, தாய்லாந்து, கனடா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, எகிப்து, ஸ்காட்லாந்து, பனாமா போன்ற நாடுகளில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே, புகை பிடிப்பதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளை விளக்கும் அறிவிப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதுபோன்ற சட்டங்களால் புகைபிடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல். துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் திறந்தவெளி அல்லாத இடங்கள் அனைத்திலும் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஒரே வருடத்தில் புகை பிடிப்பது கணிசமாகக் குறைந்திருப்பதை சிகரெட் விற்பனை காட்டுகிறது. விற்பனையில் சுமார் 52 கோடி சிகரெட்டுகள் குறைந்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சிகரெட் தயாரிப்பவர்கள் மத்திய அரசின் சட்டத்தைத் தடை செய்ய பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அவர்களது தூண்டுதலின் பேரில் உணவு விடுதி நடத்துபவர்கள் அரசின் சட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டில் இதேபோன்ற வழக்கு ஒன்றில், "ஒவ்வொரு மனிதனின் உயிருக்கும் உத்தரவாதம் அளிப்பது என்று கூறும்போது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தந்தாக வேண்டும். அதனால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று இதேபோன்ற வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
உணவு விடுதிக்காரர்கள் கூறுவதுபோல, இந்தத் தடை அவர்களது வியாபாரத்தைப் பாதிக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமன்று. சொல்லப்போனால், மற்றவர்கள் ஊதித் தள்ளும் புகையைச் சுவாசித்து தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள விரும்பாத பலர், இந்தத் தடைக்குப் பிறகு உணவு விடுதிகளுக்குச் செல்வது அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
மக்கள் நல்வாழ்வில் அக்கறை செலுத்துவதுதான் ஒரு நல்லாட்சிக்கு அடையாளம். அந்தவகையில் நல்லதொரு சட்டம் இது. முறையாகவும் கடுமையாகவும் அமல்படுத்தியே தீரவேண்டிய சட்டம். பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் அரசுக்கு ஒத்துழைப்பையும் தருவது நம் அனைவரது கடமை.
Source : www.dinamani.com - 04.10.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment