கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள், அமைப்புகள், இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம். மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது. இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால், ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான். அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது. ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது, சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது; பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால், அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது. உலக நாடுகள் அனைத்தையும், ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் - கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும், வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால், அவற்றோடு சேர்ந்து பூமிக்கும், கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது. இவை - நிலக்கரியும், பெட்ரோலியப் பொருள்களும் - சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம், காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது. இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் பெருக்கின. இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின. கூடவே, காடுகள் அழிக்கப்பட்டதும், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும், அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும், பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன. உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று, நீர், அனைத்தும் மாசுபட்டன; மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின. வளர்ச்சியும், முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால், சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும், அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது. பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து, மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது. பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின. இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால், மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை எழுந்தது. ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது. இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. இதையடுத்து ஐ.நா. முயற்சியில் 1989, 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள், கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் உருவாக்கப்பட்டன. ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும், 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன. தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது. இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா. 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா. கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது. புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும், இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்; வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால், அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது; என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது. இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன. இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன. இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து - இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் - வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த 1992-ன் ஐ.நா. கோட்பாடு, உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும், இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது. இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா. எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.எனினும், இந்த ஐ.நா. கோட்பாடு அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்கும், மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும், உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக, சிறு தீவு நாடுகள்; தாழ்நிலைக் கடலோர நாடுகள்; சதுப்பு நிலம், காடுகள் நிறைந்த நாடுகள்; இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்; வறட்சி - பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்; நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்; எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்; எரிபொருள்களை (நிலக்கரி, எண்ணெய்) எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள், சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது; வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா. கோட்பாட்டுக்கு, வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது. ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும், 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது. 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் (கரியமில வாயு) வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது. 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே, புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ உடன்பாட்டின் மையக் கோட்பாடு. இதுவே பொதுவான - ஆனால் பாகுபடுத்தப்பட்ட - பொறுப்புகள் என்று அறியப்பட்டது. இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி, இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது. இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும், வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து, கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும், கோபன்ஹேகனில் குழுமி, ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு, "பூமண்டலம் காப்போம்; புவிவெப்பம் தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று, ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது. ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ, சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க மறுத்தார்.தனிநபர் சராசரிக் கணக்கில், இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா, தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல், வளரும் நாடுகள் - குறிப்பாக சீனாவும் இந்தியாவும் - கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது; அது மட்டுமல்ல, வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.வளரும் நாடுகள் ஜி - 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.சர்வதேச நிதி நெருக்கடியின்போது, வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது. கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில், அமெரிக்காவையும், வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன; இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது. கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது, 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே, கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள். இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள (கரியமில வாயு குறைப்புக்கான) பொறுப்பு என்பது, வளரும் நாடுகளான இந்தியா - சீனாவோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் - ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல். கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக, சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 - 2012-ல் 3000 கோடி டாலரும், 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!
நன்றி: www.dinamani.com - 23.12.2009