I LOVE TAMIL


Thursday, October 2, 2008

சூரிய சக்திக்கு மாறும் ரயில்வே

சூரிய சக்திக்கு மாறும் ரயில்வே

புது தில்லி, அக். 1: ரயில்வே அலுவலகங்கள் சூரிய சக்திக்கு மாறும் வகையில் புதிய செயல் திட்டத்தை அத்துறை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, ரயில்வே மண்டல அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் ரயில்வே அமைச்சக தலைமையகத்தில் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அந்த அலுவலகங்களின் பெரும்பாலான பகுதிகள் சூரிய சக்தியால் ஒளிருவதாகவும், வெகுவிரைவில் புதிதாக 44 வட்டார ரயில்வே அலுவலகங்களும் சூரிய சக்திக்கு மாறும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இவைத் தவிர ரயில்வே மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது சில ரயில்வே கிராசிங்கிலும் சூரிய சக்தி பயன்படுத்தப்படுவதாகவும், இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சகம் சார்பில் ரூ.60 கோடி செலவில் கன்னியாகுமரியில் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. 14 மைல் வேகத்தில் வீசும் காற்றை மின்சாரமாக மாற்ற முடியும் என்றும், ஒரு காற்றாலை விசிறி மூலம் 300 வீடுகளில் விளக்கேற்ற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரயில்வே துறை, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி செலவாகிறது. இந்த செலவை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தை தடுக்கவும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே துவங்கியுள்ளது.

இதற்காக பல்வேறு திட்டங்களில் ரூ.28 கோடியை ரயில்வே அமைச்சகம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 440 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source : www.dinamani.com - 02.10.2008

No comments: