பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பீடித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது.
பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்றுதான் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர, புகை பிடிக்கவே கூடாது என்று சட்டம் சொல்லவில்லை. மேலும், பொது இடங்கள் என்று அரசினால் பட்டியலிடப்படும் இடங்களில் சிகரெட் புகைப்போர்தான் அதிகம். பீடி புகைப்போர் எண்ணிக்கை, குறிப்பாக தமிழகத்தில், மிகவும் குறைவு. ஆகவே அரசின் புதிய சட்டம், பீடித் தொழிலாளர்களுக்கு பெரிய பாதிப்பாக அமையும் என்று சொல்ல இயலாது.
இத்தனை ஆண்டுகளாக பீடித் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய தடையே சிகரெட் உற்பத்தியாளர்கள்தான். அரசு நிர்ணயிக்கும் அளவைக் காட்டிலும், ஒரு சென்டிமீட்டர் குறைவான உயரத்தில் சிகரெட்டுகளை சந்தைக்குள் நுழைத்து, விலையையும் குறைத்து, பீடிச் சந்தையை கைப்பற்ற முயன்றவர்கள் சிகரெட் உற்பத்தியாளர்கள். இந்தச் சட்டம் எந்தவொரு காரணத்தாலும் திரும்பப் பெறப்படுமானால், அதனால் மேலதிகமாக மீண்டும் பயன்பெறப் போவது சிகரெட் உற்பத்தியாளர்களே தவிர, பீடி உற்பத்தியாளர்கள் அல்ல. பிறகு எதற்காக இந்தப் போராட்டம் என்று வியப்பாக இருக்கிறது.
புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் நோய்க்கு ஆளாகி இறக்கிறார்கள். காசநோய், ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணமே இந்த புகைப்பிடிக்கும் வழக்கம்தான். மற்றவரது புகையை சுவாசிக்க நேர்வதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் அதிகம். இந்த உண்மைகள் தெரிந்திருந்தும், இந்த சட்டத்தைத் திரும்பப் பெறச் சொல்லி போராட்டம் நடத்துவது பொதுநன்மைக்கு எதிராக அமைந்துவிடும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அயல்நாடுகளில் பொதுஇடங்களில் புகை பிடிக்கத் தடை விதித்தபோது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தற்போதும் தெரிவித்துக்கொண்டிருப்பவர்கள் யார் என்றால் சிற்றுண்டிச்சாலைகள், ஓட்டல்கள் போன்ற நிறுவனங்கள்தான்.
பொது இடத்தில் புகைபிடிக்க தடை காரணமாக உணவு அருந்தவும், குடிக்கவும் வெளியே வெளியே வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றும், இதனால் உணவுக்கூடத்தின், ஓட்டலின் வியாபாரம் குறைந்துவிட்டது என்றும் தங்கள் இழப்பை பட்டியலிட்டு, இதனால் ஆட்குறைப்பு செய்து பலர் வேலை இழந்துள்ளார்கள் என்றெல்லாம் முறையிடுகின்றன. இந்தச் சட்டத்தால் பொதுமக்களின் ஆயுள் கூடிவிடும், பின்னர் பொதுசுகாதாரத் துறையின் செலவு மேலும் அதிகரிக்கும் என்று ""அறிவுப்பூர்வமான'' வாதங்களை முன்வைக்கவும் தவறுவதில்லை.
மேலும், இத்தகைய சட்டங்களால், அந்நாடுகளில் புகைப்பிடிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்ற உண்மை தரும் மகிழ்ச்சிக்கு இவர்கள் சொல்லும் வர்த்தக இழப்புகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. புகைப்பிடிப்போரிடத்திலும்கூட, அவர்களது அன்றாட சிகரெட் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சொல்லப்படும் புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. அதேபோன்ற நிலைமை இந்தியாவிலும் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இத்தகைய சூழலில், இந்தியாவிலும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை கொண்டு வந்திருப்பதை வரவேற்க வேண்டிய வேளையில், வரவேற்பது மட்டுமின்றி இச்சட்டத்தை உயிர்ப்புடன் நடைமுறைப்படுத்தவும், புகைப்பிடிப்போர் பான்பராக் போன்ற புகையிலைக்கு மாறுவதைத் தடுக்கவும் புதிய வழிமுறை காண வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய நேரத்தில், சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருவது முறையா? அதிலும் பீடித் தொழிலாளர்களுக்கு எந்த ஆதாயமும் இதனால் கிடைக்காது என்ற நிலையில், எதிர்ப்பது சரியா?
Source: www.dinamani.com - 15.10.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment